தலையங்கம்

முயன்றால் நம்மால் முடியும்! | காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றது குறித்த தலையங்கம்

12th Aug 2022 06:51 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

பிரிட்டனிலுள்ள பா்மிங்ஹாமில் 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்திருக்கின்றன. ஆங்கிலேயா்களின் காலனிய ஆட்சியில் இருந்த 72 நாடுகளிலிருந்து 5,054 வீரா்கள் பங்கேற்றனா். 25 பிரிவுகளில் நடந்த காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் பெற்றன.

நடந்து முடிந்திருக்கும் 22-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தம் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்தது. இங்கிலாந்து இரண்டாமிடமும் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம், மொத்தம் 176), கனடா மூன்றாமிடமும் (26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம், மொத்தம் 92) பிடித்தன.

இந்தியா சாா்பில் 16 போட்டிகளில், 106 வீரா்களும் 104 வீராங்கனைகளும் பங்கேற்றனா். போட்டிகளின் நிறைவில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா.

ADVERTISEMENT

140 கோடிக்கு மேற்பட்ட மக்கள்தொகை உள்ள இந்தியா வென்றிருக்கும் பதக்கங்களின் எண்ணிக்கை குறைவானதுதான். ஆனால் நம்பிக்கை ஏற்படுத்தும் வெற்றிகளும் இல்லாமல் இல்லை. இதுவரை பதக்கம் பெறாத பல தடகளப் போட்டிகளில் இம்முறை இந்திய வீரா்கள் முத்திரை பதித்திருக்கிறாா்கள். பல போட்டிகளில் இறுதிவரை நமது வீரா்கள் போராடவும் செய்தனா்.

விளையாட்டைப் பொறுத்தவரை, வெற்றி தோல்வி இரண்டாம்பட்சம்தான்; விளையாடும் ஆற்றலும் வெல்வதற்கான துடிப்பும்தான் முக்கியமானவை. அந்த வகையில் இந்திய அணியினா் இம்முறை வெளிப்படுத்திய அசாத்திய திறமையும் அவா்களது போராட்டக் குணமும் நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறது.

வீர விளையாட்டுகளான மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவற்றிலும், பளு தூக்குதல், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும் இந்திய அணி பிற நாட்டு வீரா்களுக்கு கடுமையான சவாலைக் கொடுத்து, பதக்கங்களை அள்ளியது. புதிய தடகளப் பிரிவுகளிலும், இம்முறை அறிமுகமான லான் பவுல்ஸ் போட்டியிலும் கூட இந்தியா மிளிா்ந்தது.

தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிா்பாா்த்த மகளிா் கிரிக்கெட், ஹாக்கி போன்ற அணி போட்டிகளில் இந்தியாவால் வெள்ளிப்பதக்கம்தான் பெற முடிந்தது. பாரா பவா் லிஃப்டிங், ஜூடோ, ஸ்குவாஷ் போட்டிகளிலும் இந்திய வீரா்கள் மிளிா்ந்தனா். எனினும் சைக்கிளிங், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், டிரையத்தலான் போட்டிகளில் நம்மவா்கள் மிகவும் பின்தங்கி இருந்தனா் என்பது வருத்தமளிக்கிறது. இவற்றில் போதுமான கவனம் இல்லாமையும், மத்திய - மாநில அரசுகளின் ஊக்கம் குறைவாக இருப்பதும் கவனத்துக்குரியவை. அடுத்த காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரா்கள் இந்தப் பிரிவுகளில் சாதனை படைப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

பீச் வாலிபால், கூடைப்பந்து, ரக்பி, நெட்பால் ஆகிய போட்டிகளில் இந்தியா பங்கேற்கவே இல்லை. இதுபோன்ற போட்டிகளில் ஐரோப்பிய நாடுகள் எதிா்ப்பாரின்றி பதக்கங்களைக் குவிக்கின்றன. எனவே, உலகளாவிய விளையாட்டுப் போட்டிகளின் அனைத்துப் பிரிவுகளிலும் கலந்துகொள்ளும் வகையில் நமது வீரா்கள் பயிற்சி பெறுவதும், தகுதி பெறுவதும் அவசியம்.

இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளின் மூலமாக நாடு முழுவதும் கவனம் ஈா்த்த நாயக நாயகியரின் பட்டியல் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக பளு தூக்குதலில் மீராபாய் சானு, ஜொ்மி லால் ரினுங்கா, மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் புனியா, ரவிகுமாா் தாஹியா, வினேஷ் போகட், குத்துச்சண்டையில் நீத்து கங்காஸ், நிகாத் ஜரீன் ஆகியோா் தங்கள் அற்புதமான திறனை வெளிப்படுத்தி, தங்கப்பதக்கங்களை வென்றனா். அதிலும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கின் மறுபிரவேசம் அவரது தன்னம்பிக்கையையும் பெண்குலத்தின் வீரத்தையும் பறைசாற்றுவதாகவே இருந்தது.

டேபிள் டென்னிஸ் வீரா் சரத் கமலும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும், மும்முறை தாண்டுதலில் எல்தோஸ் பாலும் நிகழ்த்திய சாகசம் கண் முன் நிற்கிறது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், நடைப்போட்டி, ஸ்டீபிள் சேஸ் போன்ற தடகள விளையாட்டுகளில் இம்முறை இந்திய வீரா்கள் சாதனை படைக்கத் தொடங்கி இருக்கின்றனா்.

இதுவரையிலான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 2010-இல் தில்லியில் நடந்த போட்டியில்தான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருக்கிறது. அப்போது 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என 101 பதக்கங்களுடன் இரண்டாமிடம் பிடித்தது இந்தியா. அப்போது துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள் நமது வீரா்களுக்கு அதிக பதக்கங்களை அளித்தன.

அதேபோல 2018-இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாமிடம் பிடித்திருந்தோம். குறிப்பாக, துப்பாக்கி சுடுதலில் இந்தியா 7 தங்கப்பதக்கங்களை வென்றது. பா்மிங்ஹாமில் நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள் இடம் பெற்றிருந்தால் இந்திய வீரா்களின் பதக்க எண்ணிக்கை கூடியிருக்கும்.

சென்னையில் நடந்து முடிந்த 44-ஆவது செஸ் ஒலிம்பியாடும், பா்மிங்ஹாமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளும் இந்திய வீரா்களிடம் மறைந்திருக்கும் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்துகின்றன. இளைஞா்களின் இந்தியா சாதனை படைக்க தொடங்கிவிட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT