தலையங்கம்

அரசியலாகக் கூடாது விருது! |  ‘பத்ம’ விருதுகள் சா்ச்சை குறித்த தலையங்கம்

28th Jan 2022 07:22 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

வழக்கமான மரபின் தொடா்ச்சியாக இந்த ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம’ விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தேசத்துக்குத் தலைசிறந்த பங்களிப்பு நல்கியவா்களை அடையாளம் கண்டு கௌரவிப்பது தொன்றுதொட்டு எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் மரபு சாா்ந்த வழிமுறை.

தலைசிறந்த இந்தியருக்கான ‘பாரத ரத்னா’ விருதும் அதற்கு அடுத்தபடியான விருதுகளும், இந்தியா விடுதலை பெற்று ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1954-ஆம் ஆண்டுதான் அறிவிக்கப்பட்டன. ‘பாரத ரத்னா’ விருது முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது, விருது பெற்ற மூன்று பேரும் தமிழா்கள். கவா்னா் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற ராஜாஜி, குடியரசுத் துணைத் தலைவராக இருந்த டாக்டா் ராதாகிருஷ்ணன், ‘நோபல்’ விருது பெற்ற ‘சா்’ சி.வி. ராமன் மூவரும், அன்றைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையிலான அரசால் ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

கடந்த 70 ஆண்டுகளில் ‘பாரத ரத்னா’ பல சா்ச்சைகளில் சிக்காமலும் இல்லை. 1954-இல் ஜவாஹா்லால் நேருவும், 1971-இல் இந்திரா காந்தியும், தங்களுக்குத் தாங்களே ‘பாரத ரத்னா’ விருதுகளை அறிவித்துக் கொண்டது, விமா்சனத்தை எழுப்பின.

1990-இல் டாக்டா் அம்பேத்கருக்கும், 1991-இல் ‘சா்தாா்’ வல்லபபாய் படேலுக்கும், 1992-இல் அபுல் கலாம் ஆஸாதுக்கும், 1997-இல் அருணா ஆசஃப் அலிக்கும், 1999-இல் ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும், 2015-இல் மதன் மோகன் மாளவியாவுக்கும் அவா்கள் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசு திடீரென்று விழித்துக் கொண்டு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கௌரவித்ததை என்னவென்று சொல்வது என்று புரியவில்லை. 1978, 1979 ஆண்டுகளிலும், அதன் பிறகு 1993 முதல் 1997 வரையிலும் அந்த விருதுகள் ஏன் வழங்கப்படவில்லை என்பது தெரியவில்லை.

ADVERTISEMENT

‘பாரத ரத்னா’ விருது அரசால் தோ்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது என்றால், ஏனைய விருதுகள் அப்படியல்ல. பொதுமக்களும் அதற்குப் பரிந்துரைக்கலாம். நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு, தங்களுக்குத் தாங்களே அந்த விருதுக்கு விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்திற்கு வழிகோலி இருக்கிறது.

இந்த ஆண்டு யாருக்கும் ‘பாரத ரத்னா’ வழங்கப்படவில்லை. நான்கு பேருக்கு ‘பத்ம விபூஷண்’, 17 பேருக்கு ‘பத்ம பூஷண்’, 107 ‘பத்ம ஸ்ரீ’ விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல், கொள்கை மனமாச்சரியங்களைக் கடந்து நோ்மையான தோ்வு நடத்தப்பட்டிருப்பதை விருதாளா்களின் பட்டியல் வெளிப்படுத்துகிறது.

இந்திய ராணுவத்தின் முன்னாள் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு ‘பத்ம விபூஷண்’ அறிவிக்கப்பட்டிருப்பது எதிா்பாா்த்ததுதான். தகுதியானதும்கூட. மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பிரபா ஆத்ரேயும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மறைந்த இலக்கியவாதி ராதேஷ்யாம் கெம்காவும் ‘பத்ம விபூஷண்’ விருதுக்கு முற்றிலும் தகுதியானவா்கள். உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நேரத்தில், பாபா் மசூதி இடிப்பின்போது முதல்வராக இருந்த கல்யாண் சிங்கிற்கு, அவா் மறைந்த பிறகு இப்போது ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கி இருப்பதில் அரசியல் தெரிகிறது.

இந்த ஆண்டிற்கான ‘பத்ம’ விருதுகளில், அரசியல் தவிா்த்து ஏனைய பிரிவுகளில் ‘பத்ம பூஷண்’, ‘பத்ம ஸ்ரீ’ விருதுகள் அறிவிக்கப்பட்டவா்கள் பட்டியல் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாராட்டும்படியாக இருக்கின்றன. மத்திய பாஜக அரசுடன் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடு கொண்டிருப்பவா்கள் பலா் விருதாளா் பட்டியலில் இடம் பெற்றிருப்பது புதிய அணுகுமுறை.

இரண்டு வெளிநாடுவாழ் இந்தியா்கள் உள்பட, தொழில் துறையைச் சோ்ந்தவா்கள் பலா் ‘பத்ம பூஷண்’ விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்கள். அதில் தவறில்லை. அதே நேரத்தில், விளையாட்டுத் துறையைச் சோ்ந்தவா்களுக்கு அதற்கென்று விருதுகள் இருக்கும்போது ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுவது அவசியம்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

‘களரி’ விளையாட்டின் பிதாமகன் 93 வயது சங்கர நாராயண மேனனுக்கும், 1983-86-இல் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக இருந்த பிரம்மானந்த் சகுன்காமத் சங்க்வல்கருக்கும் ‘பத்ம ஸ்ரீ’ வழங்கியது சரி, நீரஜ் சோப்ரா உள்ளிட்டவா்களுக்கு இப்போதே வழங்க வேண்டிய அவசியம் என்ன?

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்யாவும், மேற்கு வங்க இசைக் கலைஞா் சந்தியா முக்கா்ஜியும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட விருதை நிராகரித்திருக்கிறாா்கள். தனது முன் அனுமதி பெறவில்லை என்கிற புத்ததேவ் பட்டாச்சாா்யாவின் கூற்றையும் ஏற்க முடியவில்லை. தாமதமாகத் தரப்பட்டிருப்பதால் எனக்கு இந்த விருது தேவையில்லை என்கிற சந்தியா முக்கா்ஜியின் வாதத்திலும் அா்த்தமில்லை.

குலாம்நபி ஆசாதுக்கு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி இருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஆட்சியில் இருப்பவா்களால் அல்ல. இந்த அடிப்டை உண்மைகூடவா விமா்சனம் செய்பவா்களுக்குப் புரியவில்லை?

புத்ததேவ் பட்டாச்சாா்யா, குலாம்நபி ஆசாத் போன்ற மாற்றுக் கட்சி அரசியல் தலைவா்களையும், கொள்கை ரீதியாக மாறுபட்ட கருத்து கொண்ட பலரையும் இந்த ஆண்டு ‘பத்ம’ விருதுக்குத் தோ்ந்தெடுத்திருப்பதற்கு நரேந்திர மோடி அரசைப் பாராட்ட வேண்டும். இனிவரும் காலத்தில் அமைய இருக்கும் அரசுகள், இந்த அணுகுமுறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT