தலையங்கம்

அதிகரிப்பதால் பாதிப்பில்லை!|டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதப்பொருளாகி இருக்கிறது. கடந்த வாரம் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 48 காசு வீழ்ச்சி அடைந்தபோது அதை வரலாறு காணாத சரிவு என்று வர்ணித்தனர். இவையெல்லாம் இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி நகர்கிறதோ என்கிற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
உலகளாவிய நிலையில் செலாவணிகளுக்கு இடையேயான மதிப்பு ஏறுவதும் இறங்குவதும் தவிர்க்க முடியாதது. தேசிய செலாவணி வலுவாக இருப்பது அந்த நாட்டுப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது என்கிற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இது பொருளாதார ரீதியாக அணுகும்போது, தவறான புரிதல். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவது பலவீனம் என்று ஒரேயடியாக முடிவுக்கு வந்துவிட முடியாது; கூடாது.
2020 தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சுமார் ரூ.71-ஆக இருந்தது. கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு சற்று பலவீனமடைந்து ரூ.76-ஐத் தொட்டது. உக்ரைன் - ரஷிய போரைத் தொடர்ந்து ரூபாய் - டாலர் நாணய மாற்று மதிப்பு மேலும் பலவீனமடையத் தொடங்கியது. அது இப்போது (நேற்றைய நிலையில்) ரூ.78.94. விரைவிலேயே ரூபாய் 80-ஐ எட்டும் என்கிற அச்சம் பரவலாகக் காணப்படுகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு டாலரை விற்பனை செய்ய முற்பட்டிருக்கிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.80-ஐ எட்டுமேயானால், இந்தியாவின் கெளரவம் குலைந்துவிட்டது போலவும், சர்வதேச செலாவணி சந்தையில் மரியாதை இழந்துவிட்டது போலவும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கக் கூடும். அடுத்த ஐந்து மாதத்தில் குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆளும் பாஜகவும் இதை கெளரவ பிரச்னையாக எடுத்துக்கொண்டு, ரூபாயின் மதிப்பு குறையாமல் இருக்க முனைப்பு காட்டக்கூடும்.
வலுவான டாலர், பலவீனமான ரூபாய் என்கிற கருத்து தவறானது. கொள்ளை நோய்த்தொற்று, உக்ரைன் போர், அதிகரித்துவரும் வட்டி விகிதம் போன்றவை சர்வதேச முதலீடுகளை அமெரிக்காவை நோக்கி ஈர்த்திருக்கின்றன. அதனால், டாலருக்கு எதிரான உலகிலுள்ள எல்லா சர்வதேச செலாவணிகளும் மதிப்பு குறைந்திருக்கின்றன. கடந்த ஆண்டில் இந்திய ரூபாய், டாலருக்கு நிகரான மதிப்பில் 5% குறைந்தது என்றால், யூரோ 7%-உம், ஜப்பானிய யென் 14%-உம் குறைந்திருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
டாலருக்கு எதிரான இந்திய செலாவணியின் மதிப்பு குறைந்திருக்கும் அதே வேளையில் யூரோ, ஜப்பானிய யென், சீனாவின் யுவான் உள்ளிட்ட செலாவணிகளுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருப்பது குறித்து யாரும் பேசுவதில்லை. சர்வதேச அளவில் உள்ள 40 செலாவணிகளுடனான இந்தியாவின் செலாவணி மாற்று விகிதம் அதிகாரபூர்வ மதிப்பைவிட 4% அதிகம் என்பதை நாம் உணர வேண்டும்.
ரூபாயின் நாணய மதிப்பு பலவீனமாகிறது என்று பொதுவெளியில் காணப்படும் நிலைமைக்கு மாறாக, ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் அதன் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இது இந்திய பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. இதனால், இந்தியாவின் ஏற்றுமதிகள் சர்வதேசச் சந்தையில் பின்னடைவை எதிர்கொள்ளும்.
சர்வதேச பொருளாதார மந்தநிலை காணப்படும் வேளையில், இந்திய ஏற்றுமதிகளுக்கான கேட்பு குறைவது நல்லதல்ல. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதால் ஏற்படும் கடுமையான நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஓரளவு ஈடுகட்ட இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரித்தாக வேண்டும். அதற்கு, டாலருக்கு நிகரான இந்திய செலாவணியின் மதிப்பு கூடுவது நல்லதல்ல.
உக்ரைன் - ரஷிய போர் முடிவடையாமல் நீண்டுகொண்டு போவதும், உலகளாவிய நிலையில் பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்பட்டிருப்பதும் அடுத்து வரும் மாதங்களில் எல்லா நாடுகளையும் பெரிய அளவில் பாதிக்கக் கூடும். அதனால் பெரும்பாலான வளர்ச்சி அடையும் நாடுகள் அந்த பாதிப்பை எதிர்கொள்வதற்காக தங்களிடமுள்ள அந்நியச் செலாவணி இருப்பை (டாலரை) மிகவும் கவனமாக செலவிடுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியோ அதற்கு மாறாக டாலரை விற்று ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்துவிடாமல் பாதுகாக்க நினைக்கிறது. 2021-இல் நம்மிடம் இருந்த 640 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்பு, இப்போது 596 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது. டாலரை விற்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு குறைவது தடுக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.
நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை போன்றவை தங்களது செலாவணிகளை வலுவாக வைத்திருந்ததுதான் அந்த நாடுகளின் ஏற்றுமதிகள் சர்வதேசச் சந்தையில் விலைபோகாததற்குக் காரணம். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது அந்த நாடுகளின் அந்நிய செலாவணி இருப்பு முற்றிலுமாகக் கரைந்து, இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நல்லவேளையாக இந்தியா அதுபோன்ற நிலையில் இல்லை. ஆனால், அந்த நாடுகளிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம், செலாவணியின் மதிப்பைக் கட்டுப்படுத்த அந்நிய செலாவணியை இழந்துவிடக் கூடாது என்பதுதான்.
கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக் கூடும். அதனால், சர்வதேசச் சந்தையில் இந்திய ஏற்றுமதிகள் போட்டி போட ஏதுவாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT