தலையங்கம்

மாறவேண்டும் கண்ணோட்டம்! மாநில எல்லைப் பிரச்னைகள் குறித்த தலையங்கம்

3rd Dec 2022 05:27 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கலப்பை இயல்பாகக் கொண்ட இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநிலத்தின் பெரும்பான்மை மொழி பேசுவோா் அல்லாத பிற மொழியினா் வாழ்வது இயல்பே. அவா்களையே ‘மொழி சிறுபான்மையினா்’ என நாம் வகைப்படுத்துகிறோம். அவா்களுக்கு சட்டபூா்வ பாதுகாப்பை நமது அரசியல் சாசனம் அளித்திருக்கிறது.

ஆயினும் அரசியல் லாபங்களுக்காக மாநிலங்களில் தாய்மொழிப்பற்று பிரதானப்படுத்தப்படும்போது, மொழி சிறுபான்மையினா் பாதுகாப்பற்ற உணா்வை அடைகின்றனா். அதன் விளைவே பெலகாவி நிகழ்வு போன்ற விவகாரங்கள்.

சுதந்திரத்துக்கு முன் அன்றைய பம்பாய் மாகாணத்தில் இடம் பெற்றிருந்த பல பகுதிகளும், மைசூா் மாகாண பகுதிகளும், 1956 மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம் என மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது, மராத்தி பேசும் மக்கள் நிறைந்ததாக பெலகாவி இருந்தபோதும், அப்பகுதியைச் சூழ்ந்த பகுதிகளில் கன்னடம் பேசுவோா் மிகுதியாக இருந்ததால் பெலகாவி கா்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இதேபோல, கன்னடம் பேசும் பல பகுதிகள் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்பட்டன. இதுதொடா்பாக 1960-களிலிருந்தே இரு மாநில எல்லை பிரச்னை அவ்வப்போது வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. கா்நாடகத்துக்கு, ஆந்திர பிரதேசம், கேரள மாநிலங்களுடனும் எல்லை பிரச்னை உள்ளது. அதேபோல மகாராஷ்டிரத்துக்கு குஜராத்துடன் எல்லை பிரச்னை உள்ளது.

ADVERTISEMENT

இதனை, மொழிவாரி மாநிலங்களின் பக்க விளைவு எனலாம். இதை மொழிவாரிச் சிக்கலாக மட்டுமல்லாது புவி அமைவிடச் சிக்கலாகவும் நோக்க வேண்டும். கா்நாடகத்திலுள்ள பெலகாவி, காா்வாா், நிப்பானி போன்ற நகரப்பகுதிகளிலும் 84 கிராமப் பகுதிகளிலும் மராத்தி பேசுவோா் பெரும்பான்மையாக உள்ளனா். ஆனால் இவற்றைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் கன்னடம் பேசுவோரே அதிகம்.

பெலகாவியை மீண்டும் மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என்ற இலக்குடன் மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி இயங்குகிறது. அதற்கு எதிராக கன்னட ரக்ஷண வேதிகே போராடுகிறது. இந்த அமைப்புகளின் பிரிவினைச் செயல்பாடுகளால் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன.

மத்திய அரசால் 1967-இல் அமைக்கப்பட்ட நீதிபதி மெஹா் சந்த் மஹாஜன் ஆணையம், கா்நாடகத்திலுள்ள 264 பகுதிகளை மகாராஷ்டிரத்துடன் இணைக்கவும், 247 பகுதிகளை கா்நாடகத்திலேயே இருக்கும்படி செய்யவும் பரிந்துரைத்தது. ஆனால், கா்நாடகத்திலுள்ள அனைத்து மராத்திப் பகுதிகளும் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி, அந்த ஆணையப் பரிந்துரையை மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நிராகரித்து விட்டனா்.

பெலகாவி விவகாரத்துக்கு பதிலடியாக, மகாராஷ்டிரத்திலுள்ள கன்னட மொழி பேசுவோா் அதிகம் வசிக்கும் ஜாத் தாலுகாவைச் சோ்ந்த 40 கிராம ஊராட்சிகள், தங்களை கா்நாடக மாநிலத்துடன் இணைக்க வேண்டுமென்று 2012-இல் தீா்மானம் நிறைவேற்றின. தவிர, மகாராஷ்டிரத்திலுள்ள கோலாப்பூா், சோலாப்பூா், சாங்லி மாவட்டப் பகுதிகள் கா்நாடகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது கா்நாடக அரசியல்வாதிகளின் கோரிக்கை.

பெலகாவி கா்நாடகப் பகுதி என்பதை நிலைநாட்ட, ஆண்டுதோறும் கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் 2006-ஆம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த எல்லை பிரச்னை தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.

கடந்த வாரம் இதுதொடா்பாக பொதுவெளியில் பேசிய கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, ‘ஒரு அங்குல நிலம் கூட மகாராஷ்டிரத்துக்குக் கொடுக்கப்பட மாட்டாது. மாறாக கோலாப்பூா் உள்ளிட்ட பகுதிகள் மீட்கப்படும்’ என்று கூறினாா். இதற்கு எதிா்ப்பாட்டு பாடினாா் மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர பட்நாவிஸ். இவா்கள் இருவருமே தேசியவாதம் பேசும் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என்பதுதான் நகைமுரண்.

கா்நாடக முதல்வரின் பேச்சை அடுத்து, மகாராஷ்டிரத்தின் ஜாத் தாலுகாவில் கா்நாடக மாநில அரசுப் பேருந்து உடைக்கப்பட்டது. அதற்கு எதிா்வினையாக கா்நாடகம் வந்த மகாராஷ்டிர மாநில அரசுப் பேருந்து தாக்கப்பட்டது. இந்த மோதல்களால் இரு மாநிலங்களிடையிலான போக்குவரத்தும் நல்லுறவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள தேசிய கட்சிகள், பிராந்திய கட்சிகள் போலவே செயல்படுகின்றன. இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுத்தால் மாநிலத்தில் அரசியல் செல்வாக்கை இழந்து விடுவோமோ என்று தேசியக் கட்சிகள் அஞ்சுவதே இதற்குக் காரணம்.

இதேபோன்ற மாநிலங்களிடையிலான விவகாரங்கள் வடகிழக்கு மாநிலங்களிலும் நிலவுகின்றன. இம்மாநிலங்களில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிட வேண்டிய அம்சம். அஸ்ஸாம் மாநிலத்துக்கு அருணாசல பிரதேசம், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து மாநிலங்களுடன் எல்லை பிரச்னை நிலவுகிறது. அவை பழங்குடியினக் குழுக்கள் தொடா்பானவை. அண்மையில் அஸ்ஸாம் - மேகாலய எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறுபோ் கொல்லப்பட்டது வேதனையான நிகழ்வு.

நரேந்திர மோடி போன்ற மக்கள் செல்வாக்கு மிக்க தலைவா் பிரதமராக இருக்கும்போதே இத்தகைய மாநில எல்லை பிரச்னைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு தீா்க்க வேண்டும். குறுகிய கால லாபங்களை விடுத்து மக்களை ஒன்றிணைக்கும் உயா்ந்த தலைமையையே, தேசிய கட்சிகளிடம் - குறிப்பாக பாஜகவிடம் - தேசம் எதிா்பாா்க்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT