தலையங்கம்

தரம் தாழும் கல்வி! பாடத்திட்டங்களில் நிலவும் சர்ச்சைகள் குறித்த தலையங்கம்

12th Apr 2022 06:37 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

பிஎஸ்சி செவிலியர் படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள புத்தகத்தில், நமது நாட்டில் இன்னமும் ஆழமாக வேரூன்றியுள்ள வரதட்சிணை முறையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் பகுதி இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை சிவசேனை கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி முதலில் அம்பலப்படுத்தினார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை வலியுறுத்தி, அவர் ட்விட்டரில் பதிவிட்டதன் மூலம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

டி.கே. இந்திராணி என்பவரால் எழுதப்பட்ட "டெக்ஸ்ட்புக் ஆஃப் சோசியாலஜி ஃபார் நர்சிங்' என்ற இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் வரதட்சிணை முறையின் சிறப்பியல்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. வரதட்சிணை முறையால் குளிர்பதனப்பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், கார் உள்ளிட்ட பொருள்களால் புதியதொரு வீட்டைக் கட்டமைக்க வழியேற்பட்டுள்ளதாக இந்தப் புத்தகம் கூறுகிறது.

வரதட்சிணை கொடுக்க முடியாத பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை படிக்கவைத்து வேலைக்கு அனுப்புவதாகவும், இதனால் திருமணத்தின்போது அளிக்க வேண்டிய வரதட்சிணை பணம், சீர்வரிசைப் பொருள்கள் குறைவதாகவும் இந்தப் புத்தகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வரதட்சிணை முறையால் பெண்களுக்குக் கிடைக்கும் மறைமுகமான பலன் இது என்றும் அந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. இது மட்டுமல்லாது, வரதட்சிணை கொடுத்து அவலட்சணமான பெண்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் கிரிமினல் குற்றம் என நமது நாட்டின் சட்டம் கூறுகிறது. அப்படி இருக்கும்போது, வரதட்சிணை என்ற அவமானகரமான முறையைப் புகழும் விதத்திலான இந்தப் புத்தகம் எப்படி நமது உயர்கல்விப் பாடத்திட்டத்தில் நுழைந்தது? பாடத்திட்டத்தை வகுப்பதற்கு சிறந்த கல்வியாளர்கள், பேராசிரியர்களைக் கொண்ட குழுக்கள் இருந்தும் இது போன்ற சர்ச்சைக்குரிய புத்தகம் இடம் பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய கல்வி அமைச்சகத்துக்கும் இந்திய நர்சிங் கவுன்சிலுக்கும் உள்ளது.

இதனிடையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியதால், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், பதிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தில்லி போலீஸôரை கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திய நர்சிங் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. இது போதுமானதல்ல. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டபூர்வ அமைப்பான நர்சிங் கவுன்சிலின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்தப் பாடப்புத்தகத்தைப் பரிந்துரை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

செவிலியர் பட்டப் படிப்புக்கான பாடப் புத்தகங்களைப் பரிந்துரைப்பதற்கு முன்பாக அந்தப் புத்தகங்களில் உள்ளவற்றை முழுமையாகப் படித்து முடிவு எடுக்குமாறு நாடு முழுவதும் உள்ள செவிலியர் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு மிகவும் தாமதமாக இந்திய நர்சிங் கவுன்சில் அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், பாடத் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று மட்டுமே யோசனைகள் தெரிவிப்பதாகவும், என்னென்ன புத்தகங்கள் அல்லது யார் எழுதிய புத்தகங்கள் இடம் பெற வேண்டும் என்பதைத் தாங்கள் பரிந்துரைப்பதில்லை என்றும் கூறி, தனது பொறுப்பிலிருந்து நழுவுகிறது நர்சிங் கவுன்சில்.

வரதட்சிணை முறையைப் புகழ்ந்து பேசும் இதுபோன்ற புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது மாணவ, மாணவிகள் மனத்தில் தவறான கருத்தை விதைத்துவிடும் என தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சிவசேனை எம்.பி. வலியுறுத்தியுள்ளதை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களைக் கண்காணிப்பதற்கு கல்வி அகாதெமி கவுன்சிலும், ஒவ்வொரு படிப்புக்கும் பாடப் புத்தகங்களை முடிவு செய்வதற்கு உயர்நிலைக் குழுக்களும் உள்ளன. இந்தக் குழுக்களில் அரசியல் சார்பில்லாத சிறந்த கல்வியாளர்களும், பேராசிரியர்களும் இடம் பெறுவதை பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

நமது உயர்கல்வியானது சர்வதேச தரத்துக்கு இல்லை என்ற விமர்சனத்துக்கு வலுசேர்க்கும் வகையிலான செயல்பாடுகள் இந்தியாவின் மரியாதையை மேலும் பலவீனப்படுத்தும். உயர்கல்விக்கான பாடத்திட்டங்கள் சரியாக இருந்தால்தான், சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் நமது பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இடம் பெற முடியும். 

உயர்கல்விக்கு அடித்தளமான பள்ளிப் பாடத்திட்டமும் தரமாக இருப்பதை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 1967 முதல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தான் நியமிக்கப்படுகிறார். இந்த வழக்கத்துக்கு முடிவு கட்டி, அரசியல் சார்பற்ற சிறந்த கல்வியாளரை பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கும் புதியதொரு வழிமுறையைப் பின்பற்றினால் மட்டுமே பள்ளிக் கல்வியின் தரம் உயரும்; மாணவர்களின் அறிவும் விசாலமடையும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT