தலையங்கம்

எல்லை கவனம்! | இந்திய - சீன எல்லை உறவு குறித்த தலையங்கம்

ஆசிரியர்

இந்திய - சீன எல்லையில் இருதரப்பு வீரர்களும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டபோது, எல்லைப்புறத்தில் அமைதி நிலவுகிறது என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், அது வெறும் சம்பிரதாயச் சடங்கே தவிர, உண்மை நிலையின் பிரதி பலிப்பு அல்ல என்பதை இப்போது வெளியாகியிருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகேயுள்ள சீனப் பகுதியிலுள்ள பாங்காங் ஏரியில் சீன ராணுவம் நவீன தொழில்நுட்பத்துடன் பாலம் ஒன்றை அதிவிரைவாகக் கட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாகவே எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின் கட்டமைப்பு வசதிகளை சீனர்கள் மேம்படுத்தி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. 

கிழக்கு லடாக்கிலிருந்து திபெத் வரையிலான ஏறத்தாழ 3,500 கி.மீ. பகுதி இரு நாடுகளுக்குமிடையே பிரச்னைக்குரியதாகத் தொடர்கிறது. அந்தப் பகுதியில் தன்னுடைய ராணுவ நடமாட்டத்தை சுலபமாக்கவும், ராணுவத்தின் வலிமையை அதிகப்படுத்தவும் சீனா பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

கடந்த 15 ஆண்டுகளாக, குறிப்பாக நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகுதான் இந்தியாவின் எல்லைப்புறக் கட்டமைப்பை மேம்படுத்தும் முனைப்பு தொடங்கியது. அதுவரை,  இந்திய எல்லையில் சாலைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தால், சீன ராணுவத்தால் எளிதில் நுழைய முடியாது என்கிற தவறான புரிதல் ஆட்சியாளர்களிடம் இருந்தது. 2020 ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லைப்புறக் கட்டமைப்பு முழு வேகத்துடன் மேம்படுத்தப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.240 கோடி செலவில் ஆறு மாநிலங்கள், இரண்டு ஒன்றியப் பிரதேசங்களை ஒட்டியிருக்கும் எல்லைப் பகுதிகளில் 63 பாலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் 24 பாலங்களும், மூன்று முக்கியமான சாலைகளும் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. ஷெகாட்கர் குழு பரிந்துரையின் அடிப்படையில் எல்லைப்புற சாலை அமைப்பு நிறுவனத்தின் நிதி ஒதுக்கீடு ரூ.100 கோடியாக அதிகரிக்கப்பட்டு சாலைக் கட்டமைப்புகளை விரைவுபடுத்த வழிகோலப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில், சீனாவைப்போல சர்வாதிகாரத் தலைமை இல்லாததால் அமைச்சகங்களுக்கிடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லாமல் இருப்பது குறை. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி 40 ஒருங்கிணைந்த காவல் நிலையங்களை அமைப்பது, நிர்வாக ஒருங்கிணைப்பு இல்லாததால் தாமதப்படுகிறது. சிவப்பு நாடா முறையால் எல்லைப்புற கட்டமைப்பு திட்டங்கள் தாமதப்படுவதும், போதுமான நிதி ஒதுக்கீடு தரப்படாததும் இந்தியாவின் பலவீனமென்றால், அதற்கு நேர்மாறாக சீனா தனது ராணுவத்திற்கு எல்லா அதிகாரங்களையும், நிதி உதவிகளையும் வழங்கி தயார் நிலையில் வைத்திருக்கிறது. 

அதே நேரத்தில் இந்தியப் படைகளும், சீன ராணுவமும் கடந்த பல மாதங்களாக எல்லையில் பதற்றமான மோதல் சூழலை எதிர்கொண்டு எப்போது வேண்டுமானாலும் போருக்குத் தயாராகக் காத்திருக்கின்றன. பனிப்போர் காலத்தில்கூட இப்படியொரு சூழல் உலகில் இருந்ததில்லை. 

சீனாவின் பாங்காங் ஏரியில் பாலம் அமைக்கும் திட்டம், அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் பதற்றத்தைக் குறைப்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை 13 சுற்றுப் பேச்சுவார்த்தை ராணுவ தளபதிகளுக்கிடையே நடந்திருக்கிறது. 14-ஆவது சுற்று நடக்க இருக்கிறது. 

இந்திய ராணுவத்தின் வெற்றிகளை சாதகமாக்கிக்கொள்ள ஆட்சியாளர்கள் தவறிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. 2020 மே மாதம் முதல் சீனத் தரப்பு பயனுள்ள ராணுவ அல்லது ராஜாங்க பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் போக்குக் காட்டியது. 2021 ஆகஸ்டில் இந்திய எல்லைக்குள் புகுந்து சில பகுதிகளை ஆக்கிரமிக்கவும் செய்தது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் இறுதியில் இந்திய ராணுவம் கைலாஷ் மலைச்சிகரங்களில் முக்கியமான ஆறு சிகரங்களைக் கைப்பற்றியதை சீனர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 


பாங்காங் ஏரியின் தெற்குப் பகுதியிலுள்ள கைலாஷ் மலைச்சிகரங்களில் இருந்து தாக்குதல் நடத்தினால் சீனத் துருப்புகளும், கட்டமைப்பும் அதை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அதை உணர்ந்த சீனர்கள் சமரசப் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். அதை நம்பி நாம் கைப்பற்றியிருந்த சிகரங்களில் இருந்து நமது வீரர்களை இந்திய ராணுவம் திருப்பி அழைத்துக் கொண்டது. அதைத்தான் சீனர்கள் எதிர்பார்த்தார்கள். 

அதற்கு பதிலடி கொடுப்பதுபோல, இப்போது பாங்காங் ஏரியில் பாலம் அமைக்க முற்பட்டிருக்கிறது சீன ராணுவம். இதன் மூலம் 135 கி.மீ. நீளமுள்ள அந்த ஏரியின் அனைத்துப் பகுதிகளிலும் தங்குதடையில்லாமல் நடமாடும் வசதியை அவர்கள் பெறுவார்கள். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன ராணுவம் நம்மைவிட பலம் பெறக்கூடும்.

பாங்காங் ஏரியில் பாலம் அமைப்பதுடன் சீனா நின்றுவிடவில்லை. திபெத்தியர்கள் நடத்திய விருந்தில் கலந்துகொண்ட இந்திய அமைச்சர்கள், எம்.பி.-க்களுக்கு சீனத் தூதரகம் கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறது. இந்திய அமைச்சர்களுக்கும், எம்.பி.-க்களுக்கும் கடிதம் எழுதிக் கண்டிக்கும் அதிகாரத்தை சீனத் தூதருக்கு யார் வழங்கியது? 

அரசு, சீனத் தூதரை அழைத்து அதை ஏன் கண்டிக்கவில்லை என்பதும், வெளியுறவுத்துறை அதற்குக் கண்டனம் தெரிவிக்காததும் ஆச்சரியமாக இருக்கிறது. மோதலைத் தவிர்க்க விரும்புகிறோமா, இல்லை பாய்வதற்காக பதுங்குகிறோமா என்பது விளங்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT