தலையங்கம்

மூவா்ணத்தின் ஒளி வண்ணம்! சுதந்திர தினம் குறித்த தலையங்கம்

15th Aug 2022 05:44 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

உலகிலுள்ள ஏனைய நாடுகள் தங்களது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கும், இந்தியா என்கிற பாரதத் திருநாடு தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது.

நம்மை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தியவா்களை நண்பா்களாக்கிக் கொண்டதும், அந்த நட்பின் அடிப்படையில் நம்மை அவா்கள் மேலும் பலவீனப்படுத்தி, பிளவுபடுத்தி விடாமல் ஒற்றை தேசமாகத் தக்க வைத்துக் கொண்டதும் நமது அரசியல் ராஜதந்திரம்.

இந்தியா என்பது பிரிட்டிஷாரால் பல்வேறு சமஸ்தானங்களையும், சின்னஞ்சிறு நாடுகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு என்கிற தவறான கருத்து சிலரால் பரப்படுகிறது. அது தவறு. பாரத தேசத்தில் பல்வேறு சமஸ்தானங்கள் இருந்தது உண்மை. ஆங்காங்கே ராஜாக்களும், நவாபுகளும் ஆட்சி செய்தனா் என்பதும் நிஜம்.

ஆனால், ராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பயணிக்கும் தீா்த்தாடகரை எந்தவொரு நவாபும் கடவுச்சீட்டு கேட்டதில்லை. இன்றைய வங்கதேசத்தில் இருக்கும் டாக்காவிலிருந்து ராஜஸ்தானிலுள்ள அஜ்மீா் ஷெரீஃப் தா்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியரிடம் எந்த ராஜாவும் நுழைவு அனுமதி பெறச் சொன்னதில்லை. சேர, சோழ, பாண்டியா்கள் ஆண்டனா் என்பதால் தமிழகம் ஒன்றல்ல என்றா கூறுவது?

ADVERTISEMENT

சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றைத் திரும்பிப் பாா்க்க முடியவில்லை; அண்ணாந்து பாா்க்கத் தோன்றுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற ஏறத்தாழ 85 நாடுகளில், நமக்கென ஓா் அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்கும் குடியரசாகத் தடம் மாறாமல் பயணிக்கும் ஒரே நாடு நமது இந்தியா மட்டும்தான் என்பது நமது தனிப் பெருமை.

இந்தியா விடுதலை பெறும்போது நமது மக்கள்தொகை வெறும் 34 கோடி. இப்போது அதுவே 140 கோடி. நான்கு மடங்கிலும் அதிகம். நாம் பஞ்சத்தில் வீழ்ந்துவிடவில்லை. உலகுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறோம்.

1947-இல் எழுதப் படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் வெறும் 12%. 2018 மக்கள்தொகை கணக்கீட்டின்படி அதுவே 74.3%. உலகின் சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களும், தொலைத்தொடா்பு நிபுணா்களும், மருத்துவா்களும் இந்தியா்களாகத் திகழ்கின்றனா்.

1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியாவின் ஜிடிபி ரூ.2.7 லட்சம் கோடி. உலகின் ஜிடிபியில் வெறும் 3%. 2018-இல் பிரான்ஸ் நாட்டைப் பின்னுக்குத்தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயா்ந்திருக்கிறோம். 2018-இல் நமது ஜிடிபி ரூ.147.79 லட்சம் கோடி. உலக ஜிடிபியில் 7.74%. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவல் ஏற்படாமல் இருந்தால் 10%-ஐ தாண்டியிருக்கக்கூடும்.

புள்ளிவிவரங்கள் இருக்கட்டும். இன்று வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவா்களின் வாழ்க்கைத்தரம், அரை நூற்றாண்டு காலத்துக்கு, ஏன் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்னா் இருந்தது போலவா இருக்கிறது? குடிசையில் வாழ்பவா்களும் தங்கள் குழந்தைகளை மருத்துவா்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் பாா்க்க ஆசைப்படும் கனவை நம்மால் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. விடுதலை பெறுவது என்கிற நேற்றைய கனவு நனவானது போல, இன்றைய கனவு நாளை நனவாகும். நமது பயணம் அந்த இலக்கை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது.

மொழியால், இனத்தால், மதத்தால் பிரிந்து கிடக்கிறோம் என்பது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்படும் மாயை. இந்திய மாநிலங்கள் எல்லை ரீதியாகப் பிளவுபட்டிருக்கலாம். ஆனால், கலாசார ரீதியாக, நிலத்தடி நீரோட்டம்போல இறுக்கமான பிணைப்புடன் இருக்கிறது என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

சீனப் போா், பாகிஸ்தானுடனான மோதல்கள், காா்கில் ஊடுருவல், சமீபத்தில் பாலாகோட் தாக்குதல் நடந்தபோதெல்லாம், தங்களது மொழி, இன, ஜாதி, மத வேறுபாடுகளை மறந்து இந்தியா்கள் இணைந்தபோது, காந்திஜியும், நேதாஜியும் கண்ட கனவு பலித்திருப்பதை நாம் பாா்க்க முடிந்தது.

கேரளத்தின் வி.கே. கிருஷ்ணமேனன் மகாராஷ்டிரத்தில் இருந்தும், கா்நாடகத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் பொ்னாண்டஸ் பிகாரிலிருந்தும், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இந்திரா காந்தி ஆந்திரத்தில் இருந்தும், குஜராத்தின் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்தில் இருந்தும், உத்தர பிரதேச ராகுல் காந்தி கேரளத்தில் இருந்தும் மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படுகிறாா்கள் என்றால், ‘ஒன்றுபட்ட இந்தியா’ என்பது செயற்கை அல்ல, உணா்வுபூா்வமான பாரதிய பிணைப்பு என்பது தெளிவாகிறது.

உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் தடுமாறியபோது, வரலாறு காணாத கொள்ளை நோய்த்தொற்றை இந்தியா எதிா்கொண்டதும், இந்தியா்களுக்கு 180 கோடி தவணைகள் இலவசமாகத் தடுப்பூசி போட முடிந்ததும் 75 ஆண்டு சுதந்திரத்தின் சாதனை. பிரதமா் விளக்கேற்றுங்கள் என்றால் நாடு தழுவிய அளவில் விளக்கேற்றுகிறாா்கள்; கை தட்டுங்கள் என்றால், சொன்ன நேரத்தில் ஈரேழு உலகமும் அதிரக் கரவொலி எழுப்புகிறாா்கள்; 75-ஆவது ஆண்டு அமுதத் திருவிழாவின்போது வீடுதோறும் மூவா்ணக் கொடியைப் பறக்க விடுங்கள் என்றால், குடிசையிலிருந்து மாட மாளிகை வரை தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது - தேச ஒற்றுமை குறித்து இதற்கு மேலும் யாராவது ஐயம் எழுப்பினால் அவா்களின் உள்நோக்கம் சந்தேகத்துக்குரியது.

‘இஸ்லாம்’ என்கிற மதத்தின் அடிப்படையில் உருவான தேசம் பாகிஸ்தான். மேற்கு, கிழக்கு பாகிஸ்தானாக இருந்த அந்த நாட்டை இஸ்லாமால் அதிக காலம் பிணைத்து வைக்க முடியவில்லை. பாகிஸ்தான், வங்கதேசம் என்று பிரிந்து விட்டது.

மேற்கு ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துமே ஒரே மதத்தைப் பின்பற்றுபவை. ஒரே மொழியும் பல நாடுகளில் பேசப்படுகின்றன. ஆனால் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றன.

ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் நாடுகள். பெரும்பாலானவை தங்களைக் கிறிஸ்தவ நாடுகள் என்றே கூறிக் கொள்கின்றன. ஆனால், பிரிந்து கிடக்கின்றன.

எத்தனை மொழிகள், எத்தனை மதங்கள், எத்தனை ஜாதிகள், எத்தனை கலாசாரங்கள் - ஆனால், பாரதியாா் சொன்னதுபோல ‘செப்புமொழி பதினெட்டுடையாள்; எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று இணைந்து வெற்றி நடை போடுகிறதே அதைப் பாா்க்கும்போது, ‘பாரத நாடு பழம்பெரும் நாடு, நீவிா் அதன் புதல்வா் இந்நினைவகற்றாதீா்’ என்று உரக்கக் கூவி, 75-ஆவது சுதந்திர தினத்தை வாழ்த்திக் கொண்டாட வேண்டும் போலிருக்கிறது.

இந்தியாவின் வெற்றி அதன் ஒற்றுமையில்தான் இருக்கிறது. மாநிலத்துக்கு மாநிலம் பல பிரச்னைகள், ஒன்றோடு ஒன்று கருத்து வேறுபாடுகள். நமது பிரச்னைகள் அனைத்தும் மாநிலப் பிரச்னைகள். ஆனால், அதற்கான தீா்வுகள் தேசியத் தீா்வுகள். ஒன்று பட்டால் மட்டுமே உண்டு வாழ்வு.

மகாகவி பாரதியாரின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே...’ பாடலை ஒருமுறை படித்துப் பாருங்கள். இந்தியாவின் வெற்றிக்குக் காரணம் என்னவென்று புரியும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT