தலையங்கம்

மாலி நட்புறவுப் பாலம்! | மாலத்தீவு அதிபரின் இந்திய அரசுமுறைப் பயணம் குறித்த தலையங்கம்

4th Aug 2022 03:34 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் நான்கு நாள் இந்திய அரசுமுறைப் பயணம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலிக்கும் இடையேயான சந்திப்பும், பேச்சுவார்த்தையும், இருநாடுகளும் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியிருக்கும் ஆறு ஒப்பந்தங்களும் இந்திய - மாலத்தீவு நட்புறவை வலுப்படுத்தியிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையொப்பமாகி, இந்தியாவின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட இருக்கும் கிரேட்டர் மாலி போக்குவரத்துத் திட்டத்திற்கான பணிகளை, பிரதமரும் அதிபரும் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் தலைநகர் மாலி அமைந்துள்ள தீவையும், அருகில் உள்ள விலிங்கி, குல்ஹி ஃபல்கு, தைலஃபுஷி ஆகிய தீவுகளையும் இணைக்கும் வகையில் 6.74 கி.மீ. நீள பாலம் அமைக்கப்படவுள்ளது.
மாலத்தீவின் 61 தீவுகளில் காவல் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் இந்தியா மேற்கொள்ள உள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ. 750 கோடி கடனுதவியும், வீட்டுவசதியை மேம்படுத்த ரூ. 941கோடி கடனுதவியும் வழங்கப்படுகிறது. ஹனிமது விமான நிலைய மேம்பாடு, குல்ஹிபாலு துறைமுகத் திட்டம், 237 கோடியில் புற்றுநோய் மருத்துவமனைத் திட்டம் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்க இருக்கிறது.
இந்திய - மாலத்தீவு உறவு என்பது பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியமானது. சிறுசிறு தீவுகளின் கூட்டமாக இருந்தாலும்கூட, இந்தியாவை நோக்கி வரும் கடல்வழிப் பாதையில் அமைந்த மாலத்தீவு, இந்துமாக் கடலில் புவியியல் முக்கியத்துவம் பெற்ற நாடு. லட்சத்தீவின் மினிக்காய் தீவிலுள்ள இந்திய கடற்படைத் தளம், மாலத்தீவின் வடக்கு எல்லையில் உள்ள சுராகுன்னு தீவிலிருந்து 100 கி.மீ. தொலைவில்தான் அமைந்திருக்கிறது. இலங்கையைப் போலவே தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு மாலத்தீவின் நட்புறவும் மிகமிக அவசியம்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான நட்புறவு மிகவும் நெருக்கமானது. பாதுகாப்பு ரீதியாக இந்தியாவுக்கு மாலத்தீவும், பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் மாலத்தீவுக்கு இந்தியாவும் முக்கியமானவை. மாலத்தீவின் அரசியல் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு இணக்கமாகத்தான் இருந்தாக வேண்டும். எந்த ஒரு பிரச்னையிலும், நெருங்கிய வல்லரசு நாடு என்பது மட்டுமல்லாமல், உதவிக்கரம் நீட்டும் நாடாகவும் மாலத்தீவுக்கு இந்தியா மட்டுமே இருந்திருக்கிறது.
1988-ஆம் ஆண்டில் மாலத்தீவின் அன்றைய மம்மூன் அப்துல் கயூம் அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சி இலங்கை கூலிப்படையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மாலத்தீவின் தலைநகர் மாலியிலுள்ள முக்கிய அரசு கட்டடங்கள் அனைத்தையும் கைப்பற்றியிருந்த நிலை. உதவி கோரி அதிபர் அப்துல் கயூம், இலங்கை, பாகிஸ்தான், சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத் தொடர்பு கொண்டார். ஆனால், எந்த நாடும் உதவ முன்வரவில்லை. கடைசியாக இந்தியாவை அணுகினார் அதிபர் கயூம்.
தனது எல்லைப்புறத்தில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்க உடனடியாக ஆக்ரா விமான படைத்தளத்திலிருந்து 50-ஆவது பாரா பிரிகேட் கிளம்பி மாலி நகரத்தில் இறங்கியது. அடுத்த சில மணி நேரத்தில் இந்திய கடற்படை நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இலங்கையை நோக்கி விரைந்து கொண்டிருந்த கூலிப்படையினரையும் சுற்றி வளைத்தது. ஒருவழியாக மாலி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. கயூம் தலைமையிலான மாலத்தீவின் நிர்வாகத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இந்திய ராணுவம் திரும்பிவிட்டது.
அதுமுதல் 2013 நவம்பர் 17-இல் மமூன் அப்துல் கயூமின் சிற்றன்னை மகன் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் ஆட்சிக்கு வந்தது வரை, மாலத்தீவு - இந்திய நட்புறவு நெருக்கமானதாகவும் நன்றியுடன் கூடியதாகவும் தொடர்ந்தது. அப்துல்லா யமீன், மமூன் போல இல்லாமல் இந்திய எதிர்ப்பாளராகவும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கடைப்பிடிப்பவராகவும் இருந்தார். ஏனைய இஸ்லாமிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்வதுடன், இந்தியாவுக்கு எதிராக சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து செயல்படவும் அவர் தயங்கவில்லை.
இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த முக்கியமான கட்டமைப்புப் பணிகள், சீன நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டன. சீனாவின் நெருக்கம் அதிகமானதைத் தொடர்ந்து சீன கடற்படைக் கப்பல்களும், சுற்றுலாப் பயணிகள், அதிகாரிகளின் வருகையும் மாலத்தீவில் அதிகரித்தது. அதற்கு பிரதிபலனாக சீன - மாலத்தீவு நட்புறவுப் பாலம் கட்டப்பட்டது.
ராஜபட்ச சகோதரர்கள் நிர்வாகத்தில் சீன கடன் வலையில் இலங்கை சிக்கியதுபோல, மாலத்தீவும் அகப்பட்டுக்கொண்டது. 2018 தேர்தலில் அப்துல்லா யமீன் அகற்றப்பட்டு இப்ராஹிம் முகமது சோலி அதிபராகவும், முன்னாள் அதிபர் முகமது நஷீத் அவைத் தலைவராகவும் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் இந்திய - மாலத்தீவு உறவு புத்துயிர் பெற்றது. இப்ராஹிம் முகமது சோலியின் பதவியேற்புக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்பட்டார் என்பதிலிருந்தே உறவின் நெருக்கத்தைப் புரிந்துகொள்ளலாம்.
சீனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறது என்றாலும், அதன் கடன் வலையிலிருந்து மாலத்தீவு மீளவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்துமாக் கடலில் மாலத்தீவின் புவியியல் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அதன் நட்புறவையும் நரேந்திர மோடி அரசு புரிந்து செயல்படுகிறது என்பதை, அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் அரசுமுறைப் பயணம் உறுதிப்படுத்துகிறது!

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT