தலையங்கம்

தேர்வு முடிவுகள் சொல்லும் செய்தி! பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் பல அம்சங்கள் கவலை அளிக்கும் விதத்தில் உள்ளன. 2020, 2021-ஆம் ஆண்டுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. 2019-இல் 95.2%-ஆக இருந்த தேர்ச்சி விகிதம் இப்போது 90.07%-ஆக சரிந்திருக்கிறது. 

கரோனா நோய்த்தொற்று காரணமாக பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் கடுமை காட்டக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தபோதும் 47,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. பொதுத்தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 42,519 பேர் தேர்வுக்கே வரவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.12 லட்சம் பேர் எதிர்கொண்டனர். அவர்களில் 8.21 லட்சம் பேர் (90.07%) தேர்ச்சி பெற்றனர். சுமார் 5.21 லட்சம் பேர் மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு 300-க்கும் குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக கற்றலில் மாணவர்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இவை உணர்த்துகின்றன.

மொழிப்பாடத்தில் 47,055 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது கவலையளிக்கிறது. இதில் 36,589 பேர் மாணவர்கள், 10,466 பேர் மாணவிகள். பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களில் 63,642 பேர் தேர்ச்சி பெறவில்லை. 

மொழிப்பாடங்களில் மலையாளம், தெலுங்கு போன்றவை இருந்தாலும் 90%-க்கும் அதிகமானவர்களுக்கு தமிழ்தான் மொழிப் பாடமாக உள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழை தூக்கிப் பிடிக்கும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. அப்படியிருந்தும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வுகளில் தமிழில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெறவில்லை என்பது ஆட்சியாளர்களின் அசிரத்தையையும் அக்கறையின்மையையும்தான் வெளிப்படுத்துகிறது.

பத்தாம் வகுப்பில் மாணவர்களைவிட மாணவிகள் 8.55% பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் மாணவர்களைவிட 7.75% அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்விலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

பிளஸ் 1 தேர்வு எழுதியவர்களில் 95% மாணவியரும், 84.9% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-இல் மாணவ - மாணவிகளுக்கு இடையே இருந்த தேர்ச்சி இடைவெளி விகிதம் 3.1%-ஆக இருந்து இப்போது 10.1%-ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கைப்பேசியில் மூழ்கி இருத்தல், கரோனா கால பொருளாதார நெருக்கடிக்குப் பின் பெற்றோருக்கு உதவுவதற்காக வேலைக்குச் சென்றதால் படிப்பில் கவனம் செலுத்துவதில் உள்ள குறைபாடு, மீண்டும் அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்படுவார்கள் என்கிற அதீத நம்பிக்கை போன்றவற்றால் மாணவிகளைவிட மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என்று கல்வித் துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகள் என்றில்லை, இப்போது ஐஏஎஸ், எம்பிபிஎஸ் என பெரும்பாலும் எல்லாவித தேர்வுகளிலும் மாணவிகளே கோலோச்சுகின்றனர். பெண்கள் முன்னேறுவது மகிழ்ச்சிதான் என்றாலும் மாணவர்கள் பின்தங்கினால் எதிர்காலத்தில் அது மது, போதைக்கு அடிமையாதல், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுதல், மன அழுத்தம் உள்ளிட்ட பலவிதமான பிரச்னைகளுக்கு வழிகோலும் என்பது கவலையை ஏற்படுத்துகிறது. அனைத்து நிலைகளிலும் இருபாலரும் தேர்ச்சி பெறுவது அவசியம்.

பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் பயின்றோர் 85.25% பேரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயின்றோர் 98.31% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போன்று, பிளஸ் 1 தேர்விலும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 99.35% பேரும், அரசுப் பள்ளிகளில் 83.27% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் ஆண்கள் மட்டுமே படிக்கும் அரசுப் பள்ளிகளில் 78.48% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில், அரசு, தனியார் பள்ளிகள் உள்பட 4,145 பள்ளிகளில் 1.26 லட்சம் மாணவர்களிடம் 2021-இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய சாதனை ஆய்வில், எட்டாம் வகுப்பிலும் 10-ஆம் வகுப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களைவிட தனியார் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் வசதி உள்ளிட்டவை கிடைப்பதும், ஆசிரியர்கள் கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்துவதும் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன்.

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் எந்தவிதக் கட்டணமும் இன்றி தனியார் பள்ளிகளில் படிக்க கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது. இவர்களுக்கான கட்டணத்தை அந்தந்தப் பள்ளிகளுக்கு அரசே அளிக்கிறது. 

நிகழாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 31% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பில் 56,687 பேர் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 74,383-ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளையே மக்கள் விரும்புகின்றனர் என்பதை இது காட்டுகிறது.

"அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல. அவற்றை பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்' என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதியளித்திருக்கிறார். அதைச் செயல்படுத்திக் காட்டுவார் என்று எதிர்பார்ப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT