தலையங்கம்

சவால் எழுப்பும் தேர்தல்! | ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள், பாஜக, காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகிய ஐந்து கட்சிகளுக்கும் அவற்றின் வருங்கால வளர்ச்சியை நிர்ணயிப்பதாக இருக்கக்கூடும் என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஒரு மாநிலம் காங்கிரஸ் வசம் இருக்கிறது. தேசிய கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் தங்களின் செல்வாக்கை தக்கவைத்துக்கொண்டாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏனைய கட்சிகளைவிட அதிகம்.
 பாஜகவைப் பொறுத்தவரை, உத்தர பிரதேசத்தில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன. 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோடியாக ஒட்டுமொத்த இந்தியாவும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலைப் பார்ப்பதால், அதில் ஏற்படக்கூடிய பின்னடைவு மத்தியில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும்.
 உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் பெறுவதுடன், ஏனைய மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அடுத்து வரவிருக்கும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகளும் முக்கியமானவை என்பதால், இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றி பாஜகவுக்கு அவசியம்.
 மத்தியில் ஆளும் கட்சியே, மாநிலத்திலும் இருக்கும்போது இரட்டை எஞ்சின் ரயில்போல வளர்ச்சியும் வேகமாக இருக்கும் என்பது பாஜகவின் தொடர்ந்த பரப்புரை. 1985-க்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் எந்தவொரு கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டதில்லை. அது தெரிந்துதானோ என்னவோ, வளர்ச்சி என்கிற கோஷம் மட்டுமல்லாமல் ஹிந்து உணர்வுகளையும் பாஜக முன்னிலைப்படுத்தி களம் காண்கிறது.
 அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுதல், வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் உத்தர பிரதேச விஜயங்கள் என்று கடந்த ஓராண்டாகவே தேர்தலுக்கான முன்னெடுப்புகளை பாஜக தொடங்கிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹாத்ரஸ் பாலியல் வழக்கு, லக்கீம்பூர் துப்பாக்கிச் சூடு, அதற்கு முன்பு குழந்தைகளின் மருத்துவமனை மரணம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகள் தேசிய அளவில் ஊடக வெளிச்சம் பெற்றாலும், உத்தர பிரதேசத்தின் அதிவேகமான கட்டமைப்பு வசதி மேம்பாடுகள் சாமானியர்களைக் கவர்ந்திருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பலவீனமடைந்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகள் பாஜகவை நோக்கி நகர்ந்திருப்பதும் அக்கட்சியின் பலம்.
 பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சமாஜவாதி கட்சியின் பின்னால் திரண்டு வருவதை அதன் தலைவர் அகிலேஷ் யாதவின் பேரணிகளுக்குக் கூடிய கூட்டங்களில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஜாட் இனத்தவரின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய லோக் தளமும், விவசாயிகள் சங்கமும் அகிலேஷ் யாதவுடன் கைகோத்திருப்பதும், பாஜகவிலிருந்து சுவாமி பிரசாத் மெளரியா உள்ளிட்ட பிற்பட்ட இனத்தவர்கள் விலகி சமாஜவாதி கட்சியில் இணைந்திருப்பதும் அகிலேஷ் யாதவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருக்கின்றன.
 பிரியங்கா காந்தியின் தலைமையில் தனியாகப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, எந்த அளவுக்கு சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரிக்கப் போகிறது என்பதிலும், ஐக்கிய ஜனதா தளம் கிழக்கு உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை பிரிக்குமா என்பதிலும் அடங்கியிருக்கிறது பாஜகவின் வெற்றி - தோல்வி.
 பாஜகவுக்கு உத்தர பிரதேசம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே போல, பஞ்சாபை தக்கவைத்துக் கொள்ள வேண்டியது காங்கிரஸுக்கு முக்கியம். பஞ்சாப் மாநிலம் முதன்முறையாக பலமுனை போட்டியை சந்திக்க இருக்கிறது. காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி - பாஜக கூட்டணி என்று பல அணிகள் களம் இறங்குகின்றன.
 பாஜகவுக்கு எதிரான விவசாயிகளின் வாக்குகள் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, அகாலி தளம் என்று பிரிவதால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம். முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னிக்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான பனிப்போரும் காங்கிரûஸ பலவீனப்படுத்தக்கூடும். இவற்றால் பலனடையப் போவது ஆம் ஆத்மி கட்சியாக இருக்கக்கூடும் என்றாலும், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையும் ஏற்படலாம்.
 உத்தரகண்டிலும், மணிப்பூரிலும் ஆளும் பாஜக கடுமையான உள்கட்சி பிரச்னைகளை எதிர்கொள்கிறது. கோவாவில் திரிணமூல் காங்கிரஸும், ஆத் ஆத்மி கட்சியும் களம் இறங்கியிருப்பது புதிய திருப்பம். இந்த மாநிலங்களில் எல்லாம் நேரடிப் போட்டிகளும், உள்ளூர் பிரச்னைகளும் முடிவுகளை நிர்ணயித்தது போய், இப்போது அரசியல் களமே குழம்பிப் போய் கிடக்கிறது.
 நடக்க இருக்கும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் வெற்றி பாஜகவைவிட காங்கிரஸுக்கு மிக முக்கியம். இதில் ஏற்படும் பின்னடைவு, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தகுதியை காங்கிரஸிடமிருந்து பறித்துவிடும். அதனை எதிர்பார்த்துத்தான் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் காத்துக்கொண்டிருக்கிறது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT