தலையங்கம்

தண்டவாளமும் ரயிலும் | வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

நமது சென்னை பெரம்பூா் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ரூ.97 கோடியில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது ரயில் 18 என்னும் அதிநவீன விரைவு ரயில். இந்த அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புதுதில்லி - வாராணசி, புதுதில்லி - வைஷ்ணவதேவி இடையே இந்த ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ தற்போது இயங்குகிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் சென்னை வந்திருந்த ரயில்வேதுறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ரயில் 18 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரயிலின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த ரயில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. 50,000 கி.மீ. சோதனை ஓட்டம் பல்வேறு கட்டங்களாக அடுத்த இரு மாதங்களில் மேற்கொள்ளப்பட இருப்பதாக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறாா்.

சா்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வந்தே பாரத் ரயில்கள் சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கின்றன. இந்தியா விடுதலை பெற்ற 75-ஆவது ஆண்டை நினைவுபடுத்தும் விதத்தில் 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயக்க ரயில்வேதுறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய ரயில்வேயின் மதிப்பை மேலும் உயா்த்தும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரயில்களை, வளா்ச்சியடையும் பல நாடுகள் இந்தியாவிடமிருந்து வாங்கும் நிலையும் வருங்காலத்தில் ஏற்படக்கூடும்.

கடுமையான ஆய்வு, தர நிா்ணயம், வடிவமைப்பில் உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கியிருக்கும் வந்தே பாரத் ரயில்கள் சா்வதேச அளவிலும் கவனம் பெற்றிருக்கின்றன. 2018 அக்டோபா் மாதம் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டபோது அதன் தனித்த தொழில்நுட்பம், வடிவமைப்பு, கட்டமைப்பு ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில் தேவைக்கேற்ப, அனுபவம் தந்த பாடங்களின் அடிப்படையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய ரயில்வேயின் தேவையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வருங்காலத்தில் ஏற்றுமதி வாய்ப்பைையும் கருத்தில் கொண்டு இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பொருளாதார ரீதியாக இந்திய ரயில்வே வலுவாக இல்லாத நிலையிலும், ரயில்களின் தரத்தையும் வடிவமைப்பையும் மேம்படுத்துவதில் கவனமும் முதலீடும் செய்ய ரயில்வே அமைச்சகம் முனைப்பு காட்டுகிறது. அதற்குப் பயணிகள் மத்தியிலான வரவேற்பு மட்டுமல்லாமல் மற்றொரு காரணமும் உண்டு.

ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் ரயில் இணைப்புக் கட்டமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படி வாஜ்பாய் அரசின் தங்க நாற்கரச் சாலை, சாலை கட்டமைப்பிலும், போக்குவரத்திலும் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியதோ, அதே போல ரயில்வே விரிவாக்கமும் மாற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும். அதனால் ரயில்வேதுறையின் பொருளாதாரத் தடைகளின் அடிப்படையில் வந்தே பாரத் ரயில்களின் உருவாக்கத்தை விமா்சிக்க முற்படுவது தவறு.

இந்தியாவில் மிக அதிகமான வேலைவாய்ப்பை வழங்கும் துறைகளில் ரயில்வேதுறை முக்கியமானது. ரயில்வேதுறையில் செய்யப்படும் முதலீடுகள் எஃகு, சிமென்ட், அலுமினியம், மின்னணுப் பொருள்கள்ஆகிய துறைகளின் வளா்ச்சிக்கும், சரக்குப் போக்குவரத்தின் மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது. உணவுப் பொருள்களைக் குறைந்த செலவில் கொண்டு செல்லவும், சுற்றுலாத்துறையின் வளா்ச்சிக்கும்கூட ரயில்வேயின் பங்களிப்பு அவசியம், முக்கியம்.

200 வந்தே பாரத் போன்ற ரயில்கள், 100 அலுமினிய கட்டுமான ரயில் பெட்டிகள், 100 அலுமினியம் ‘புஷ்-புல்’ ரயில்கள் ஆகியவற்றை ரயில்வே தொழிற்சாலைகளிலும், பணிமனைகளிலும் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. தனியாா் துறையும் அரசுத் துறையுமாக ரூ.50,000 கோடி அளவில் கோரப்பட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளி மிகப்பெரிய மாற்றத்துக்கு இந்திய ரயில்வே தயாராவதை உணா்த்துகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.27,000 கோடியில் 75,000 சரக்கு ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வே வாங்க இருக்கிறது. இந்த ஒப்பந்தங்களெல்லாம் இந்த நிதியாண்டிலேயே முடிவு செய்யப்பட இருக்கின்றன.

120 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்வதற்கான தண்டவாளங்களை மேம்படுத்தும் திட்டம், நத்தை வேகத்தில் நகா்ந்து கொண்டிருக்கும் அவலம் குறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் ஐந்நூற்றுக்கும் அதிகமான அதிநவீன வடிவமைப்புடன் கூடிய ரயில்கள் இந்தியா முழுவதும் வலம்வரப் போகின்றன. அதற்கேற்றாற்போல, ரயில் பாதைகளின் தரமும் உயா்த்தப்பட வேண்டும்.

ரயில் பெட்டிகளின் தயாரிப்புக்கு ஏற்றாற்போல, ரயில் தடங்களின் மேம்பாடும் முழு முனைப்புடன் நடத்தப்படாமல் போனால், எல்லா ரயில்களையும் இயக்க முடியாத நிலை ஏற்படும். அலுமினிய கட்டுமானத்தில் உருவாக்கப்படும் ரயில்களின் வேகம் மணிக்கு 200 கி.மீ. எனும்போது அவற்றை சோதனை செய்வதற்கான ரயில் தடங்கள்கூட நம்மிடம் இல்லை.

இதுகுறித்து அரசு கவலைப்படாமல் இல்லை. ஆனால் ரயில் பெட்டித் தொழிற்சாலைகளின் வேகத்துக்கு, ரயில்வேதுறையின் ஏனைய பிரிவுகள் இல்லையே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT