தலையங்கம்

காட்சி மாற்றம்! | பாகிஸ்தான் ராணுவத்துக்கு புதிய தளபதி பதவியேற்றிருப்பது குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து ஒரே நாளில் விடுதலை பெற்ற அண்டை நாடுகள். இந்தியாவில் ராணுவ தலைமைத் தளபதியின் நியமனம் என்பது பெரும்பாலும் மக்களின் கவனத்துக்குக்கூட வராத நடைமுறை. பாகிஸ்தானில் அப்படியல்ல. ராணுவ தலைமைத் தளபதியின் நியமனம் என்பது பிரதமர் நியமனத்தைவிட முக்கியத்துவம் பெறும் செய்தி. இந்தியாவில் ராணுவ தலைமைத் தளபதியை பிரதமர் நியமிக்கிறார் என்றால், பாகிஸ்தானில் ராணுவ தலைமைத் தளபதிதான் பிரதமரையே நியமிக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அங்கு ராணுவ தளபதி அதிகாரம் பெற்றவர்.
 ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா தனது ஆறாண்டு பதவிக் காலத்தைத் தொடர்ந்து மேலும் மூன்று ஆண்டுகால நீட்டிப்பு கேட்டிருக்கலாம்; அவர் கேட்கவில்லை. பதவியிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்தார். ஜெனரல் பாஜ்வாவைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தின் 17-ஆவது தலைமைத் தளபதியாக அவரது நம்பிக்கைக்குரியவரான லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
 முனீரின் நியமனத்துக்குப் பின்னால், ஏராளமான அரசியல் நாடகங்கள் நடந்தேறின. ஜெனரல் பாஜ்வாவால் 2018 அக்டோபர் மாதம் ஐ.எஸ்.ஐ. என்கிற பாகிஸ்தான் உளவுத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட சையது அசிம் முனீர், அன்றைய பிரதமர் இம்ரான் கானின் வற்புறுத்தலால் எட்டே மாதத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிபியின் ஊழல்கள் குறித்து முனீர் விசாரிக்கத் தொடங்கியதுதான் பதவி மாற்றத்துக்கான காரணம். அவருக்கு பதிலாக இம்ரான் கானின் நம்பிக்கைக்குரிய லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் நியமிக்கப்பட்டார்.
 அதிபர் ஆரீஃப் அல்வி, இம்ரான் கானால் நியமிக்கப்பட்ட அவரது ஆதரவாளர். முனீரின் பதவிக்காலம், ஜெனரல் பாஜ்வாவின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு நாள்கள் முன்பாகவே முடிவடையும் என்பதால், தலைமைத் தளபதி நியமனத்தை தாமதிக்க நினைத்தார் அதிபர்.
 பிரதமர் ஷெரீஃப் தலைமையிலான அரசுத்தரப்பு விழித்துக் கொண்டது. முனீரை ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாக நியமிக்க முடிவு செய்தது. அதற்கு அல்வியின் ஒப்புதல் தேவையில்லை. வேறு வழியில்லாமல், பணிமூப்பு அடிப்படையில் லெப்டினன்ட் ஜெனரல் முனீரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தார் அல்வி.
 திருக்குரானை மனப்பாடமாகக் கற்றுத் தேர்ந்தவர் முன்பு பாகிஸ்தான் ஒற்றர்படைத் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர். அவருக்கு நீண்ட ராணுவ அனுபவம் இருப்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஷெரீஃப் அரசின் முடிவுக்குப் பின்னால் பணிமூப்பு அடிப்படை இருந்ததால்தான், இம்ரான் கான் உள்பட எந்த அரசியல் தரப்பினராலும் அரசின் முடிவை எதிர்க்க முடியவில்லை.
 ஜெனரல் பாஜ்வாவின் தலைமையில், பாகிஸ்தான் ராணுவம் உள்நாட்டு அரசியலில் முக்கியப் பங்கு வகித்தது. 2018-இல் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதவியிலிருந்து அகற்றியதும், பாஜ்வாவின் விருப்பப்படிதான் என்பது உலகறிந்த ரகசியம். தன்னை ஆட்சியிலிருந்து அகற்றியதும், தன்னைக் கொல்ல சதி செய்ததும் ஜெனரல் பாஜ்வாவும், மூத்த ராணுவ அதிகாரிகளும்தான் என்று இம்ரான் கான் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
 இது புதிதொன்றும் அல்ல. தனக்கு எதிராக சதி செய்து, நீதித்துறையை பயன்படுத்தி தன்னை பதவியிலிருந்து அகற்றி இம்ரான் கானை பதவியில் அமர்த்தியது ஜெனரல் பாஜ்வா என்று முந்தைய பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு முன்னால் இருந்த எல்லா பிரதமர்களும் ராணுவத்தின் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள். அவற்றில் உண்மை இல்லாமல் இல்லை.
 இந்தப் பின்னணியில்தான் இப்போது லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர் பாகிஸ்தானின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றிருக்கிறார். 2019 புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலின்போது ஐ.எஸ்.ஐ. தலைவராக இருந்த அசிம் முனீர் இப்போது தலைமைத் தளபதியாகியிருக்கிறார். பொதுவெளியில் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் அதிகாரிகளில் ஒருவரான முனீரின் கண்ணோட்டம் குறித்து யாருக்கும் தெளிவாகத் தெரியாது.
 பாகிஸ்தான் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி, ஜெனரல் பாஜ்வாவின் இந்தியாவுடனான மோதல்கள் இல்லாத அணுகுமுறை, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான உறவு, அரசியல் நிலைப்பாடு, நிர்வாகத் தலையீடு போன்ற பிரச்னைகளில் புதிய ராணுவ தலைமைத் தளபதியின் பார்வை எப்படி இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், இம்ரான் கானின் கட்சி ஆட்சியைப் பிடிக்குமானால், அவருக்கும், ராணுவத்தின் தலைமை தளபதி முனீருக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 தேர்தல் நடப்பதும், அடுத்த ஆட்சி அமைவதும் லெப்டினன்ட் முனீரின் கையில் என்பது மட்டும் இப்போதைக்கு எல்லோருக்கும் தெரிந்த உண்மை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, எப்போதுமே ராணுவம்தான் அதிகார மையம். லெப்டினன்ட் ஜெனரல் சையது அசிம் முனீர் அதன் தலைமைத் தளபதி. வருங்கால பாகிஸ்தான் அரசியலை ஜெனரல் பாஜ்வாபோல அவர் "இயக்குவாரா', இல்லை முந்தைய ராணுவ தளபதிகளான அயூப் கான், ஜியா உல் ஹக், முஷாரஃப் வரிசையில் தானே "நடத்துவாரா' என்பதை இப்போதே சொல்ல முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT