தலையங்கம்

விசித்திர விதிமுறைகள்...| வங்கிப் பாதுகாப்புப் பெட்டக புதிய விதிமுறைகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 ஜனவரி 1-ஆம் தேதி முதல், வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகத்துக்கான புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 2021 பிப்ரவரி 19-ஆம் தேதி, அமித்தவா தாஸ்குப்தா எதிர் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்று இந்திய ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் முடிவு இது.விதிகளை மாற்றியது சரி, ஆனால், ரிசர்வ் வங்கி காட்டியிருக்கும் அதிகப்படியான முனைப்புதான் சரியானதாகத் தெரியவில்லை.
 யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவில் அமித்தவா தாஸ்குப்தா பெற்றிருந்த பாதுகாப்புப் பெட்டக வசதிக்கு வாடகையே தரவில்லை. அதனால் அந்தப் பெட்டகத்தை உடைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிக்கு ஏற்பட்டது. அதற்கு எதிராக அமித்தவா தாஸ் குப்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பாதுகாப்புப் பெட்டக வசதிகள் குறித்தும், அது தொடர்பான வங்கியின் பொறுப்புகள் குறித்தும் ஆறு மாதத்தில் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
 பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறொன்றும் இல்லை. வைப்புத் தொகை வைத்திருந்தால் மட்டும் போதுமானது என்கிற பாதுகாப்புப் பெட்டக வசதிக்கான நிபந்தனையில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தப் புதிய நிபந்தனைகள் எரிச்சலூட்டுபவையாகவும், வாடிக்கையாளர் நலனுக்கு விரோதமாகவும் இருக்கின்றன.
 புதிய விதிமுறைகளின்படி, பாதுகாப்புப் பெட்டக வசதி பெறுவதற்கு மூன்று ஆண்டு வாடகையை முன்கூட்டியே வழங்குவதுடன், ஏதாவது ஒரு காரணத்திற்காக பெட்டகத்தை உடைக்க நேர்ந்தால் அதற்கு செலவாகும் கட்டணத்தையும் முன்கூட்டியே வசூலித்துக் கொள்ள வங்கிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது விசித்திரமாக இருக்கிறது. பாதுகாப்புப் பெட்டக வசதி பெறும் வாடிக்கையாளர்கள், அதன் சாவியையும் எடுத்துக்கொண்டு காணாமல் போய்விடுவார்கள் என்கிற அனுமானத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனை இது. அமித்தவா தாஸ் குப்தா பிரச்னையில் அப்படி நிகழ்ந்தது என்பதற்காக எல்லா வாடிக்கையாளர்களும் தண்டிக்கப்படுவது தவறான கொள்கை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி ஏன் உணரவில்லை?
 பாதுகாப்புப் பெட்டகத்தைப் பயன்படுத்தாமலோ திருப்பி ஒப்படைக்காமலோ அதன் சாவியுடன் வாடிக்கையாளர் சென்றுவிடாமல் இருப்பதற்கு, வைப்புத் தொகைபோல சில விதிமுறைகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் பாதுகாப்புப் பெட்டகம் பயன்படுத்தப்படாமல் இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்புவதும், அபராதக் கட்டணம் விதிப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.
 வைப்புத் தொகையைவிட கட்டண பாக்கி அதிகரிக்குமானால், பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்துத் திறக்கும் உரிமையும், வைப்புத் தொகையை கட்டணமாக எடுத்துக்கொள்ளும் உரிமையும் வங்கிகளுக்குத் தரப்படுவது நியாயமான விதிமுறைகள். அதற்காக எல்லா வாடிக்கையாளர்களிடமிருந்தும் வைப்புத் தொகையும், மூன்று ஆண்டுகளுக்கான கட்டணமும், பெட்டகத்தை உடைத்துத் திறப்பதற்கான செலவும் முன்கூட்டியே வசூலிக்கப்படுவது இதுவரை உலகில் வேறெங்கும் இல்லாத நிபந்தனைகள். வங்கிக் கணக்குகளுடன் வருமான வரி கணக்கு எண்ணும், ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு சிலர் மாயமாய் மறைந்துவிடுகிறார்கள் என்பதற்காக அனைவரையும் தண்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
 வாடிக்கையாளர்களிடமிருந்து மூன்று ஆண்டு கட்டணத்தை முன்கூட்டியே வசூலிப்பது என்பது, அதுவும் வட்டியில்லாத முன்பணமாகப் பெறுவது இதுவரை வேறு எங்கும் இல்லாத புதிய அணுகுமுறை. சேவையைப் பெறுவதற்கு முன்னாலேயே வாடிக்கையாளர்கள் வாடகை தர வேண்டிய அவசியம்தான் என்ன?
 வட்டியின் முக்கியத்துவமும், முதலீடு முடக்கப்படும் காலமும், வங்கிச் சேவை வழங்குபவர்களுக்குத் தெரியாததல்ல. வங்கியின் பணம் கடனாக வழங்கப்படும்போது, ஒவ்வொரு நாளுக்கும் வட்டி கோரும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் பணத்தை வட்டியில்லாமல் வாங்கி வைத்துக்கொள்வது அவர்களை வஞ்சிப்பதாக இல்லையா?
 அடுத்ததாக, பாதுகாப்புப் பெட்டகத்தை உடைப்பதற்கான கட்டணம் குறித்தும் கேள்வி எழுகிறது. என்ன அடிப்படையில் அந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்பது முதலில் தெரிய வேண்டும். முன்கூட்டிப் பெறும் வாடகைபோல, பாதுகாப்புப் பெட்டக உடைப்புக் கட்டணத்தையும் பாதுகாப்புப் பெட்டக வசதியை வாடிக்கையாளர்கள் தொடரும் வரை வட்டியில்லாமல் வங்கி வைத்துக்கொள்ளப் போகிறது. வங்கியின் மீது நம்பிக்கை வைத்து, வங்கி வழங்கும் குறைந்த வட்டிக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புகளை வழங்கும்போது, அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் பெட்டகத்தை உடைக்க நேர்ந்தால் வங்கிக்கு ஏற்படும் இழப்பை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது தர்க்க ரீதியாகப் பார்த்தாலும், தார்மிக ரீதியாகப் பார்த்தாலும் மிகப் பெரிய அநீதி.
 இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வாடிக்கையாளர் விரோத விதிமுறைகள், வாடிக்கையாளர்களை தனியார் பாதுகாப்புப் பெட்டக நிறுவனங்களை நாட வழிகோலும். அதன் மூலம் வங்கிச் சேவையில் இருந்து பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பிரித்து தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க இந்திய ரிசர்வ் வங்கி நினைக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.
 புதிய விதிமுறைகளில் காணப்படும் ஒருசில நல்ல அம்சங்கள் மிகவும் சாதாரணமானவை. எளிதில் வாடிக்கையாளருக்கு நன்மை பயக்காதவை. வாடிக்கையாளர் நலனை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்படாதவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT