தலையங்கம்

தடை அகன்றது!|இந்தியா-ஆஸ்திரேலியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் குறித்த தலையங்கம்

8th Dec 2022 03:22 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 ஆஸ்திரேலிய நாடாளுமன்றம், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இரு நாட்டு உறவுகளுக்கு இடையே முக்கியமான திருப்புமுனையாக இது அமையக்கூடும். நீண்டநாள்களாகவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இப்போது தடையற்ற வர்த்தகத்துக்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.
 இந்த ஆண்டில் இந்தியா கையொப்பமிடும் இரண்டாவது முக்கியமான வர்த்தக உடன்பாடாக ஆஸ்திரேலியாவுடனான இந்த பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அமையும். இதற்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்துடன் இதுபோன்ற ஒப்பந்தம் கையொப்பமானது.
 கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்று வந்த கலந்தாலோசனைகளும் பேச்சுவார்த்தைகளும் சில பிரச்னைகளால் முடிவு எட்டப்படாமல் தொடர்ந்தன. முந்தைய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் கையொப்பமிட்டு உருவான இந்த ஒப்பந்தம், இப்போதைய பிரதமர் ஆண்டனி அல்பனீஸின் முன்னெடுப்பால் நாடாளுமன்ற அங்கீகாரம் பெற்றிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் இரண்டு பிரதமர்களுக்கும் இருக்கும் நெருக்கம் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு முக்கியமான காரணம்.
 உலக வர்த்தக நிறுவனத்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச வர்த்தகத்தைக் கட்டமைக்க முடியவில்லை. அதனால் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகங்களை ஊக்குவிக்கவும் அதிகரிக்கவும் இருதரப்பு, பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமாகின்றன.
 உலக வர்த்தக நிறுவனத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஆதிக்கம் காணப்படுவதால் இந்தியா போன்ற நாடுகள் பல பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. அனைவருக்கும் பொதுவான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இரு தரப்பு, பல தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
 உலக வர்த்தக நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, சர்வதேச அளவில் 355 தடையற்ற ஒப்பந்த வர்த்தகங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தங்களது வர்த்தகத்தை அதிகரித்துக்கொள்ளவும் சர்வதேச மதிப்புக்கூட்டு சங்கிலியில் (குளோபல் வேல்யூ செயின்) இணையவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் தேவைப்படுகின்றன என்பதுதான் காரணம். இந்த ஒப்பந்தங்கள் மட்டுமே மிகப்பெரிய வர்த்தக அதிகரிப்புக்கு உத்தரவாதம் அளித்துவிடாது. ஆனால், ஒருசில துறைகளில் முதலீடுகளை ஈர்க்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தங்கள் உதவக்கூடும்.
 உலகிலுள்ள பெரும்பாலான வர்த்தகம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் நடைபெறுவதில்லை. கிழக்காசிய பொருளாதாரங்களும், மிகக்குறைந்த இறக்குமதி வரிகள் விதிக்கும் நாடுகளும்தான் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பு, சீனா, ஜப்பான், ஆசியா, இந்தியா ஆகியவற்றுடன் அமெரிக்கா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. அதேபோல, ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு கச்சாப் பொருள்கள் வழங்கும் நாடுகள், சிறிய நாடுகளுடன் மட்டும்தான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
 அதேபோல, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் கூறிவிட முடியாது. ஒப்பந்தம் செய்துகொள்ளும் நாடுகளில் இறக்குமதி வரிகள் குறைவாக இருந்தால், அதனால் நமக்கு பயன் இருக்காது. மலேசியா, ஜப்பான், நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தம் ஒருசில பொருள்களுக்கு மட்டும்தான் பயனுடையதாக இருக்கும். ஏனென்றால், பெரும்பாலான பொருள்களுக்கான இறக்குமதி வரி அந்த நாடுகளில் குறைவு.
 இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான தற்போதைய இருதரப்பு வர்த்தக மதிப்பு ரூ.3,100 கோடி. அடுத்த 5 ஆண்டுகளில், இரு நாடுகளும் சம அளவில் இதை ரூ.5,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளன. தங்களது பலம், சாதகங்கள், தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதிகள் நிலக்கரி, அலுமினியம், தாதுப்பொருள்கள், உலோகங்கள், வேளாண் பொருள்கள் ஆகியவை. இப்போதைக்கு இந்தியா இறக்குமதி வரியில் 40% குறைக்கவும் அதை படிப்படியாக 70% வரை அதிரிக்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறது.
 ஜவுளி, ஆயத்த ஆடை, வேளாண் பொருள்கள், தோல், காலணிகள், நகைகள், தொழில்துறை உபகரணங்கள், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட அதிக வேலைவாய்ப்பு வழங்கும் ஏற்றுமதி துறைகளில் இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 120 துறைகளில் இந்தியாவுக்கு "அதிக முன்னுரிமை தேசம்' அங்கீகாரம் வழங்கப்படுவதால் சேவைத் துறைக்கு மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். சில துறைகளில் ஆண்டுதோறும் நுழைவு அனுமதிக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும், இந்திய மாணவர்களுக்கு படிப்புக்கு பின்னர் வேலை அனுமதி வழங்கவும் ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது.
 வளர்ச்சியடைந்த நாட்டுடன் இந்தியா ஏற்படுத்திக்கொள்ளும் முதலாவது இருதரப்பு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இது. இரு நாடுகளும் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர் என்பதாலும் அரசியல், நீதித்துறை போன்றவற்றில் ஒற்றுமை காணப்படுவதாலும் இயற்கையான நெருக்கம் ஏற்பட்டதில் வியப்பில்லை. ஏற்கெனவே அமெரிக்கா, ஜப்பான் இணைந்த "க்வாட்' அமைப்பில் உறுப்பினர்கள். ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா நாடுகளுடனும் இதேபோன்ற ஒப்பந்தம் விரைவிலேயே கையொப்பமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT