தலையங்கம்

புல்டோசர் (அ)நீதி! பாஜகவின் புல்டோசர் அணுகுமுறை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2020 ஜூலை 3-ஆம் தேதி கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபேயை கைது செய்ய உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் அருகே பிக்ரு கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். 

காவல்துறையினரிடையேயும், மக்களிடையேயும் கடும் கொந்தளிப்பும் ஆத்திரமும் எழுந்தன. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின்பேரில், விகாஸ் துபேயின் அரண்மனை போன்ற வீடு அடுத்த நாள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அவருக்குச் சொந்தமான ரூ.67 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இப்படி தொடங்கிய புல்டோசர் இயக்கம் அடுத்த பல மாதங்களில் நில அபகரிப்பாளர்கள், ரெள்டிகள் போன்ற பலரது வீடுகளைப் பதம்பார்த்தது. சிறையில் இருக்கும் பல மாஃபியாக்களின் அபகரிப்பு சொத்துகள் புல்டோசர் மூலம் மீட்கப்பட்டன. இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கட்டடங்களின் விடியோ, புகைப்படங்களை மாநில அரசு மகிழ்ச்சியுடன் வெளியிட்டது.

பிரதாப்கர் என்ற பகுதியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு ஒருவர் தலைமறைவானார். அவரது வீட்டின் முன் புல்டோசரைக் கொண்டுபோய் நிறுத்தினர் காவல்துறையினர். 24 மணி நேரத்துக்குள் அவர் சரணடைந்தார். புல்டோசர் பரிசோதனை உடனடி வெற்றியைத் தந்தது என்றும், பொதுமக்களின் இதயங்களையும் மனங்களையும் வென்றது என்றும் குறிப்பிடுகிறார் அம்மாநில முன்னாள் காவல்துறை தலைவர் விக்ரம் சிங்.

இது கடந்த பிப்ரவரி - மார்ச்சில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது. "விரைவுச் சாலைகளையும், நெடுஞ்சாலைகளையும் அமைக்க நம்மிடம் ஓர் இயந்திரம் (புல்டோசர்) உள்ளது. அதே நேரம், மக்களைச் சுரண்டி சொத்துகளைக் குவித்த மாஃபியா கும்பலை நசுக்கவும் அதைப் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், ரூ.1,848 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்று ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார். 

புல்டோசர் குறித்து யோகி ஆதித்யநாத் 58 இடங்களில் பேசியதாகவும், அந்த இடங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றது என்றும் ஒரு செய்தி தெரிவிக்கிறது. "புல்டோசர் பாபா' என்று அவரது ஆதரவாளர்களால் யோகி ஆதித்யநாத் அழைக்கப்பட்டதுடன், அவர் சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு புல்டோசர் பொம்மை நினைவுப் பரிசாகவும் அளிக்கப்பட்டது.

புல்டோசர் கலாசாரம் உத்தர பிரதேசத்துடன் நிற்கவில்லை. மத்திய பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தின்போது கர்கோன் நகரில் கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் உத்தரவின்பேரில்,  கல்வீச்சுக்குக் காரணமானவர்கள் என்று கருதப்பட்டவர்களின் 16 வீடுகள், 29 கடைகள் புல்டோசரால் தரைமட்டமாக்கப்பட்டன.

தில்லி ஜஹாங்கீர்புரியில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற்ற ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்த நாளே தில்லி மாநகராட்சி அதிகாரிகள் "ஆக்கிரமிப்புகளை' அகற்ற புல்டோசர்களைப் பயன்படுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் களம் இறங்கினார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததால் புல்டோசர் இயக்கம் நிறுத்தப்பட்டது.

அதுவரையில் புல்டோசர் அணுகுமுறை தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறவில்லை. பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து இஸ்லாமியர்கள் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் (அலகாபாத்) அந்தப் போராட்டத்தை தூண்டியதாக கருதப்பட்ட ஜாவேத் அகமதின் வீடு இடிக்கப்பட்டவுடன்தான் "புல்டோசர்' அணுகுமுறை தேசிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. "அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களும் இந்த சமூகத்தின் ஓர் அங்கம். தங்கள் வாதங்களைத் தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்' என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, விக்ரம் நாத் அடங்கிய அமர்வு தெரிவித்தது.

ஏற்கெனவே, ஓல்கா டெல்லிஸ் (எதிர்) பாம்பே முனிசிபல் கார்ப்பரேஷன் (1985) வழக்கில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் முன்னர், நோட்டீஸ் வழங்கி, அவர்களது வாதத்தையும் கேட்க வேண்டும் என்றும், அரசுத் திட்டங்களின்கீழ் அவர்கள் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம்  தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

நில அபகரிப்பாளர்களுக்கும், ரெளடிகளுக்கும், கலவரத்தைத் தூண்டுபவர்களுக்கும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சர்வாதிகாரத்தின் அடிப்படையிலான கம்யூனிஸ நாடுகளில் வேண்டுமானால், இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அது மறைக்கப்படலாம். ஜனநாயக நாட்டில் அது உரிய சட்ட நடவடிக்கைகளின்படி மட்டுமே அமைய வேண்டும்.

மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதற்காக உடனடி "புல்டோசர் நீதி' என்பது நமது நாட்டுக்குப் பொருந்தாது, ஏற்புடையதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT