தலையங்கம்

வலிமையின் வெளிப்பாடு! | இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி குறித்த தலையங்கம்

10th Feb 2022 02:00 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 இந்திய - ரஷிய கூட்டு முயற்சியான "பிரமோஸ் ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணைகளை பிலிப்பின்ஸ் கொள்முதல் செய்ய ஒப்பந்தமாகியிருக்கிறது. ஒலியைவிட அதிவேகத்தில் பயணிக்கக்கூடிய பிரமோஸ், தரையிலிருந்து மட்டுமல்லாமல், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், விமானங்கள் ஆகியவற்றிலிருந்தும் ஏவக்கூடிய திறன் பெற்றது.
 400 கி.மீ. தொலைவு இலக்குவரை தாக்கும் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணைகள், 2020 செப்டம்பரில் வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு இந்தியாவின் முப்படைகளிலும் இணைக்கப்பட்டன. ரூ.2,800 கோடிக்கு பிலிப்பின்ஸ் கடற்படை, இந்தியாவில் உற்பத்தியாகும் அந்த ஏவுகணைகளை வாங்க இருக்கிறது.
 இந்துமகா கடல் பகுதியில் இந்தியா முக்கியமான பங்கு வகிக்கிறது. ஏற்கெனவே மோரீஷஸ், செஷல்ஸ் நாடுகளின் பாதுகாப்புக்கு துணை நிற்கிறது. இந்துமகா கடலின் மேற்குப் பகுதியில் உள்ள மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பாதுகாப்பு உதவியைப் பெறுகின்றன. கிழக்குப் பகுதியில் தென்சீனக் கடலில் சீனாவுடன் பிரச்னைகள் உள்ள ஆசியான் நாடுகளும்கூட இந்தியாவின் பாதுகாப்பு உறவை விரும்புகின்றன.
 ஆசியான் நாடுகளுடன் பொதுவான நட்புறவும், அந்த அமைப்பில் உள்ள ஆறு நாடுகளுடன் கடல் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தமும் ஏற்கெனவே இந்தியாவுக்கு இருக்கின்றன. ஆசியான் நாடுகளும் சரி, இந்தியாவும் சரி வெளிப்படையான சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை மேற்கொள்ள விரும்பாததால், கூட்டுறவுடன் நின்றுவிட்டன.
 தென்சீனக் கடலையொட்டிய சில நாடுகள் அவற்றின் கடல் எல்லையையொட்டிய தீவுகளை சீனாவிடம் இழந்து கொண்டிருக்கின்றன. சீனாவின் கடலோரக் காவல் படையின் துணையுடன், சீன மீன்பிடி கப்பல்கள் அண்டை நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. சீனாவின் 2021 சட்டம், அது தனக்குத் தானே வகுத்துக் கொண்டிருக்கும் எல்லையை உறுதிப்படுத்துவதால், பல பிரச்னைக்குரிய அண்டை நாட்டுத் தீவுகளை சொந்தம் கொண்டாடுகிறது. குறிப்பாக, வியத்நாமும் பிலிப்பின்ஸும் சீன கடற்படையின் ஊடுருவல்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், தங்களது பாதுகாப்புக்காக சில நாடுகள் இந்தியாவை நாட வைத்திருக்கின்றன.
 2020-இல் மியான்மருக்கு இந்தியா நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வழங்கியது. இந்தியாவின் அண்டை நாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த "சாகர்' திட்டத்தின் அடிப்படையில் உதவிகள் செய்து வருகிறது. வியத்நாம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் தங்களது கடல் எல்லையைப் பாதுகாப்பதற்கு இந்தியாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்குவதில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆகாஷ், அஸ்த்ரா, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ரேடார்கள், ஏவுகணைகளுக்கு உலக அளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
 கடந்த ஆண்டு வரை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் டிஆர்டிஓ முனைப்பு காட்டியது. இப்போது ஐந்து பில்லியன் டாலர் (சுமார் ரூ.37,416 கோடி) இலக்கு நிர்ணயித்து ராணுவ தளவாட ஏற்றுமதிக்கு முன்னுரிமை வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதன் விளைவுதான் பிலிப்பின்ஸுடனான பிரமோஸ் ஒப்பந்தம். வியத்நாமும் இந்தோனேசியாவும் ஏற்கெனவே தயாராக இருந்த நிலையில், அவற்றை முந்திக்கொண்டு பிலிப்பின்ஸ் ஒப்பந்தம் மேற்கொண்டது ஆச்சரியப்படுத்துகிறது.
 தென்னாப்பிரிக்கா, கென்யா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட ஏனைய பல நாடுகளும் பிரமோஸ் ஏவுகணைகளைப் பெறுவதில் ஆர்வமாக இருக்கின்றன. இந்துமகா கடலின் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்த நாடுகள் எதுவுமே நேரடியாக சீனாவால் பாதிக்கப்படாதவை என்பதையும், வியத்நாம், இந்தோனேசியா, பிலிப்பின்ஸ் நாடுகள் சீனாவுடன் பிரச்னைகள் உள்ள நாடுகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
 தொடர்ந்து பிரமோஸ் உற்பத்தியும், ஏற்றுமதியும் நடைபெற மூன்று பிரச்னைகளை டிஆர்டிஓ எதிர்கொள்ளக் கூடும். முதலாவது பிரச்னை, மின்கலத்துக்கான 2.75 பில்லியன் டாலர் (சுமார் ரூ.20,579 கோடி) செலவு. சிறிய நாடுகளால் அந்த அளவிலான முதலீடு சாத்தியமா என்பது தெரியவில்லை. இரண்டாவது பிரச்னை, பிரமோஸ் ஏவுகணை இந்திய - ரஷிய கூட்டுறவு முயற்சி. இந்தியாவின் பிரமோஸ் ஏற்றுமதிக்கு ரஷியா தடையாக இல்லை. அதே நேரத்தில், ரஷியா கூட்டுறவுடனான ஏவுகணையை இந்தியா ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என்கிற கேள்வி எழுகிறது.
 மூன்றாவது பிரச்னை, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வட கிழக்கு ஆசியாவில் சீன - ரஷிய கூட்டணி ஏற்பட்டிருக்கிறது. தென்சீனக் கடலில் ரஷியாவுக்கு தொடர்பு இல்லாவிட்டாலும்கூட, சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரிக்குமா என்பது சந்தேகம்தான். இதுவரை பிரமோஸ் விற்பனை குறித்து சீனா கருத்து தெரிவிக்கவில்லை. ரஷியாவின் உதவியுடன் முட்டுக்கட்டைபோட முயற்சித்தால் வியப்படையத் தேவையில்லை.
 இந்தியாவின் தளவாட உற்பத்தி புது பரிமாணத்தைக் காண்கிறது. 2016-இல் ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்ததன் மூலம், 300 கி.மீ. தூரத்துக்கும் அதிகமாக செலுத்தக்கூடிய ஏவுகணைகளை தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது. லடாக், அருணாசல பிரதேச எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியின் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிரமோஸ் ஏவுகணைகள் இனிமேல் கடல் கடந்து பல நாடுகளின் பாதுகாப்புக்குப் பயன்படப் போகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT