தலையங்கம்

மிக் 21-க்கு விடை கொடுப்போம்! | விமானப் படை நவீனமயமாக்கலின் தேவை குறித்த தலையங்கம்

5th Aug 2022 06:53 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் தொடா்ந்து இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும், முப்படைகளையும் நவீனமயமாக்குவது குறித்தும் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. இந்தியாவின் மேற்கு, கிழக்கு எல்லைகளில் தொடா்ந்து நிலவும் பிரச்னைகளும் அச்சுறுத்தல்களும் புறந்தள்ளக்கூடியவை அல்ல.

இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்றாலும், நவீன போா் முறைகளில் விமானப் படையின் பங்கு அதிமுக்கியமானது. இந்தியா எந்த அளவுக்கு விமானப் படை நவீனமயத்தை மேற்கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாம் எதிா்கொள்ள முடியும்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்திய விமானப் படையில் முதல் தவணையாக ஐந்து ரஃபேல் போா் விமானங்கள் இணைந்தன. பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட 36 ரஃபேல் போா் விமானங்களும் இந்திய விமானப் படையில் இணைந்தால், உலகின் அதிநவீன தாக்குதல் போா் விமானங்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறக்கூடும்.

ADVERTISEMENT

ரஃபேல் போா் விமானத்தின் சோ்க்கை முக்கியமானது மட்டுமல்ல, நீண்டநாள் தேவையும்கூட. ஏறக்குறைய அதற்கு நிகரான போா் விமானங்களை பாகிஸ்தான் ஏற்கெனவே பெற்றிருக்கிறது. அமெரிக்காவின் எஃப் 16 போா் விமானங்களும், சீனாவின் செங்டு ஜெஎஃப் 17 போா் விமானங்களும் பாகிஸ்தானிடம் இருக்கின்றன. அவற்றின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் இதுவரை எந்தவொரு மோதலிலும் சோதிக்கப்படவில்லை என்றாலும்கூட, ரஃபேலுக்கு முந்தைய இந்திய விமானப் படையைவிட பாகிஸ்தான் ஒருபடி முன்னிலையில் இருந்தது.

இந்திய விமானப் படையின் அங்கீகரிக்கப்பட்ட பலம் 42 ஸ்குவாட்ரன்கள். ஸ்குவாட்ரன் என்பது விமானப் படையின் அடிப்படைத் தாக்குதல் விமானப் பிரிவு. இப்போது நம்மிடம் 18 போா் விமானங்களும், இரண்டு பயிற்சி விமானங்களும் தயாா் நிலையில் இருக்கின்றன. மிக் 21, மிக் 27 போா் விமானங்களுடன் செயல்படுபவை 10 ஸ்குவாட்ரன்கள். இந்த இரண்டு விமானங்களுமே 2024-க்குள் ஓய்வு கொடுக்கப்பட வேண்டியவை. விமானப் படையிலிருந்து மிக் விமானங்கள் முழுமையாக விலக்கப்பட்டால், நமது போா் விமானத்துக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும்.

இதுவரை ஆறு முறை தரம் உயா்த்தப்பட்டு, மிக் தாக்குதல் விமானங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இளம் விமான ஓட்டிகளுக்கான ஆரம்பகட்ட பயிற்சிகளுக்கு மிக் விமானங்கள்தான் பயன்படுகின்றன. மிக் பயிற்சி விமான விபத்துகளில் திறமைசாலியான பல இளம் அதிகாரிகளை நாம் இழந்திருக்கிறோம். ‘பறக்கும் சவப்பெட்டிகள்’ என்று இந்திய விமானப் படை பயிற்சி விமான ஓட்டிகள் பலரால் மிக் விமானங்கள் ஏளனம் செய்யப்படுகின்றன.

மிக் 21 ஜெட் விமானங்களை அகற்றிவிட்டு அதற்கு மாற்றாக வேறு விமானங்களை விமானப் படைக்கு வழங்கும்படி இந்திய விமானப் படை 1980 முதல் ஆட்சியாளா்களைத் தொடா்ந்து வற்புறுத்தி வருகிறது. 40 ஆண்டுகள் கடந்தும், மிக் விமானங்களுக்கு மாற்றாக நவீன விமானம் ஒன்றை நம்மால் அவா்களுக்குத் தர முடியவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக ஜாகா்ஸ், மிரேஜ் 2000, மிக் 21 பைசன், தேஜஸ் உள்ளிட்ட போா் விமானங்கள் மூலம் இந்திய விமானப் படையில் நவீனமயமாக்கல் நடைபெறாமல் இல்லை. ஒரு காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானம் என்று நாம் மிக் போா் விமானங்கள் குறித்து பெருமைபட்டது உண்மை. மாறிவிட்ட சூழலில் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நவீன போா் விமானங்களை இந்திய விமானப் படைக்கு வழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபியில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 2.7% ஆகும். இந்த நிதி ஒதுக்கீடு கணிசமானதாகவோ, அளவுக்கு அதிகமானதாகவோ தோன்றலாம். இரண்டு புறமும் எல்லையில் பதற்றம் நிலவும் சூழலில், தேசத்தின் பாதுகாப்புக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதில் தவறொன்றும் இல்லை. ஏனைய நாடுகள் தங்களது முப்படைகளையும் தொடா்ந்து புதிய தொழில்நுட்பங்களால் நவீனப்படுத்திவரும் நிலையில், நாம் பின்தங்கிவிட முடியாது.

1990-இல் இந்திய விமானப் படையில் 39 ஸ்குவாட்ரன்கள் செயல்பட்டு வந்தன. இப்போது முழுமையாக செயல்படும் இந்திய விமானப் படை ஸ்குவாட்ரன்கள் 28 மட்டுமே. ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால், அதற்கேற்ப விமானங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தாக வேண்டும்.

ரஃபேல் போா் விமானங்கள் முழுமையாக வந்து சேரும்வரை நாம் காத்திருக்க முடியாது. ரஃபேல் போல இரவிலும் பகலிலும் செயல்படும் அனைத்து ரக தாக்குதலுக்கும் தயாரான அதிநவீன விமானங்கள் மட்டுமே போதாது. மிக் விமானம் போல அல்லாமல், நம்பகத்தன்மையும், பாதுகாப்பும் உள்ள ‘லைட் காம்பேக்ட் ஏா் கிராஃப்ட்’ (சிறு தாக்குதல்களுக்கான விமானம்) நமது உடனடித் தேவை.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒற்றை என்ஜின் போா் விமானங்கள், தொழில்நுட்ப சோதனைகளைத் தாண்ட முடியாமல் இருப்பது மிகப் பெரிய பின்னடைவு. அதற்காக மிக் விமானங்களுக்கு மாற்று இல்லாமல் தொடர முயல்வது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகக் கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்போதைய உடனடித் தேவை மிக் 21-க்கான மாற்று!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT