தலையங்கம்

சம்பிரதாயமான மாநாடு!| வழக்கமான சொல்லாடல்களுடன் முடிந்த ஜி7 மாநாடு குறித்த தலையங்கம்

ஆசிரியர்


உக்ரைன் விவகாரத்தில் ஒரு தெளிவான நிலையை ஜெர்மனியில் கூடிய ஜி7 மாநாடு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. மாநாட்டில் பங்கேற்றோர் உக்ரைன் விவகாரத்தை மென்மையாகக் கையாண்டது ரஷிய ஆக்கிரமிப்பில் இருக்கும் உக்ரைன் மக்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் அளித்திருக்கும்.

உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதாக ஜி7 மாநாடு பெயரளவில் அறிவித்துள்ளது. ரஷியாவின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதன்  எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் கொள்கையை அறிவிக்க ஜி7 நாடுகள் தயாராகி வருகின்றன. இதனால் உக்ரைன் மீதான போர் முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை. 

வளர்ச்சியடைந்த பொருளாதார நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய அமைப்பே ஜி7 கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆறு நாடுகள் இணைந்து 1975-இல் உருவாக்கிய அமைப்பில் 1976-இல் கனடாவும் 1998-இல் ரஷியாவும் இணைந்தன. அதன் பிறகு ஜி8 நாடுகளின் கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷியா, கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன. 

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்ததால், 2014-இல் ஜி8 நாடுகளிலிருந்து ரஷியா நீக்கப்பட்டது. அதன் பிறகு இந்த அமைப்பு ஜி7 கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இதன் ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வது மரபாக உள்ளது.

இத்தகைய வரலாற்றுப் பின்புலம் கொண்ட ஜி7 கூட்டமைப்பின் இந்த ஆண்டு மாநாடு, உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும் ரஷியாவைக் கண்டிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் காணொலி முறையில் இம்மாநாட்டில் பேசினார். தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரை, குளிர்காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்த வேண்டும்; புதினின் படைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு மேலும் ஆயுதங்களை வழங்க வேண்டும் ஆகிய வேண்டுகோள்களை அவர் முன்வைத்தார்.

இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டபோதும், ரஷியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை ஜி7 மாநாடு எடுக்கவில்லை. மாறாக, சீனா நடைமுறைப்படுத்திவரும் சாலை வழி திட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டமைப்புத் திட்டத்தை 2027-ஆம் ஆண்டிற்குள் ரூ. 45 லட்சம் கோடியில் நிறைவேற்ற உள்ளதாக ஜி7 மாநாடு அறிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் ரஷிய ஆக்கிரமிப்பை விட சீனாவின் வளர்ச்சியே ஜி7 நாடுகளுக்கு உறுத்தலாக இருப்பதையே இத்தீர்மானம் வெளிப்படுத்துகிறது. 

ஐ.நா. விதிகளை மதித்து, பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீர்வு காணவும், மற்ற நாடுகளுக்கு எதிராக படைகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் மாநாட்டில் உறுதி ஏற்கப்பட்டிருக்கிறது. இது சம்பிரதாயமான தீர்மானமாகவே கருதப்படும். 

மக்களின் பேச்சு சுதந்திரத்தைக் காக்க முன்னுரிமை அளிக்கப்படும்; அமைதிவழி போராட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படும்; இணையவழி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்; பருவநிலை மாற்றம், கரோனா தொற்றுப்பரவல், சர்வதேச விதிகள் அடிப்படையிலான செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயல்படுவோம் என்று ஜி 7 மாநாட்டுக் கூட்டறிக்கை கூறுகிறது.  

இம்மாநாட்டில் இந்த ஆண்டு, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, ஆர்ஜென்டீனா, செனகல் ஆகிய ஐந்து நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றன. இந்தியா மூன்றாவது ஆண்டாக இம்மாநாட்டில் பங்கேற்றது. சிறப்பு பங்கேற்பாளர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேஷ கவனம் பெற்றதையும் காண முடிந்தது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஜி7 நாடுகள் கண்டித்து வரும் சூழலில், ரஷியாவுடன் தொடர்ந்து பொருளாதார உறவு கொண்டிருக்கும் இந்தியாவை அந்நாட்டுத் தலைவர்களால் புறக்கணிக்க முடியவில்லை. சீனாவுக்கு எதிரான தங்கள் எதிர்காலத் திட்டத்துக்கு இந்தியாவின் உதவி தேவை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்துகளை முன்வைக்க சிறந்த வாய்ப்பாக இந்த மாநாட்டை பயன்படுத்திக் கொண்டார். ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அவர் இயல்பாக அளவளாவி இந்தியாவின் செல்வாக்கை வெளிப்படுத்தினார். பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம் குறித்து மாநாட்டில் பேசிய அவர், ஒவ்வொரு நாட்டிலும் பூமியைக் காக்கும் மக்களை உருவாக்க வேண்டும்; அப்போதுதான் புவி வெப்பமயமாதலைத் தடுக்க முடியும் என்று கூறினார்.

உலக அளவில் மக்கள்தொகையில் இரண்டாவது பெரியநாடாக இருந்தபோதும் மரபுசாரா எரிசக்திப் பயன்பாட்டில் 40%-ஐ 9 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா எட்டியதையும், பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது தொடர்பான இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பதையும் பெருமிதத்துடன் மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் பசுமைத் தொழில்நுட்ப, வர்த்தக நடவடிக்கை
களில் ஜி7 நாடுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கவும் அவர் தவறவில்லை.

மொத்தத்தில் ஜி7 மாநாடு உக்ரைனுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது. இதில் விருந்தாளியாகப் பங்கேற்ற இந்தியா, உலக அரங்கில் தனது மதிப்பை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ரூ. 33,000 கோடி செலவிட ஜி7 நாடுகள் முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மற்றபடி, வழக்கமான சொல்லாடல்களுடன் மாநாடு கூடிக் கலைந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT