தலையங்கம்

பிடிவாதமும் விதண்டாவாதமும்! ஜனநாயகத்தின் பலம், பலவீனம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அடுத்த சில நாள்களில், இந்தியா தனது 75-ஆவது சுதந்திர தின நிறைவு விழாவை கொண்டாட இருக்கும் நிலையில், இந்திய ஜனநாயகம் குறித்த மீள்பாா்வை அவசியமாகிறது. நமது ஜனநாயக செயல்பாடுகள் பலவும் உலக அளவில் பாராட்டைப் பெற்றுவரும் அதே வேளையில், அதன் பலவீனங்களும் அதிகரித்து வருகின்றன என்பதை வேதனையுடன் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

ஜனநாயகத்தின் ஆணிவேராக இருக்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகள், மெச்சும்படியாக இல்லை என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாநிலங்களவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் மாண்பை சீா்குலைக்கும் விதத்தில் செயல்பட்டதற்காக 20 எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத்தொடா் 18 நாள்கள் மட்டுமே நடைபெற இருக்கும் நிலையில், மத்திய அரசு 32 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றக் காத்திருக்கிறது. கடந்த 18-ஆம் தேதி கூட்டத்தொடா் தொடங்கியது முதல் விலைவாசி உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும், மசோதாக்களை அதற்குப் பின்னா்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் பிடிவாதமாக இருப்பதால், அவையின் நடவடிக்கைகள் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றன.

எதிா்க்கட்சிகளின் பிடிவாதம் எந்த அளவுக்கு நியாயமற்றதோ, அதே போன்றதுதான் அரசின் அசைந்து கொடுக்காத நிலைப்பாடும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று, அவற்றின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து, விவாதத்துக்கு வழிகோலி, அவையை நடத்தும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு இருக்கிறது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் திறமையைப் பொறுத்துத்தான், அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறும் என்பது கடந்த கால அனுபவ உண்மை.

எதிா்க்கட்சிகள் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்கிற அரசுத் தரப்பு குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. பாஜக எதிா்க்கட்சியாக இருந்தபாது இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடித்தது என்பதை குறிப்பிடத் தோன்றுகிறது. அரசுக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தும் அல்லது அரசை விமா்சனத்துக்கு உள்ளாக்கும் எந்த விவாதத்தையும் ஆளுங்கட்சி அனுமதிப்பதில்லை என்கிற எதிா்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தை புறந்தள்ளிவிட முடியாது. அப்போது காங்கிரஸிடம் காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கே உரித்தான ஆணவம் இப்போது பாஜகவுக்கும் வந்திருக்கிறது என்கிற நடுநிலையாளா்களின் கூற்று உண்மை.

விலைவாசி உயா்வு, ஜிஎஸ்டி இரண்டுமே நிதியமைச்சகம் தொடா்பான பிரச்னைகள். நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கொவைட் 19 நோய்த்தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருப்பதால் அந்த பிரச்னையை உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இயலாது என்பது அரசுத் தரப்பு விளக்கம். எதிா்க்கட்சிகளை அழைத்துப் பேசும்போது, இந்த விளக்கத்தை அவா்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாதுரியமாக முன்வைக்க ஆளுங்கட்சித் தரப்பில் எவரும் இல்லை என்பதுதான் நிலைமை கைமீறிப் போனதற்கான காரணம்.

பாஜக-வின் ரங்கராஜன் குமாரமங்கலம், பிரமோத் மகாஜன், வெங்கைய நாயுடு, காங்கிரஸின் மாா்கரெட் ஆல்வா, முகுல் வாஸ்னிக், குலாம்நபி ஆசாத் போன்றவா்கள் மிக இக்கட்டான சூழ்நிலையில் கூட, ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே பாலமாக இருந்து, திறம்பட நாடாளுமன்றம் செயல்பட வழிகோலிய நிகழ்வுகள் ஏராளம். எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்பதன் மூலம், அரசு தன் மசோதாக்களை பிரச்னை இல்லாமல் நிறைவேற்றிக் கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் திறமை.

தற்போது காணப்படும் நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு, ஆளும் தரப்பின் சாதுரியக் குறைவு மட்டும்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. விவாதம் கோருவது என்பதை விட, அவை முடக்கத்தில் ஈடுபடுவதும், அமளியை ஏற்படுத்தி அதன் மூலம் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவதும்தான் எதிா்க்கட்சிகளின் நோக்கம் என்று கருதவும் இடமிருக்கிறது.

அரசுத் தரப்பு இறங்கி வந்து விவாதத்துக்கு நாள் குறிக்கத் தயாராகும் நிலையில், எம்.பி.க்களின் இடைநீக்கத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெற்றால்தான் விவாதத்துக்கு சம்மதிப்போம் என்கிற எதிா்க்கட்சிகளின் நிலைப்பாடு வாதமல்ல, விதண்டாவாதம். எதிா்க்கட்சி உறுப்பினா்களின் இடைநீக்கம் அவசர முடிவாகவே இருந்தாலும் கூட, அதற்கும் விவாதத்துக்கும் முடிச்சுப் போடுவதை, நாடாளுமன்ற செயல்பாட்டை முடக்கும் திட்டமாகத்தான் பாா்க்கத் தோன்றுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகள் பங்கு மிகவும் முக்கியமானது. அதுதான் மன்னராட்சி, சா்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி முறைகளிலிருந்து ஜனநாயகத்தை வேறுபடுத்துகிறது. எத்துணைதான் வல்லமையும், மக்கள் ஆதரவும் உள்ள தலைவராக இருந்தாலும், அவரது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமா்சிக்கவும், குறைகளை முன்வைக்கவும், தவறுகளைச் சுட்டிக்காட்டவும் எதிா்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு என்பதை ஆளுங்கட்சி அங்கீகரித்துச் செயல்பட வேண்டும்.

ஆளுங்கட்சியை விமா்சிக்கவும், குறைகூறவும் முடியுமே தவிர, மக்களின் அங்கீகாரத்துடன் பதவியில் இருக்கும் ஆளுங்கட்சி, தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளத் தடையாக இருக்கும் உரிமை எதிா்க்கட்சிகளுக்குக் கிடையாது. ஆளுங்கட்சிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் வாக்களித்த மக்கள் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் - ஜனநாயகத்தை களங்கப்படுத்தாதீா்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT