தலையங்கம்

அலை இன்னும் ஓயவில்லை... | கரோனா தீநுண்மி உருமாற்றம் குறித்த தலையங்கம்

9th Apr 2022 05:01 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

கரோனாவின் உருமாற்றம் இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடரும் என்று சில மாதங்களுக்கு முன்னரே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையில் உலகின் சில நாடுகளில் கரோனா தீநுண்மி மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. 

சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஆய்வகத்தில் இருந்துதான் 2019-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா தீநுண்மி பரவத் தொடங்கியது என்று அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. உலகம் முழுவதும் கரோனாவால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் உயிரிழந்தபோதும், கம்யூனிஸ இரும்புத் திரை ஆட்சியால் சீனாவில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்துவந்தது. 

இந்த சூழ்நிலையில், சீனாவில் இருந்து வெளிவரத் தொடங்கியுள்ள தகவல்கள் அச்சமூட்டுபவையாக உள்ளன. சுமார் 2.5 கோடி மக்கள்தொகை கொண்ட, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஷாங்காய் நகரத்தில் கரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் அதிவேகமாகப் பரவி வருகிறது. ஷாங்காயில் நிலைமை மிகவும் கடுமையானதாக உள்ளது என தீநுண்மி கட்டுப்பாட்டுக் குழுவின் இயக்குநரான கு ஹோங்குய் கூறியிருப்பதிலிருந்தே அதன் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT

ஷாங்காயில் மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை சுமார் 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 மாகாணங்களில் இருந்து சுமார் 38 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் ஷாங்காய் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 1.50 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஷாங்காய் சர்வதேச வர்த்தக கண்காட்சி மையம் உள்பட 60 இடங்களில் இடைக்கால மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 ஆயிரம் படுக்கைகள் கொண்ட இடைக்கால மருத்துவமனை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரத்தின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துவதற்காக வெவ்வேறு காலகட்டங்களில் அங்கு 4 நாள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 வயதுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
"வீடுகளின் ஜன்னல்களைத் திறக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்ற ஆசையை சிறிது காலம் தள்ளிப்போடுங்கள். வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டாம். உறங்கும்போதும் தனித்தனியாக உறங்கவும்' என்றெல்லாம் அந்நகர சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் சில நாள்களுக்கு முன்னர், ஒரே நாளில் 20,472 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் சீனாவின் அதிகபட்ச பதிவு இது. கடந்த மார்ச் மாதம் வரை நாடு முழுவதுமே சில நூறு பேர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகி வந்த நிலையில், இப்போது தினசரி பாதிப்பு 20 ஆயிரம் பேருக்கு மேல் பதிவாவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

சீனாவில் மட்டுமல்ல, பிரிட்டனிலும் தீநுண்மி பரவும் வேகம் கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த மார்ச் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிதாக 49 லட்சம் பேருக்கும், அதற்கு முந்தைய வாரத்தில் 43 லட்சம் பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பு இது. பிரிட்டனில் பாதிப்பு அதிகமாவது மட்டுமல்லாமல், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கூட கணிசமாக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 58 சதவீதம் பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும், அங்கும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்தே வருகிறது.  இந்த சூழலில், இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது என பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. பொது இடங்களுக்கு வருவோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்யுமாறு கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாக இருந்தாலும், அதன் பின்னர் வேகம் எடுத்தது. இப்போது, தடுப்பூசி குறித்து அலட்சிய மனப்பான்மை வந்துவிட்டதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது. 15.6 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் மாநிலங்கள் வசம் தேங்கி உள்ளன.
முதல் அலை ஓய்ந்த பின்னர், இனி கரோனா இல்லை என்று கருதியதால்தான் இரண்டாவது அலையில் ஏராளமான உயிர் இழப்புகளை நமது நாட்டில் எதிர்கொண்டோம் என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியர்களில் கணிசமான அளவினருக்கு தடுப்பூசிசெலுத்தப்பட்டுவிட்டாலும், தடுப்பூசி என்பது நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பைத் தடுக்குமே தவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அப்படி பாதிக்கப்பட்டால், அதிலிருந்து மீள பல மாதங்கள் வரை ஆகலாம். கொவைட் 19 பாதிப்புக்குப் பின்னர், சிறுநீரகம், கல்லீரல் செயலிழப்பு அதிகரித்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கண்ணுக்குத் தெரியாத தீநுண்மி, புதிய புதிய உருமாற்றங்களுடன் வீரியம் பெறக்கூடியது என்பதை நினைவில் நிறுத்தி எச்சரிக்கை உணர்வுடன் மக்கள் இருப்பதுதான் கொள்ளை நோய்த்தொற்றை எதிர்கொள்ள ஒரேவழி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT