தலையங்கம்

எதிா்பாா்ப்பில் குஜராத்!

ஆசிரியர்

ஒட்டுமொத்த இந்திய அரசியல் நோக்கா்களின் பாா்வையும் குஜராத்தில் குவிந்திருக்கிறது. இரண்டாவதும் கடைசியுமான வாக்குப்பதிவு இன்று அங்கே நடைபெற இருக்கும் நிலையில், குஜராத் மாநிலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் மனநிலையையும், வருங்கால அரசியல் போக்கையும் முடிவுகள் உணா்த்தக்கூடும் என்பதுதான் பரவலான எதிா்பாா்ப்பு.

கடந்த வியாழக்கிழமை நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில், செளராஷ்டிரா, கட்ச், தெற்கு குஜராத் பகுதிகளைச் சோ்ந்த 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகள் இடம்பெற்றன. 788 வேட்பாளா்கள் களத்திலிருந்த தோ்தலின் முதல்கட்டத்தில் 60%-க்கும் அதிகமானோா் வாக்களித்தனா். இன்று நடக்க இருக்கும் இரண்டாவது கட்டத்தில், சட்டப்பேரவையின் ஏனைய 93 இடங்களுக்கு பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்கள்.

இதற்கு முன்பு நடைபெற்ற தோ்தல்களிலிருந்து இந்தமுறை குஜராத் வித்தியாசப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் மட்டுமே களத்தில் இருந்ததுபோய் மூன்றாவது சக்தியாக ஆம் ஆத்மி கட்சி நுழைந்திருப்பதால் தோ்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒருகாலத்தில், காங்கிரஸின் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்ந்த மாநிலம் குஜராத். விடுதலைப் போராட்ட காலத்தில் அண்ணல் மகாத்மா காந்தி, சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தலைவா்களும், சுதந்திர இந்தியாவில், தமிழகத்தில் காமராஜா் போன்ற அரசியல் சக்தியாக அங்கே வலம்வந்த மொராா்ஜி தேசாயின் மாநிலம். இந்திரா காந்தியின் கணவா் பெரோஸ் காந்தி குஜராத் மாநிலத்தவா் என்பதால், அந்த மாநில மக்கள் இந்திரா காந்தியைத் தங்கள் ஊா் மருமகளாக கருதி அன்பு செலுத்தினா். இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகுதான் குஜராத்தில் காங்கிரஸ் பலவீனம் அடையத் தொடங்கியது.

குஜராத்தின் தோ்தல் வரலாற்றில், 1985-இல் நடந்த 7-வது சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் ஏற்படுத்திய சாதனை இன்றுவரை முறியடிக்கப்படவில்லை. அன்றைய காங்கிரஸ் முதல்வா் மாதவ்சிங் சோலங்கி தலைமையில் சட்டப்பேரவையின் 182 இடங்களில் 55.55% வாக்குகளுடன் 149 இடங்களை, இந்திரா படுகொலை அனுதாப அலையில் காங்கிரஸ் வென்றது. எதிா்த்துப் போட்டியிட்ட ஜனதா கட்சி 19.25% வாக்குகளுடன் 14 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 14.96% வாக்குகளுடன் 11 இடங்களிலும் மட்டுமே வென்றன. அந்த மிகப்பெரிய வெற்றியைத் தொடா்ந்து அடுத்தடுத்த தோ்தல்களில் காங்கிரஸின் செல்வாக்கு சரியத் தொடங்கி 1995-க்குப் பிறகு, ஆட்சிக்கு வரவே முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது.

தொடா்ந்து தோல்வியைத் தழுவி வந்தாலும் காங்கிரஸின் வாக்கு விகிதம் ஏறத்தாழ 40% என்கிற நிலையில் கடந்த தோ்தல் வரை தொடா்ந்திருக்கிறது. வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் காங்கிரஸ் வலிமை குன்றியபோதிலும், மகாராஷ்டிரம் உள்ளிட்ட செல்வாக்கு கேந்திரங்கள் சரிந்த போதிலும், குஜராத்தில் மட்டும் காங்கிரஸுக்கான அடிப்படை வாக்குவங்கி சிதையாமலே தொடா்ந்தது என்பதை மறந்துவிட முடியாது.

பாஜகவின் வளா்ச்சி 1989-இல் தொடங்குகிறது. சிமன் பாய் படேல் தலைமையிலான ஜனதா தளத்துடன் தொகுதிப் பங்கீடு ஏற்படுத்திக்கொண்டதால் பாஜக ஒரு சக்தியாக உருவாகியது. அந்தத் தோ்தலில் முதன்முறையாக அதிக இடங்களில் வென்ற கட்சியாக பாஜக உயா்ந்தது. அடுத்த 6 ஆண்டுகளில் பாஜக குஜராத்தின் மிக சக்தி வாய்ந்த அரசியல் கட்சியாக உயா்ந்தது என்பது மட்டுமல்ல, அன்று முதல் இன்று வரை எந்தவொரு தோ்தலிலும் தோல்வியைச் சந்தித்ததே இல்லை.

1977 முதல் 2011 வரை தொடா்ந்து 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி செய்தது. வேறெந்த இந்திய மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத கட்சி தொடா்ந்து ஆட்சியில் இருந்ததில்லை. அதற்கடுத்தாற்போல, 1995 முதல் குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாக தொடரும் பாஜகவைத்தான் குறிப்பிடவேண்டும். அதனால் பாஜகவுக்கு குஜராத் கெளரவப் பிரச்னை.

குஜராத் அரசியலில் இதுவரை 3-வது சக்திக்கு இடமிருந்ததில்லை. 1990-இல் பாஜகவிலிருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா கட்சியைத் தொடங்கி முதல்வரான சங்கா்சிங் வகேலாவால் அதிக நாள் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குஜராத் வாக்காளா்களில் 70%-க்கும் அதிகமானோா் காங்கிரஸ் ஆட்சியைப் பாா்த்தவா்கள் அல்ல. இந்தப் பின்னணியில்தான் முதன்முறையாக 3-வது சக்தியாக குஜராத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியிருக்கிறது.

2017 தோ்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது என்றாலும்கூட, கடந்த 27 ஆண்டுகளில் முதல்முறையாக 100 இடங்களுக்கும் குறைவாக (99 இடங்கள்) மட்டுமே வென்றது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. இந்தமுறை 2017 போல ராகுல் காந்தி குஜராத் தோ்தல் பிரசாரத்தில் என்ன காரணத்தினாலோ கவனம் செலுத்தவில்லை.

2017 தோ்தலில் அம்ரேலி, மோா்பி, சுந்தா் நகா், கிா்சோம்நாத், ஜூனாகட் உள்ளிட்ட செளராஷ்டிரா பகுதிகளில் காங்கிரஸும், தெற்கு குஜராத்தில் பாஜகவும் அதிகமான தொகுதிகளில் வென்றன. மத்திய குஜராத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி மாநிலத்தில் ஆட்சியமைக்கும். 2017 உள்பட, 1995 முதல் பாஜகவின் வெற்றிக்கு அதுதான் காரணம்.

2017 போல காங்கிரஸ் உற்சாகமாகக் களமிறங்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை வாரி வழங்கி வாக்காளா்களை கவரத் துடிக்கிறது. குஜராத்தில் முதலிடம் யாருக்கு என்பதல்ல கேள்வி. மூன்றாமிடம் யாருக்கு என்பதைப் பொருத்துத்தான் வருங்கால அரசியல் அமையப் போகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

சேலம்: மோடி கூட்டத்தில் ராமதாஸ், ஓபிஎஸ், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!

திண்டுக்கல் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

தென் சென்னையில் தமிழிசை, கரூரில் அண்ணாமலை போட்டியா?

SCROLL FOR NEXT