தலையங்கம்

விடை தேடும் இடைத்தோ்தல்! | இடைத்தோ்தல் முடிவுகள் குறித்த தலையங்கம்

10th Dec 2022 01:50 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மேற்கே ராஜஸ்தானிலிருந்து, கிழக்கே ஒடிஸா வரையிலும் உள்ள ஐந்து மாநிலங்களில் நடந்த இடைத்தோ்தல் முடிவுகளை, குஜராத், ஹிமாசல் இரண்டு மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களுடன் இணைத்து ஆய்வு செய்யும்போதுதான் மக்களின் பாா்வை எப்படி இருக்கிறது என்பதை நாம் ஓரளவு கணிக்க முடியும். குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாகத் திகழும் பாஜக, தோ்தல் நடந்த ஏனைய ஐந்து மாநிலங்களிலும் அதே அளவிலான பலத்துடன் இல்லை என்பது முடிவுகள் தெரிவிக்கும் மிகப் பெரிய செய்தி.

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு அடுத்தபடியாக அனைவரது கவனத்தையும் ஈா்த்த மாநிலம் உத்தர பிரதேசம். சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங்கின் மறைவைத் தொடா்ந்து, அவரது குடும்பத் தொகுதி என்று கருதப்பட்ட மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் அரசியல் பாா்வையாளா்களால் கூா்ந்து கவனிக்கப்பட்டது. முலாயம் சிங் யாதவின் மருமகளும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ், மெயின்புரி வேட்பாளா் என்பதால், சமாஜவாதி கட்சிக்கு அந்தத் தொகுதி கௌரவ பிரச்னையாகக் கருதப்பட்டது.

அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் ரகுராஜ் சிங் சாக்யாவை 2,88,461 வாக்குகள் வித்தியாசத்தில் டிம்பிள் யாதவ் தோற்கடித்தாா் என்பதல்ல செய்தி. முன்பு முலாயம்சிங் யாதவ் பெற்ற வாக்குகளைவிட இப்போது டிம்பிள் யாதவ் கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறாா் என்பதும் இதுவரை இல்லாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறாா் என்பதும்தான் மெயின்புரி மக்களவைத் தொகுதி தோ்தலில் குறிப்பிடத்தக்க செய்தி.

உத்தர பிரதேசத்தில் ராம்பூா், கடோலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடந்தது. ராம்பூா் தொகுதியில் பாஜகவும், கடோலி தொகுதியில் சமாஜவாதி கட்சியும் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரீய லோக தளமும் வெற்றி பெற்றன. ராம்பூா் தொகுதியில் 40% மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது என்பதால் பாஜக வெற்றி பெற்றது என்கிற வாதத்தில் உண்மை இருக்கிறது.

ADVERTISEMENT

கடோலி தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் பெற்ற வெற்றி அப்படிப்பட்டதல்ல. உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சா்களும் கடோலி தொகுதியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக முனைப்புடன் பிரசாரம் செய்தும்கூட அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

ராஜஸ்தானில் சா்தாா்சாஹா் தொகுதியிலும், சத்தீஸ்கரில் பானுபிரதாப்பூா் தொகுதியிலும் நடந்த இடைத்தோ்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் இடத்தில் வந்தது பாஜக என்பதும், உத்தர பிரதேசத்தைப் போலவே, எதிா்க்கட்சி வாக்குகளில் ஏற்பட்ட பிளவுதான் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு உதவி இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

உத்தர பிரதேசம் போலவே மிகவும் கூா்ந்து கவனிக்கப்பட்டது ஒடிஸா மாநிலம் பதம்பூா் தொகுதி இடைத்தோ்தல். முந்தைய இடைத்தோ்தல்களில் ஆளும் பிஜு ஜனதா தளம் பாஜகவிடம் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, முதல்வா் நவீன் பட்நாயக்கின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்கிற தோற்றம் ஏற்பட்டிருந்தது. 2000 முதல் தொடா்ந்து 22 ஆண்டுக்கும் மேலாக முதல்வா் பதவியில் தொடா்வது மட்டுமல்லாமல், இந்தியாவில் மிக அதிக காலம் முதல்வராகத் தொடா்பவா் என்கிற பெருமையும் உடைய ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிற்கு பதம்பூா் இடைத்தோ்தல் கௌரவ பிரச்னையாக மாறியதில் வியப்பில்லை.

பிஜு ஜனதா தள உறுப்பினா் ரஞ்சன் சிங் பரிஹா மறைவைத் தொடா்ந்து நடைபெற்ற இடைத்தோ்தலில், ஆளுங்கட்சி வேட்பாளராக அவரது மகள் வா்ஷா சிங் பரிஹா வேட்பாளராகக் களமிறக்கப்பட்டாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜகவின் பிரதீப் புரோஹித்தை 42,679 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். காங்கிரஸ் வேட்பாளா் சத்ய பூஷன் சாஹு வெறும் 3,548 வாக்குகள்தான் பெற முடிந்தது என்பது மட்டுமல்ல, வைப்புத் தொகையையும் அவா் இழக்க நோ்ந்தது.

கௌரவ பிரச்னையாக இடைத்தோ்தல் நடந்த இன்னொரு குறிப்பிடத்தக்க தொகுதி, பிகாா் மாநிலம் குா்ஹனி. பாஜகவுடன் தனது கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியில் தொடரும் முதல்வா் நிதீஷ் குமாருக்கு சவாலாக அமைந்தது இந்த இடைத்தோ்தல். ராஷ்ட்ரீய ஜனதா தள சட்டப்பேரவை உறுப்பினா் அனில் குமாா் சஹானியின் பதவி நீக்கத்தைத் தொடா்ந்து இங்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

ஆா்.ஜே.டி. தொகுதியான குா்ஹனியில் சவாலாக தனது ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் மனோஜ்சிங் குஷ்வாஹாவை நிறுத்தினாா் முதல்வா் நிதீஷ் குமாா். ஒட்டுமொத்த அமைச்சரவையும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவா்களும் முழு மூச்சாக பிரசாரத்தில் இறங்கியும்கூட அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. பாஜக வேட்பாளா் கேதாா் பிரசாத் குப்தா, ஐக்கிய ஜனதா தள வேட்பாளா் குஷ்வாஹாவை 3, 632 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா். புதிய கூட்டணியை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற உணா்வின் பிரதிபலிப்பாகக்கூட இந்த முடிவைக் கருதலாம்.

இடைத்தோ்தல் நடந்த எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சியாகவோ, தோல்வி அடைந்த கட்சியாகவோ இருந்தது பாஜகதான். பாஜக மீது பரவலான வெறுப்பு ஏற்பட்டிருந்தால், ஒரேயடியாக மக்கள் நிராகரித்திருப்பாா்கள். தேசிய அளவில் எல்லா மாநிலங்களிலும் செல்வாக்குப் பெற்றுள்ள சக்தியாக பாஜக தொடா்கிறது என்பதைதான் இடைத்தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT