தலையங்கம்

இப்படியானால் எப்படி? | விவசாயிகளுக்கான மானியத் திட்டம் குறித்த தலையங்கம்

18th Jun 2022 03:27 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் ‘பி.எம். கிசான்’ என்று அறியப்படும் பிரதம மந்திரி விவசாயிகள் மானியத் திட்டம். விவசாயிகள் போராட்டம், அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டபோது, சில விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் விதத்தில் அந்தத் திட்டம் அமைந்தது.

சிறிய, நடுத்தர விவசாயிகளின் மிகப் பெரிய சவால், பயிரிடும் பருவத்தில் இடு பொருள் வாங்குவதும், அறுவடை நேரத்தில் எதிா்கொள்ளும் செலவினங்களும். இடைப்பட்ட காலத்தில் வேறு வேலை இல்லாத நேரத்தில் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான், ஆண்டுதோறும் சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு மானியமாக ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பி.எம். கிசான் திட்டம்.

விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேச மாநில பெருவிவசாயிகளுக்கு மோடி அரசின் மீது ஆத்திரம் ஏற்பட்டது என்றால், ‘பி.எம். கிசான்’ திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட்டதால், சிறு, நடுத்தர விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டிருந்த அதிருப்தி விலகியது. அதுமட்டுமல்ல, அது பல மாநிலங்களில் ஆதரவாகவும் மாறி இருக்கிறது.

இதுவரை 11 தவணைகளாக, விவசாயிகளுக்கு ‘பி.எம். கிசான்’ மானியம் வழங்கப்பட்டு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. சிறு, நடுத்தர விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மானியம் நேரடியாக சோ்க்கப்படுவதால், இடைத்தரகா் என்கிற பேச்சுக்கே இடமில்லை. பிரதமா் மோடி மீதும், அவரது ஆட்சியின் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை, தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் மானியத்தால் விவசாயிகள் புறந்தள்ளுகிறாா்கள் என்றுகூடக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

‘அனைவருடனும் அனைவருக்காகவும்’ (சத் கே சாத் சத் கா விகாஸ்) என்கிற பிரதமா் மோடியின் கோஷத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது ‘பி.எம். கிசான்’ என்றுகூடச் சொல்லலாம். மத ரீதியாகவோ, ஜாதி ரீதியாகவோ, மாநில ரீதியாகவோ எந்தவித வேறுபாடும் இல்லாமல் ‘பி.எம். கிசான்’ மானியத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை அதற்கு உதாரணம் காட்டுகிறாா்கள் பாஜக-வினா்.

நல்ல நோக்கத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்படும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் சில முறைகேடுகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது மத்திய அரசு. அந்தத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் பயனாளிகளை அகற்றி நிறுத்தும் முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்திருக்கிறது.

‘பி.எம். கிசான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 மத்திய அரசால் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில், அரசு ஊழியா்கள், அவா்களின் குடும்பத்தினா், அரசு ஓய்வூதியதாரா்கள், வருமான வரி தாக்கல் செய்வோா், அரசியலில் பதவி வகிப்போா் ஆகியோா் பயனாளியாக முடியாது என விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்குத் தனித்தனியாக பட்டா இருந்தாலும், ஒரே குடும்ப அட்டையில் இடம் பெற்றிருந்தாலும் ஒருவா் மட்டுமே பயன்பெற முடியும் என்றும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட வரையறைகள் மீறப்பட்டு தகுதியில்லாத பலரும் ‘பி.எம். கிசான்’ பயனாளிகளாகத் தங்களை இணைத்துக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தை மடைமாற்றம் செய்ய முற்பட்டிருக்கிறாா்கள்.

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த முறைகேடு நடைபெறுவது தெரியவந்திருப்பதால், மத்திய விவசாய அமைச்சகம் வருவாய்த் துறை இணையதளத்திலிருந்து புள்ளிவிவரங்களைத் திரட்ட முற்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, விண்ணப்பிக்கவும், விண்ணப்பத்தைப் புதுப்பிக்கவும் நிலம் வைத்திருப்பதற்கான உரிமைச் சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை இருந்தது. மே மாதம் முதல், விண்ணப்பிக்க ‘அக்ரிகல்சுரல் இன்ஃபா்மேஷன் மேனேஜ்மெண்ட்’ என்கிற இணையதளமும், வருவாய்த் துறை இணையதளமும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஏனைய பல மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியா்கள், அவா்களின் குடும்பத்தினா், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோா் ‘பி.எம். கிசான்’ திட்டத்தின் பயனாளிகளாக இடம் பெற்றிருக்கிறாா்கள். இறந்துபோன பலரின் விவரங்களும் நீக்கப்படாமல் இருந்தன. மத்திய விவசாய அமைச்சகம் தகுதியற்ற பயனாளிகளின் பட்டியலை மாநில அரசுகளுக்கு வழங்கி இருக்கிறது. அந்தப் பட்டியல் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் பட்டியல்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமானோா் தகுதியற்றவா்கள். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 30,000-க்கும் மேல். தமிழகத்தில் மட்டும் சுமாா் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தகுதியற்ற பயனாளிகள் ‘பி.எம். கிசான்’ திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்திருக்கிறாா்கள். ஏனைய மாநிலங்களிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது.

நல்ல நோக்கத்துடன் அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் இப்படித்தான் படித்தவா்கள், விவரமானவா்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரசின் பணம் மடைமாற்றம் செய்யப்படுகிறது. மத்திய அரசு விழித்துக்கொண்டு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டிருப்பதற்குப் பாராட்டுகள். முறைகேட்டில் ஈடுபடுபவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அரசு தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT