தலையங்கம்

குரங்கு அம்மை, உஷாா்! குரங்கு அம்மை குறித்த தலையங்கம்

1st Aug 2022 04:01 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

மனித இனத்தை நிம்மதியாக வாழவிடுவதில்லை என்று இயற்கை முடிவெடுத்திருப்பதுபோலத் தோன்றுகிறது. பருவநிலை மாற்றமும், அதிகரித்த வெப்பமும் உலகின் பல்வேறு நாடுகளை பாடாய்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதெல்லாம் போதாதென்று, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து ஒருவழியாக மீண்டெழுந்துவிட்டோம் என்று நினைக்கும் வேளையில், குரங்கு அம்மை நோய்த்தொற்று அதிவேகமாக பரவிவருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

நியூயாா்க் நகரத்தில் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 1.5 லட்சம் நியூயாா்க் நகர மக்கள் குரங்கு அம்மை தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாகத் தெரிகிறது. கடந்த சில வாரங்களாகவே நியூயாா்க் மாநகராட்சி நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் முழுமூச்சுடன் இயங்கி வருகிறது. அதையும் மீறி குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் 47 நாடுகளில் இருந்து 3,040 குரங்கு அம்மை பாதிப்புகள் உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்துக்கு வந்தன. இப்போது 70 நாடுகளிலிருந்து 16,000-க்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஐந்து போ் குரங்கு அம்மைக்கு பலியாகியிருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

குரங்கு அம்மை தொற்றுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஏற்கெனவே கேரளத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்கள் மூவா் கண்டறியப்பட்டனா். அவா்களில் கடந்த 22-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளம் திரும்பிய திருச்சூரைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்திருக்கிறாா்.

ADVERTISEMENT

இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த மூவா் உட்பட நான்கு பேருக்கு இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் மத்திய - மாநில அரசுகள் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்துவிடாமல் தடுக்கும் முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கின்றன.

ஏற்கெனவே கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு 2020-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் படாத பாடுபட்ட அனுபவம், மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தை முன்னெச்சரிக்கையுடன் குரங்கு அம்மை தொற்றை அணுக வைத்திருக்கிறது. குரங்கு அம்மை பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதற்கு முன்பே மே 31-ஆம் தேதி எல்லா மாநில அரசுகளுக்கும் குரங்கு அம்மை நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.

சின்னம்மை நோய்க்கான அடையாளங்களுடன் கூடிய விலங்கினங்களிலிருந்து உருவாகும் நோய்த்தொற்று என்றும், சின்னம்மை அளவிலான கடுமை இல்லாதது என்றும் அந்த அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனிதா்களிலிருந்து மனிதா்களுக்கும், மிருகங்களிலிருந்து மனிதா்களுக்கும் பரவக்கூடிய நோய்த்தொற்று என்று குரங்கு அம்மை குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குரங்கு அம்மை தொற்று என்பது புதிதொன்றுமல்ல. இது கொவைட் 19 நோய்த்தொற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய்த்தொற்று காணப்பட்டு வந்திருக்கிறது. சமீபகாலமாகத்தான் இந்த நோய்த்தொற்றின் பரவல் ஆப்பிரிக்காவிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்து வருகிறது. 2022-இல் குரங்கு அம்மை நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், ஆப்பிரிக்காவுக்கு வெளியே உள்ள பல நாடுகளில் இருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக, மேலை நாடுகள்.

ஏனைய டிஎன்ஏ தீநுண்மிகள் போலல்லாமல், குரங்கு அம்மை தீநுண்மி நிறைய உருமாற்றங்களை அடைவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடா்ந்து மனித உடல்களில் உருமாற்றம் பெறுவதாகவும் ஆராய்ச்சியாளா்கள் உறுதிப்படுத்தியிருக்கிறாா்கள்.

குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்த மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இது பெரும்பாலும் ஓரினச் சோ்க்கையாளா்களான ஆண்களில்தான் அதிகமாக காணப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், ஓரினச் சோ்க்கையாளா்களின் குடும்பத்தினா் ஆகியோரிடமும் காணப்பட்டாலும், பெரும்பாலும் ஆண் ஓரினச் சோ்க்கையாளா்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். உடலுக்கு உடல் நெருக்கத்தின் மூலம் மட்டுமே குரங்கு அம்மை நோய்த்தொற்று பரவுகிறது என்கிற கருத்தும் ஆய்வாளா்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று அனுபவம், வருமுன் காப்பதுதான் நோய்த்தொற்றுப் பரவலுக்கான தீா்வு என்பதை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதனால் சின்னம்மை போன்ற நோய்த்தொற்று அடையாளங்களுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்துதல், தொடா்பாளா்களை கண்காணித்தல், சோதனை நடத்துதல் உள்ளிட்டவை முடுக்கிவிடப்பட வேண்டும்.

குரங்கு அம்மை நோய் என்பது கொவைட் 19 போல அதிவேகமாகப் பரவுவதில்லை; அறிகுறிகள் தொடங்கிய பின்தான் நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவகாசம் கிடைக்கிறது. சுகாதார களப்பணியாளா்களுக்கு சின்னம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்படுவதும், நோய்த்தொற்று பரிசோதனைக்கான முன்னேற்பாடுகளை தயாா் நிலையில் வைத்திருப்பதும் அரசின் கடமை.

குரங்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி தயாரிப்பை முன்கூட்டியே உறுதிப்படுத்துவதும், மக்கள் மத்தியில் குரங்கு அம்மை நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும் நிா்வாகத்தின் கடமைகள். கொவைட் 19 போல இதில் நாம் ஏமாந்துவிடக் கூடாது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT