தலையங்கம்

விடைபெறும் வேளையில்..? | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிந்தது பற்றிய தலையங்கம்

ஆசிரியர்

 நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டதற்கு நான்கு நாள் முன்பாகவே முடிவுக்கு வந்திருக்கிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடந்திருக்க வேண்டிய கூட்டத்தொடர், அரசு தனது அலுவல்களை நிறைவேற்றிக் கொண்டதாலும், முஹர்ரம், ரக்ஷாபந்தன் உள்ளிட்ட பண்டிகைகளாலும் முன்கூட்டியே முடிந்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
 கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வெளியிட்டபோதே பண்டிகை நாள்கள் குறித்த விவரம் அரசுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. கூட்டத்தொடரின் அமர்வுகளை அதிகரித்து, எதிர்க்கட்சிகள் கோரிய வண்ணம் விமர்சனத்துக்கும் பிரச்னைக்கும் உரிய மசோதாக்களை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டிருக்கலாம். தேசம் எதிர்கொள்ளும் எத்தனையோ பிரச்னைகள் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு வராமலும், விவாதிக்கப்படாமலும் புறந்தள்ளப்படுவது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அழகல்ல.
 அரசு 23 புதிய மசோதாக்கள் உள்பட 32 மசோதாக்களை நிறைவேற்ற முடிவெடுத்திருந்தது. அவற்றில் மக்களவை 7 மசோதாக்களையும், மாநிலங்களவை 5 மசோதாக்களையும் மட்டுமே நிறைவேற்றி இருக்கின்றன. மக்களவை தனது 48%நேரமும், மாநிலங்களவை 44% நேரமும்தான் செயல்பட்டன என்று தெரிகிறது. 100% செயல்பாடாக இல்லாவிட்டாலும்கூட, அமர்வு நேரத்தில் சரிபாதி கூட இரு அவைகளும் செயல்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.
 பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்க கூட்டத்தொடர் நான்கு நாள்கள் முன்பே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது அரசுத்தரப்பின் விளக்கம். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஜெயராம் ரமேஷ் அதை மறுத்திருக்கிறார். தாங்கள் மசோதாக்களை விவாதிக்கத் தயாராக இருந்ததாகவும், அரசின் வேண்டுகோளை ஏற்றுத்தான் முன்கூட்டியே கூட்டத்தொடரை முடித்துக்கொள்ள சம்மதித்தோம் என்றும் தெரிவித்திருக்கிறார் அவர். 2020 பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு இதுபோல கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்வது இது தொடர்ந்து ஏழாவது முறை என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
 நடந்து முடிந்திருக்கும் மழைக்கால கூட்டத்தொடருக்கு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடக்கும் கடைசிக் கூட்டத்தொடராக இது இருக்கக்கூடும்.
 எட்வின் லுட்வினும், ஹெர்பர்ட் பேக்கரும் வடிவமைத்து எழுப்பிய வட்ட வடிவமான பிரம்மாண்ட நாடாளுமன்ற கட்டடம் விரைவிலேயே வரலாற்றின் பக்கங்களுக்குத் தள்ளப்படக்கூடும். நவம்பர் - டிசம்பரில் நடக்க இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரை, 75-ஆவது சுதந்திர ஆண்டில் புதிதாக எழுப்பப்படும் நாடாளுமன்ற கட்டடத்தில் நடத்த வேண்டும் என்பது அரசின் முனைப்பு.
 இப்போதைய நாடாளுமன்றம், கட்டடக் கலை வடிவமைப்பின் அழகான முன்மாதிரி. 144 தூண்களுடன் எழுப்பப்பட்டிருக்கும் இந்த நாடாளுமன்ற கட்டடம் சந்தித்திருக்கும் அரசியல் நிகழ்வுகளும், ஆட்சி மாற்றங்களும், மசோதாக்கள் மூலம் நிகழ்த்தியிருக்கும் சாதனைகளும் ஏராளம்.
 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் ஐந்தாண்டுகளோ, பத்தாண்டுகளோ பதவி வகித்து அகன்றுவிடுவார்கள். ஆனால், இப்போதைய நாடாளுமன்ற கட்டடத்தின் மத்திய அரங்கு (சென்ட்ரல் ஹால்) எத்தனையோ அரசியல் நிகழ்வுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பது மூத்த உறுப்பினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும்தான் தெரியும்.
 தலைநகர் தில்லிக்கு வரும் முன்னாள் உறுப்பினர்கள், அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்திரிகையாளர்கள் என்று அனைவரும் கூடும் பொது இடமாக நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கம் திகழ்ந்தது. அமைச்சர்களும், ஏனைய உறுப்பினர்களும்; ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும்; முன்னாள் உறுப்பினர்களும், இந்நாள் உறுப்பினர்களும் சந்திக்கவும், கலந்துரையாடவும் சமரசம் பேசவும் மத்திய அரங்கம் பயன்பட்டது.
 பண்டித ஜவாஹர்லால் நேருவிலிருந்து இந்தியாவின் தலைமை பொறுப்பு வகித்த அத்தனை பிரதமர்களும் மத்திய அரங்குக்கு அவ்வப்போது வருவதும், தங்களைச் சுற்றி எந்தவிதக் கட்டுப்பாட்டு வரம்புகளும் இல்லாமல் உறுப்பினர்களிடம் சகஜமாக சிரித்துப்பேசி விவாதிக்கும் இடமாகவும் அது இருந்திருக்கிறது.
 நாடாளுமன்ற அவைகளில் கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மத்திய அரங்கில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சமரசம் பேசிக் கொண்டிருப்பது, கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவமாக இருக்கும் வாஜ்பாய் - அத்வானியும், சோம்நாத் சாட்டர்ஜி - இந்திரஜித் குப்தாவும் நட்புறவுடன் உரையாடுவது, காங்கிரஸ் கட்சியின் மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட் உள்ளிட்டவர்கள் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி போன்றவர்களுடன் நகைச்சுவைகளை பரிமாறிக்கொள்வது - இப்படிப்பட்ட காட்சிகளை ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் சந்தித்த மத்திய அரங்கம், இனிமேல் வெறிச்சோடிக் கிடக்கும்.
 புதிய நாடாளுமன்றத்தில் இதுபோன்ற மத்திய அரங்கம் கிடையாது. இதற்கு பதிலாக ஏற்படுத்த இருக்கும் மாற்று அமைப்பு வேறு மாதிரியானது. மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைதான். அதேநேரத்தில், சில மாற்றங்கள் ஏற்படுத்தும் ஏமாற்றங்கள் வேதனை அளிப்பவை.
 விடைபெறும் வேளையில் நடந்து முடிந்திருக்கும் கடைசி கூட்டத்தொடர் ஆரோக்கியமான விவாதங்களுடனும் உறுப்பினர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடனும் நாடாளுமன்றக் கூட்டத்தின் வரலாற்றுச் சிறப்பை பதிவு செய்யும் விதத்திலும் அமைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT