தலையங்கம்

பிடிவாதத்துக்கான நேரமல்ல! | விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த தலையங்கம்

22nd Aug 2022 12:00 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் வளர்ச்சிக்கும் ஊக்குவிப்புக்கும் காரணமாக இருக்க வேண்டிய விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் பாராட்டும்படியாக இல்லை. கிரிக்கெட்டில் தொடங்கி எல்லா விளையாட்டுகளின் சங்கங்களோ, சம்மேளனங்களோ அரசியலாக்கப்பட்டிருக்கும் அவலம் தொடர்கிறது. இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு அண்மையில் விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையும், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எதிரான தில்லி உயர்நீதிமன்ற உத்தரவும் அதன் வெளிப்பாடுகள்.

இந்திய கால்பந்து நிர்வாகத்தில் தேவையற்ற மூன்றாம் தரப்பு தலையீடுகள் இருப்பதாகக் கூறி, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு (ஏஐஎஃப்எஃப்) சர்வதேச கால்பந்து சம்மேளனம்(ஃபிஃபா) இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், அக்டோபரில் இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டிருக்கும் 17 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 85 ஆண்டுகால இந்திய கால்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக எதிர்கொள்ளும் இந்தத் தடை, சர்வதேச அரங்கில் நமக்குத் தலைக்குனிவு.

இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு நீதிமன்றத்தின் தலையீடு காரணம் என்பதுதான் வேடிக்கை. இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராகத் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரஃபுல் படேல். அவரின் பதவிக் காலம் கடந்த 2020 டிசம்பரில் நிறைவடைந்தும்கூட உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி பதவியில் தொடர்ந்து வந்தார்.

ADVERTISEMENT

மாநில கால்பந்து சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பிரஃபுல் படேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். சம்மேளனத் தலைவர் பொறுப்பிலிருந்து பிரஃபுல் படேலை நீக்கி நிர்வாகக் குழுவை கலைத்து, கடந்த மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சம்மேளனத்தை மேலாண்மை செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையில் இந்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பாஸ்கர் கங்குலி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் நிர்வாகிகள் குழுவை நியமித்தது.

அந்த நிர்வாகிகள் குழு பரிந்துரையின்படி, மாநில சங்கங்கள் மட்டுமல்லாமல் முக்கியமான விளையாட்டு வீரர்கள் 36 பேருக்கும் (அதாவது 50%) வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிகளின்படி, மூன்றாம் தரப்பு தலையீடு அனுமதிக்கப்படுவதில்லை. கால்பந்து சம்மேளனத்தின் தேர்தலில் அது அரசாங்கமானாலும், நீதிமன்றமானாலும் தலையிடுவதை சர்வதேச சம்மேளனம் விரும்புவதில்லை. விளையாட்டு வீரர்களுக்கான பங்களிப்பை அகற்றுவது அல்லது அதை 25%}ஆகக் குறைப்பது என்கிற சர்வதேச சம்மேளனத்தின் அறிவுரைகளை ஏற்காததால்தான் இப்போது தடையை எதிர்கொள்கிறது இந்திய கால்பந்து சம்மேளனம்.

முறையாகத் தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகக் குழு பதவியேற்றிருந்தால் நீதிமன்றத் தலையீட்டுக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது. சம்மேளன நிர்வாகத்தில் மூன்றாவது தரப்பு தலையீடு, அதாவது உச்சநீதிமன்றம் நியமித்த நிர்வாகிகள் குழு செயல்பட்டபோது, சர்வதேச கால்பந்து சம்மேளனம் பேச்சுவார்த்தைக்கு அவகாசம் வழங்கியது. ஆசிய கால்பந்து சம்மேளனத்தை இந்திய கால்பந்து சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. புதிய நிர்வாகக் குழு செப்டம்பர் மாதம் பதவியேற்க வேண்டும் என்பதுதான் ஃபிஃபாவின் கோரிக்கை. அப்படியிருக்கும்போது திடீரென்று தடை விதிக்கப்பட்டதற்கு பிரஃபுல் படேல் தலைமையிலான முந்தைய நிர்வாகக் குழுவின் பின்னணி இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் எழுகிறது.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் விதித்திருக்கும் தடையை உடனடியாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும். இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டவர்களை மக்கள் மன்றத்தில் அடையாளம் காட்டி விளையாட்டுத் துறையிலிருந்து அகற்றி நிறுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு.

விளையாட்டு சங்கங்களின் நிர்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பில் சிலர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்தச் சங்கங்களை தங்களது தனிப்பட்ட சொத்து போல அவர்கள் கருதுகிறார்கள். அதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம். விளையாட்டு சங்கங்களின் உயர் பதவிகளுக்கான கால, வயது வரம்பு உள்ளிட்டவை அடங்கிய தேசிய விளையாட்டுச் சட்டம் இந்திய விளையாட்டு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. தனிநபர் ஆதிக்கத்தை அகற்றுவதுதான் அதன் நோக்கம். ஆனால் கால்பந்து சம்மேளனம், ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட 54 சங்கங்கள் விதிமுறைகளை முறையாகவும் முழுமையாகவும் பின்பற்றுவதில்லை.

அதனால்தான் நீதிமன்றத் தலையீடு தேவைப்படுகிறது.

இந்தத் தடை காரணமாக சர்வதேச போட்டிகளில் நமது கால்பந்து அணிகள் பங்கேற்க முடியாது. கிளப் கால்பந்து போட்டிகளிலும் இந்தியக் குழுக்கள் கலந்துகொள்ள முடியாது. நடக்கவிருந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலகக் கால்பந்து போட்டி நடக்காது.

இது பிடிவாதம் பிடிப்பதற்கான நேரம் அல்ல. கால்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகளின் கால்களைக் கட்டிப் போடாதீர்கள். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகளை ஏற்று தடையை அகற்ற முயற்சிக்க வேண்டும். அதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது உறுதிப்பட வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT