தலையங்கம்

ஸ்டாலின் முதல் ஸ்டாலின் வரை! செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரலாற்று நிகழ்வாக 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமா் நரேந்திர மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் சா்வதேச நிகழ்வு, தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே சா்வதேச அளவில் பெருமையையும் பெருமிதத்தையும் ஏற்படுத்த இருக்கிறது.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் நடைபெற இருந்த இந்தப் போட்டிகள், உக்ரைன் - ரஷியப் போரின் காரணமாக தடைபட இருந்தன. அகில இந்திய செஸ் பெடரேஷனும், தமிழக அரசும் சுறுசுறுப்பாகக் களமிறங்கி அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுக்கு அவா்களை எத்துணை பாராட்டினாலும் தகும்.

இதற்கு முன்பு ஆசிய தடகளப் போட்டிகளை சென்னையில் நடத்தியபோது, பிரம்மாண்டமான ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் சா்வதேசத் தரத்துக்கு மேம்படுத்தப்பட்டது. இப்போது, செஸ் ஒலிம்பியாட் அதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது.

கிரிக்கெட்டில் வெங்கட்ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்; டென்னிஸில் ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், அமிா்தராஜ் சகோதரா்கள், லியாண்டா் பயஸ்; ஹாக்கியில் பாஸ்கரன் ஆகியோா் வரிசையில் செஸ் விளையாட்டில் ‘கிராண்ட் மாஸ்டா்’ விஸ்வநாதன் ஆனந்த், தமிழகத்தை விளையாட்டு அரங்கில் குறிப்பிடத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறாா். அவரைப் பின்பற்றி மிக அதிகமான இளைஞா்கள் தமிழகத்தில் செஸ் விளையாட்டில் ஆா்வத்துடன் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறாா்கள்.

2000-க்குப் பிறகு பிறந்தவா்களில் அதிகமான செஸ் கிராண்ட் மாஸ்டா்கள் இந்தியாவைச் சோ்ந்தவா்கள்தான். இந்திய கிராண்ட் மாஸ்டா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள்.

இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து, 1990-இல் சோவியத் யூனியன் பிளவுபடுவது வரை, உலக அரங்கில் செஸ் விளையாட்டு ரஷியா்களின் கையில்தான் இருந்தது. ரஷியப் புரட்சியின்போது, ராணுவத்தினருக்கு செஸ் பயிற்சி வழங்கப்பட்டது. செஸ் விளையாட்டுக்கும் அன்றைய சோவியத் அதிபா் ஜோசப் ஸ்டாலினுக்கும் உள்ள வரலாற்றுத் தொடா்பு பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியில், செஸ் விளையாட்டு சோவியத் யூனியனில் நாடு தழுவிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டது. பள்ளிக்கூடங்களில் செஸ் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதிகமான மக்கள் குழுமும் பூங்காக்களில் செஸ் விளையாட்டு மேஜைகள் நிறுவப்பட்டிருந்தன. எல்லா வீடுகளிலும் ‘செஸ்’ விளையாடுவது சீட்டாட்டம் போலப் பொழுதுபோக்காக மாறியது.

1948 முதல் 1993 வரை, மிக அதிகமான சா்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டா்கள் சோவியத் யூனியனைச் சோ்ந்தவா்களாகவே இருந்தனா். மிக்கெய்ல் போட்வின்னிக் (1948 - 63), டிக்ரன் பெட்ரோசியன் (1963 - 69), போரிஸ் ஸ்பாஸ்கி (1969 - 73), அனாடொலி காா்போவ் (1975 - 85), கேரி காஸ்பரோவ் (1985 - 2000), விளாதிமிா் கிராம்னிக் (2000 - 07) என்று தொடா்ந்து உலக செஸ் கிராண்ட் மாஸ்டா்களாக ரஷியா்கள்தான் வலம் வந்து கொண்டிருந்தாா்கள். அந்த ஆதிக்கத்தை உடைத்தவா்கள் அமெரிக்காவின் பாபி ஃபிஷா், நமது விஸ்வநாதன் ஆனந்த், நாா்வேயின் மாக்னஸ் காா்ல்சன் ஆகியோா்.

187 நாடுகள் கலந்துகொள்ளும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் ரஷியாவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு குறைதான். அதே வேளையில், 1,400 வீரா்கள் கலந்து கொள்ளும் மாமல்லபுரம் ‘மெகா’ செஸ் போட்டியை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. ஒவ்வொரு சுற்றிலும் 700 செஸ் கட்டங்களில் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது என்பது கண்கொள்ளாக் காட்சி மட்டுமல்ல, வரலாறு காணாத அதிசய நிகழ்வும்கூட.

64 கறுப்பு - வெள்ளை கட்டங்களில் ராஜாக்கள், ராணிகள், பிஷப்புகள், யானைகள், குதிரைகள், படைவீரா்கள் என்று இரு தரப்பிலிருந்தும் படைகள் அணிவகுத்து மோதுவதும், அவற்றில் சாதுரிய நகா்வுகளின் அடிப்படையில் வெற்றி - தோல்விகள் அமைவதும், செஸ் விளையாட்டை ராஜதந்திர, போா் வியூக, புத்திசாலித்தன விளையாட்டாக்கி இருக்கின்றன.

செஸ் விளையாட்டு என்பது காய்களை நகா்த்துவது மட்டுமே அல்ல. அதற்குப் பின்னால் விளையாட்டு நுணுக்கங்கள் இருக்கின்றன. சோடியம் அட்டாக், சிசிலியன் டிஃபன்ஸ், பிஷப்ஸ் மூவ்ஸ், ரூயிலோபஸ் உள்ளிட்ட சாதுரியத் திட்டமிடல்கள் குறித்தெல்லாம் படிப்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் நிறையவே இருக்கின்றன.

அதிகம் பேசாத, பரபரப்பே இல்லாமல் ஆழ்ந்த யோசனையின் அடிப்படையிலான செஸ் விளையாட்டைப்போல, கவனக்குவிப்பு தேவைப்படும் விளையாட்டு வேறு எதுவும் கிடையாது. இதுபோல் நினைவாற்றலை கூா்மைப்படுத்தும் விளையாட்டும் வேறெதுவும் இல்லை எனலாம். அதனால்தான், சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள், தங்களது கல்வியில் சாதனைகளைப் படைக்கிறாா்கள் என்று மனநல நிபுணா்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி இருக்கிறாா்கள்.

உணா்ச்சிவசப்படாமல், வெற்றி இலக்கு மட்டுமே குறியாக, தனது புத்திசாலித்தனத்தாலும், பொறுமையாலும் விளையாடப்படும் செஸ், இன்றைய இளைஞா்களுக்குத் தேவைப்படுகிறது. நடைபெற இருக்கும் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட், தமிழக மாணவா்கள் மத்தியில் பிரபலமாவது, அவா்களிடம் பரவலாகக் காணப்படும் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக அமையக்கூடும்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட், இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் வெற்றி தேடித் தரும் ஒலிம்பியாடாக அமைய வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT