தலையங்கம்

வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி! | இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் கணிப்பு பற்றிய தலையங்கம்

23rd Feb 2022 04:23 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சென்டர் ஃபார் மானிடரிங் இண்டியன் எகானமி) என்கிற ஆய்வு நிறுவன கணிப்பின்படி, கடந்த டிசம்பர் மாதம் 7.9%-ஆக இருந்த வேலையின்மை விகிதம், ஜனவரி மாதத்தில் 8%-ஆக அதிகரித்திருக்கிறது. நவம்பர் மாதம் 8.2%-ஆக இருந்த நகர்ப்புற வேலையின்மை, டிசம்பரில் 9.3%-ஆகவும், கிராமப்புற வேலையின்மை 6.4%-ஆக இருந்தது 7.3%-ஆகவும் அதிகரித்திருக்கிறது.
 மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2020-இல் வேலைவாய்ப்பின்மையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 3,548 என்று அரசு தெரிவித்திருக்கிறது. 2018-இல் 2,741 இளைஞர்களும், 2019-இல் 2,851 இளைஞர்களும் வேலைவாய்ப்பின்மையால் தற்கொலை செய்து கொண்டனர் என்கிற புள்ளிவிவரமும் அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.
 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரப்படி, மிக அதிகமான வேலைவாய்ப்பின்மைத் தற்கொலைகள் கர்நாடகம் (720), மகாராஷ்டிரம் (625), தமிழ்நாடு (336) ஆகிய மூன்று மாநிலங்களில்தான் காணப்படுகின்றன. மத்திய - மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, போதுமான முனைப்பு காட்டுவதில்லை. அறிக்கைகள் வெளிவருகின்றனவே தவிர, புதிய வேலைவாய்ப்புகள் உருவானதாகத் தெரியவில்லை.
 இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின்படி, 2021 டிசம்பரில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 5.3 கோடி. மேலும் 1.7 கோடி பேர் வேலைக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள். உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, இந்தியாவில், வேலை செய்ய உகந்த வயதினரில் 43% பேர் மட்டுமே அதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இதுவே பாகிஸ்தானில் 48%, வங்க தேசத்தில் 58%. வேலை செய்யும் வயதிலான மக்கள்தொகையினர் 2021-31-இல் ஆண்டொன்றுக்கு 97 லட்சம் என்கிற அளவிலும், 2031-41-இல் 42 லட்சம் என்கிற அளவிலும் மேலும் அதிகரிப்பார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 இந்தியா மிகப் பெரிய வேலைவாய்ப்பு பிரச்னையை எதிர்கொள்கிறது. இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் படித்த 60% மாணவர்களுக்குத்தான் உடனடியாக வேலை கிடைக்கிறது. 2000 முதல் 2008 வரை தொடங்கப்பட்ட பொறியியல், நிர்வாக மேலாண்மை கல்லூரிகள் பரவலாக மூடப்படுகின்றன.
 வேலைவாய்ப்புகள் இல்லை என்பது மட்டுமல்ல, கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதும் மிகப் பெரிய பிரச்னை. சமீபத்தில் உத்தர பிரதேசத்திலும், பிகாரிலும் ரயில்வே வேலைக்கான தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நடத்திய வன்முறைப் போராட்டம் அதன் வெளிப்பாடே.
 2018-19-இல் 2,83,747 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே வெளியிட்டது. அதற்கு நான்கு கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தன. 1.32 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
 தொழில்நுட்பம் சாராத சாதாரண 35,000 வேலைகளுக்கான பணியிடங்களுக்கு 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இரண்டு ஆண்டுக்கு முன்பு அதற்கான தேர்வு நடத்தப்பட்டு கடந்த டிசம்பர் - ஜனவரி மாதங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த முடிவுகள் முதல் சுற்று தேர்வுக்கானவை என்றும், விரைவிலேயே அடுத்தச் சுற்று தேர்வு நடைபெறும் என்றும் ரயில்வே அறிவித்ததுதான் வன்முறைப் போராட்டம் வெடிக்கக் காரணமானது.
 விண்ணப்பித்தவர்களில் பலரும், குறைந்த ஊதியமுள்ள கடைநிலை ஊழியர் பணிக்காக விண்ணப்பித்திருப்பவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து வருபவர்கள். விண்ணப்பத்துக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்து பல்லாயிரம் கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
 இதன் பின்னணியில் பல கேள்விகளுக்கு விடை அளிக்க இந்திய ரயில்வேத் துறை கடமைப்பட்டிருக்கிறது. பணியிடங்களை நிரப்புவதற்கு மூன்று ஆண்டு இடைவெளி தேவைதானா? சாதாரண அடிமட்டப் பணிகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் எதற்கு? ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் பணியிடங்களை நிரப்பாமல் மொத்தமாக தேர்வுகள் நடத்தி நிரப்புவது ஏன்? இதுபோன்ற பல கேள்விகளை எழுப்புகிறது அந்த வன்முறை நிகழ்வு.
 காவல்துறையில் காவலர் பணியிடங்களுக்கும், ஏனைய அரசுத்துறைகளில் கடைநிலை ஊழியர் பணியிடங்களுக்கும் ஆயிரக்கணக்கான பொறியியல், நிர்வாகவியல், முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிப்பது, பரவலாக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது. அரசுத்துறை தவிர்த்த தனியார் துறை வேலைவாய்ப்பு என்பதும்கூட, கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு குறைந்துவிட்டது.
 "கிக்' எனப்படும் ஓலா, உபேர் ஓட்டுநர்கள், ஸ்விக்கி, ஜொமேட்டோ உணவு விநியோக ஊழியர்கள் போன்றோர் "கிக்' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது தின ஊதியமோ, வார ஊதியமோ, மாத ஊதியமோ இல்லாமல் ஒவ்வொரு பணிக்கும் ஊதியம் பெறுபவர்கள் இவர்கள். இதற்கான வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதால் வேலையின்மை அகன்றுவிட்டதாகக் கருத முடியாது.
 பொருளாதார வளர்ச்சி என்பது இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக இல்லாமல் போனால், வளர்ச்சி என்பது கானல் நீராகத்தான் இருக்குமே தவிர, நிஜமான வளர்ச்சியாக இருக்காது. இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் வேலைவாய்ப்பின்மை என்பதை உணர்ந்து மத்திய - மாநில ஆட்சியாளர்கள் செயல்படாமல் போனால், விளைவு விபரீதமாக இருக்கும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT