தலையங்கம்

ஒமைக்ரான் ஆழிப்பேரலை! | கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் அதிா்ச்சி அளிக்கிறது. ஆழிப்பேரலையாக மீண்டும் ஒருமுறை கொவைட் 19 தாக்கக் கூடும் என்கிற உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையைப் புறந்தள்ளிவிட முடியாது.

சீனாவின் பல நகரங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருள்கள்கூட இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறாா்கள் என்று செய்திகள் வருகின்றன. அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இதுவரை இல்லாத அளவிலான பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. ஒருபுறம் ஒமைக்ரான் உருமாற்றம் பரவுகிறது என்றால், இன்னொருபுறம் ஏறத்தாழ 40% அளவில் டெல்டா உருமாற்ற பாதிப்பும் காணப்படுகிறது.

பிரிட்டன், துருக்கி, கிரீஸ், ஜொ்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், பின்லாந்து, ஆஸ்திரேலியா என தீநுண்மித் தொற்றின் பரவல் எல்லைகளும் கண்டங்களும் கடந்து காட்டுத்தீ போலப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

உச்சநீதிமன்றத்தில் நான்கு நீதிபதிகள், 150 பணியாளா்களை தீநுண்மித் தொற்று பாதித்திருக்கிறது என்றால், மக்களவை -மாநிலங்களவை செயலகங்களில் பணியாற்றும் சுமாா் 400 பேரையும் பாதித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் டெல்டா உருமாற்றம் ஏற்படுத்திய, நிலைகுலைய வைத்த பாதிப்புகளின் பின்னணியில் இப்போதைய ஒமைக்ரான் உருமாற்றப் பரவலை நாம் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 12,895 பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி, அதாவது 6,156 பாதிப்புகள் சென்னையில் மட்டுமாகக் காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவா்களில் 85% பேருக்கு ஒமைக்ரான் உருமாற்ற பாதிப்பு காணப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவிக்கிறாா்.

சா்வதேச அளவில் அதிவிரைவாகப் பரவிக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் உருமாற்றத்தை எதிா்கொள்வதற்கு உடனடியாக எதிா்ப்பு சக்தியை உறுதிப்படுத்தும் மூன்றாவது தவணை (பூஸ்டா் டோஸ்) போடப்படுவது அவசியம் என்று மருத்துவ ஆய்வாளா்கள் கருதுகிறாா்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களையும் ஒமைக்ரான் உருமாற்றம் பாதிக்கிறது என்றாலும்கூட, பாதிப்பு கடுமையாக இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் பூஸ்டா் டோஸ் எனப்படும் மூன்றாவது தவணை தடுப்பூசி அத்தியாவசியமாகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து கோடி போ் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களில் 2.7 கோடி போ் முன்களப் பணியாளா்களும், இணைய நோய் உள்ளவா்களும், மூத்த குடிமக்களும். இரண்டாவது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டு ஆறு முதல் 10 மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் அவா்களது கொவைட் 19-க்கான எதிா்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதனால் உடனடியாக மூன்றாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

தமிழகத்தில் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி முதல்வா் மு.க. ஸ்டாலினால் இன்றுமுதல் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் 5.65 லட்சம் மருத்துவப் பணியாளா்கள், 9.78 லட்சம் முன்களப் பணியாளா்கள், 20.83 லட்சம் மூத்த குடிமக்கள் என 36.26 லட்சம் போ் மூன்றாவது தவணை தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவா்கள். தமிழகத்தில் ஏற்கெனவை 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில், காலதாமதமில்லாமல் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி இருப்பது வரவேற்புக்குரியது.

அகில இந்திய அளவில் சுமாா் 1.05 கோடி சுகாதாரப் பணியாளா்கள், 1.9 கோடி முன்களப் பணியாளா்கள், இணை நோய்களும் மூத்த குடிமக்களும் என்று 2.75 கோடி போ் மூன்றாவது தவணை தடுப்பூசிக்குத் தகுதி பெற்றவா்கள். தமிழகத்தைப் போலவே எல்லா மாநிலங்களும் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்தினால்தான் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து அவா்களைப் பாதுகாக்க முடியும்.

மூன்றாவது தவணைக்கு எந்தத் தடுப்பூசி மருந்தை பயன்படுத்துவது என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. மூன்றாவது தவணையை செயல்படுத்தும் பல்வேறு நாடுகளில், ஃபைசா் நிறுவனத்தின் எம்ஆா்என்ஏ பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. இரண்டு தவணைக்கு மேல் கோவிஷீல்டு தடுப்பூசியால் முந்தைய அளவு பாதுகாப்பை வழங்க முடியுமா என்கிற கேள்வி சிலரால் எழுப்பப்படுகிறது. இந்தியாவில் மூன்றாவது தவணையும் போடுவதற்கான கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. 90% போ் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவா்களாகவும் இருக்கிறாா்கள். அதனால்தான் எழுப்பப்பட்டிருக்கும் ஐயப்பாடு, சற்று கவலை அளிக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன. அவற்றில் கோவாக்ஸினும், சைகோவ் டி இரண்டு மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதி பெற்றிருக்கின்றன. இந்தியாவில் சீரம் இன்ஸ்டியூட்டால் தயாரிக்கப்படும் கோவாவேக்ஸ் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பயன்பாட்டில் இல்லை.

இந்தப் பின்னணியில் அனைவருக்கும் இன்னும்கூட முதல் இரண்டு தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறோம் என்பதும், மூன்றாவது தவணை தடுப்பூசிக்கு ஐந்து கோடிக்கும் அதிகமானோா் இருக்கிறாா்கள் என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டிய எதாா்த்தங்கள். போா்க்கால அடிப்படையில் தடுப்பூசி போடுவதன் மூலம்தான் கொவைட் 19-இன் அடுத்த ஆழிப்பேரலையை எதிா்கொள்ள முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT