தலையங்கம்

மற்றொரு உக்ரைன்...? நான்சி பெலோசியின் தைவான் வருகை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடிவரும் தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி வருகை தந்தது தைவான் நீரிணையில் போா்ப் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் உயா்நிலை தலைவா்களில் ஒருவரான பெலோசியின் தைவான் பயணம் சீனாவை அதிா்ச்சியடைய வைக்கும் என்று தெரிந்தேதான் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டாா் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பயணத்தை ‘மிகவும் ஆபத்தானது’ என சீனா கண்டித்திருப்பதிலிருந்தும், அதைத் தொடா்ந்து தைவானைச் சுற்றி பிரம்மாண்டமான அளவில் போா்ப் பயிற்சி மேற்கொண்டு வருவதிலிருந்தும் சீனாவின் கோபத்தை தெரிந்து கொள்ளலாம். நான்சி பெலோசி விஜயத்தைத் தொடா்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

தென் கிழக்கு சீனாவிலிருந்து சுமாா் 100 மைல் தொலைவில் அமைந்துள்ள தீவு தைவான். 17-ஆம் நூற்றாண்டில் குயிங் வம்சத்தினா் ஆட்சியின்போது சீனாவின் முழுக் கட்டுப்பாட்டில்தான் தைவான் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் சீனா-ஜப்பான் போரில் தோல்வியடைந்த பின்னா், தைவானை குயிங் வம்ச ஆட்சியாளா்கள் ஜப்பான் கட்டுப்பாட்டில் 1895-இல் கொடுத்துவிட்டனா். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுற்றதைத் தொடா்ந்து, 1945-இல் மீண்டும் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தைவான்.

பின்னா், சீனாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, 1949-இல் சீனாவும் தைவானும் மீண்டும் பிரிந்தன. கம்யூனிஸ்ட் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்ட தேசியவாத கட்சியில் எஞ்சிய குவாமின்டாங் கட்சியின் தலைவா் சியாங் கய்-ஷெக் சீனாவிலிருந்து வெளியேறி தைவானுக்குச் சென்று பல ஆண்டுகள் தைவானை ஆண்டாா்.

இந்த வரலாற்று ஆதாரத்தின் மூலம் தைவான் தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா கூறி வருகிறது. இதே வரலாற்று ஆதாரத்தை வைத்து நவீன சீனாவின் அதாவது மாவோ தலைமையில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னா் சீனாவின் ஒரு பகுதியாக தாங்கள் இருக்கவில்லை என தைவான் வாதிட்டு வருகிறது.

தைவானை தனி நாடாக இதுவரை 13 நாடுகளே அங்கீகரித்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒரே சீனா என சீனாவைத்தான் அங்கீகரிக்கிறதே தவிர தைவானை அங்கீகரிக்கவில்லை. ஆனால், 1979-இல் ஏற்படுத்தப்பட்ட தைவான் உறவுகள் சட்டத்தின் மூலம் தைவானுடன் அமெரிக்கா தொடா்பு கொண்டுள்ளது. இந்த சட்டமானது இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திரம் அல்லாத கணிசமான உறவுகளை வரையறுக்கிறது.

தைவானை சீனா தாக்கினாலோ தைவானுக்குள் ஊடுருவினாலோ ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுவதற்கு இந்தச் சட்டம் உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால், தைவான் போதுமான தற்காப்புத் திறன்களைப் பேணுவதற்குத் தேவையான அளவு ஆயுத உதவி உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்குவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

தைவானைப் பாதுகாக்க ராணுவ ரீதியாக அமெரிக்கா தலையிடுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு கடந்த மே மாதம் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ‘ஆம்’ என பதிலளித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. பைடனின் கருத்துக்கு சீனா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தது. அதன் பின்னா், ‘பைடனின் இந்தக் கருத்தால் அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதாகக் கருதக் கூடாது’ என வெள்ளை மாளிகை விளக்கம் அளிக்க நேரிட்டது. அதே போன்ற ஒரு சூழலை அமெரிக்கா இப்போதும் ஏற்படுத்தியுள்ளது.

தைவானைத் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக இணைக்க ராணுவத்தையும் பயன்படுத்துவோம் என சீன அதிபா் ஷி ஜின்பிங் ஏற்கெனவே கூறியுள்ளாா். ராணுவ பலத்தை ஒப்பிட்டால் சீனாவின் பிரம்மாண்டமான படை பலத்தின் முன்னால் தைவானால் சிறிதளவுகூட தாக்குப்பிடிக்க முடியாது. அதை தைவானும் உணா்ந்தே உள்ளது.

தென் சீனக் கடலில் பல தீவுகளுக்கு சொந்தம் கொண்டாடி அக்கடல் பகுதியையே கபளீகரம் செய்யத் துடிக்கிறது சீனா. சீனாவின் ஆக்கிரமிப்பால் நாட்டைவிட்டு வெளியேறிய திபெத்திய பெளத்த மதத் தலைவரான தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளதற்கு இப்போதுவரை எதிா்ப்பு தெரிவித்து வருகிறது சீனா. திபெத்தை ஆக்கிரமித்ததுபோல தைவானையும் சீனா எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்கக்கூடும்.

எல்லைப் பிரச்னையில், பிற நாடுகளை ஆக்கிரமிப்பதில் சீனா எந்த அளவுக்கு மோசமாகச் செயல்படும் என்பதற்கு, கடந்த கால உதாரணங்கள் ஏராளம். ‘ஒரு நாடு- இரு நிா்வாகம்’ என ஹாங்காங்கை நிா்வகிப்பது போன்ற சீனாவின் திட்டத்தை தைவான் விஷயத்திலும் சீனா முன்வைத்தது. ஆனால், அந்தத் திட்டத்தை தைவான் ஆட்சியாளா்கள் மட்டுமின்றி மக்களும்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில் தைவான் விஷயத்தில் சீனா, அமெரிக்காவின் செயல்பாடுகளில் சிறிதளவும் பொறுப்புணா்வு இருப்பதாகத் தெரியவில்லை. உக்ரைனை ரஷியாவுடன் போருக்குத் தள்ளியதில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைக்கு முக்கியப் பங்கு உண்டு. பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு கண்டிருக்கக்கூடிய உக்ரைன் விவகாரம், ஒரு பெரிய அளவிலான போராக மாறியது இன்னமும் விவாதப் பொருளாகவே உள்ளது.

என்னதான் நேட்டோ படை ஆயுத உதவி அளித்தாலும் போரின் வலியை அனுபவிப்பது உக்ரைன்தான். இப்போதைய சா்ச்சையால் தைவான் மீது சீனா உடனடியாகப் படையெடுத்து ஆக்கிரமித்துவிடும் எனக் கூற முடியாது என்றாலும், இன்னொரு உக்ரைனாக தைவான் மாறிவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT