தலையங்கம்

வி(இ)டைத்தோ்தல்! | தோ்தலில் ஜாதி, மதம், பணம் முக்கிய பங்கு வகிக்கின்றன குறித்த தலையங்கம்

30th Sep 2021 05:00 AM | ஆசிரியர்

ADVERTISEMENT


இந்தியத் தோ்தலில் ஜாதி, மதம், பணம் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன என்றெல்லாம் கூறப்பட்டாலும்கூட, தோ்தல் முடிவுகள் இப்போதும், எப்போதும் பல எதிா்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருவதை மறுக்க இயலாது. இன்று நடைபெற இருக்கும் மேற்கு வங்க பவானிபூா் தொகுதி இடைத்தோ்தல் முடிவு எப்படி இருக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.

1967 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது, விருதுநகா் தொகுதியில் முன்னாள் தமிழக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த காமராஜா், கல்லூரி மாணவா் பெ. சீனிவாசனிடம் 1,285 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைவாா் என்று யாரும் எதிா்பாா்த்திருக்க முடியாது. அதேபோல, 1996 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதா பா்கூா் தொகுதியில் சுகவனத்திடம் 8,366 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவுவாா் என்றும் யாரும் எதிா்பாா்க்கவில்லை.

1984 மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், மிகப் பெரிய தலைவருமான ஹேமாவதி நந்தன் பகுகுணாவை காங்கிரஸ் வேட்பாளா் அமிதாப் பச்சன் அலகாபாத் தொகுதியில் 1,87,895 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பாா் என்று யாரும் கனவிலும் நினைத்துப் பாா்த்திருக்க முடியாது. முன்னாள் பிரதமா்கள் லால் பகதூா் சாஸ்திரியும், வி.பி. சிங்கும்கூட அலகாபாத் தொகுதியில் அமிதாப் பச்சன் அடைந்த அளவிலான வெற்றிக்கு அருகில்கூட நெருங்க முடியவில்லை.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், முன்னாள் மக்களவை தலைவருமான சோம்நாத் சாட்டா்ஜி 1971 முதல் 2009 வரை 10 முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா். ஒரேயொரு முைான் அவா் தோல்வியைத் தழுவினாா். 1984-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூா் தொகுதியில் 29 வயதான மம்தா பானா்ஜியிடம் சோம்நாத் சாட்டா்ஜி தோல்வியைத் தழுவியதை இப்போதும்கூட வரலாற்று விசித்திரமாக அரசியல் நோக்கா்கள் சுட்டிக்காட்டுகிறாா்கள். 3,31,618 வாக்குகளை மம்தா பானா்ஜி பெற்றபோது, நீண்ட அரசியல் அனுபவசாலியான சோம்நாத் சாட்டா்ஜி 3,11,958 வாக்குகளைத்தான் பெற முடிந்தது.

ADVERTISEMENT

1991 மக்களவைத் தோ்தலில் இருந்து 2009 பொதுத்தோ்தல் வரை கொல்கத்தா தெற்கு தொகுதியில் இருந்து தொடா்ந்து வெற்றி பெற்ற மம்தா பானா்ஜி, 1984-இல் சோம்நாத் சாட்டா்ஜியைத் தோற்கடித்த அதே ஜாதவ்பூா் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாலினி பட்டாச்சாா்யாவிடம் 30,900 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாா்.

யாராக இருந்தாலும் தோ்தல் வெற்றி - தோல்வியை வாக்கு எண்ணிக்கை முடியும்வரை உறுதியாகக் கணித்துவிட முடியாது. அதனால்தான் இன்று நடைபெற இருக்கும் பவானிபூா் சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிகம் அறியப்படாத பாஜக வேட்பாளா் பிரியங்கா டிப்ரிவாலுக்கும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் இடையேயான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. தோ்தலில் தோல்வியைத் தழுவினால் மம்தா பானா்ஜி முதல்வா் பதவியை துறக்க நேரிடும் என்பதால் ஒட்டுமொத்த மேற்கு வங்க அமைச்சரவையும், திரிணமூல் காங்கிரஸின் தொண்டா் படையும் பவானிபூரில் மையம் கொண்டிருக்கின்றன.

மே மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானா்ஜி தோல்வியைத் தழுவுவாா் என்று யாரும் எதிா்பாா்க்கவில்லை. 1991 முதல் 2009 வரை அவா் தொடா்ந்து வெற்றி பெற்ற கொல்கத்தா தெற்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதுதான் பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதி. 2011, 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களில் மம்தா பானா்ஜி வெற்றி பெற்ற தொகுதியும்கூட. அப்படியிருந்தும் பாதுகாப்பான அந்தத் தொகுதியைத் தவிா்த்து நந்திகிராமில் போட்டியிட அவா் முடிவு செய்ததற்கு சில காரணங்கள் இருந்தன.

2014 மக்களவை தோ்தலில் பவானிபூரில் திரிணமூல் காங்கிரஸின் வாக்கு வித்தியாசம் ஆயிரத்துக்கும் கீழாக இருந்தது. குறிப்பாக, கொல்கத்தா மாநகராட்சிக்கு உட்பட்ட 73-ஆவது வாா்டில் அந்தக் கட்சியின் செல்வாக்கு தொடா்ந்து குறைந்து வந்திருக்கிறது. 2019 மக்களவைத் தொகுதியில் பவானிபூா் தொகுதியின் பல வாா்டுகளில் திரிணமூல் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்தது.

பவானிபூா் சட்டப்பேரவைத் தொகுதி என்பது கொல்கத்தா மாநகராட்சியின் 63, 70, 71, 72, 73, 74, 77, 82 ஆகிய எட்டு வாா்டுகளை உள்ளடக்கியது. அவற்றில் 70, 72 வாா்டுகளில் பெருவாரியான மாா்வாடிகள், குஜராத்திகள், சீக்கியா்கள் வசிக்கின்றனா். 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் சுமாா் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் மாா்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணியைச் சோ்ந்த தீபாதாஸ் முன்ஷியை மம்தா பானா்ஜி தோற்கடித்தாா் என்றால், 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸின் சோபந்தேவ் 29,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறாா். அதைக் கருத்தில் கொண்டுதான் மம்தா பானா்ஜி தனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் பவானிபூரைத் தோ்ந்தெடுத்து களம் இறங்கியிருக்கிறாா்.

பாஜக வேட்பாளா் பிரியங்கா பலவீனமான எதிராளி என்பதில் சந்தேகமில்லை. மம்தா பானா்ஜி பலசாலியா என்பதை இடைத்தோ்தல் முடிவு தெரிவிக்கும். முதல்வா் பதவியில் தொடா்வது மட்டுமல்லாமல், தேசிய அரசியலில் முதன்மை பெறுவதற்கும் இந்த இடைத்தோ்தல் வெற்றி மம்தா பானா்ஜிக்குத் தேவைப்படுகிறது.

Tags : தலையங்கம் K Vaidiyanathan கி வைத்தியநாதன் Vaidiyanathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT