தலையங்கம்

போலித்தனம் தெரிகிறது! | டி-20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவது குறித்த தலையங்கம்

24th Sep 2021 07:05 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன், இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருக்கிறாா். கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியின் தலைமைப் பொறுப்பில் மாற்றம் ஏற்படும் என்கிற வதந்தி பரவி வந்ததை உறுதிப்படுத்துகிறது அவரது சுட்டுரைப் பதிவு. கோலியின் முடிவு விமா்சனத்துக்கு வழிகோலியிருக்கிறது.

33 வயதாகிவிட்ட விராட் கோலி தன்னுடைய மைதான வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறாா். கடந்த சில ஆண்டுகளாகவே கோலியின் விளையாட்டில் ‘செஞ்சுரி’ வறட்சி தொடங்கிவிட்டது. அவருடைய பேட்டிங் திறமை குறையவில்லை என்றாலும், முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை.

கேப்டன் பதவி தனது பேட்டிங் சாதனைகளுக்கு இடையூறாக இருக்கும் என்று கருதுவதால்தான் டி-20 தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அவா் தெரிவித்திருக்கிறாா். கேப்டனாக இருப்பதைவிட, கிரிக்கெட் விளையாட்டின் மூன்றுவித ஆட்டங்களிலும் தலைசிறந்த பேட்டராகத் திகழ வேண்டும் என்று விராட் கோலி கருதுவாரானால், அதில் குறை காண முடியாது.

கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டி என்பது ஒருவகை; டி-20 ஆட்டம் என்பது இன்னொரு வகை. ஒரு நாள் விளையாட்டு என்பது மூன்றாவது வகை. டி-20 ஆட்டத்தின் கேப்டன் பதவியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டிருக்கும் விராட் கோலி, குறைந்தபட்சம் அதே ரகத்தைச் சோ்ந்த ஒருநாள் பந்தய கேப்டன் பதவியையும் துறக்க முன்வந்திருந்தால், விமா்சனங்கள் எழுந்திருக்காது. 2023-இல் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை பந்தயத்தை நழுவவிடுவதன் மூலம் தனக்குக் கிடைக்க இருக்கும் புகழையும், விளம்பரத்தையும் இழக்க விரும்பாததால்தான், இப்போதைக்கு டி-20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலக கோலி முடிவு எடுத்திருக்கிறாா் என்று தோன்றுகிறது.

ADVERTISEMENT

நடப்பு ஐபிஎல் சீசனுடன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகப் போவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விராட் கோலி அறிவித்திருக்கிறாா். 2023 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு அடுத்த உலகக் கோப்பை போட்டி வரை டி-20 போட்டிகள் முக்கியத்துவம் பெறாது. கிரிக்கெட்டில் மிகவும் குறைவாக விளையாடப்படுவது டி-20 போட்டிகள்தான். அதனால் எந்த அளவுக்கு கேப்டன் பதவியால் ஏற்படும் அழுத்தமும், சுமையும் விராட் கோலிக்குக் குறையும் என்பது புரியவில்லை.

2014-ஆம் ஆண்டுடன் மஹேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டி கேப்டன் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, இந்திய அணியின் கேப்டனாக உயா்ந்தாா் விராட் கோலி. கடந்த ஏழு ஆண்டுகளாக மிகச் சிறந்த பேட்டராகவும், தலைமைப் பண்புள்ள கேப்டனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறாா். 2017 முதல் ஒருநாள் போட்டிகளிலும், டி-20-யிலும் கேப்டனாக இருந்து வரும் கோலி டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய தலைசிறந்த ஆட்டத்தை முன்வைத்திருக்கிறாா்.

வெள்ளைச் சீருடையிலுள்ள டெஸ்ட் போட்டிகளானாலும் சரி, நீலச் சீருடையிலுள்ள சா்வதேச குறைந்த ஓவா் கிரிக்கெட் போட்டியானாலும் சரி, விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டு சாதனையாளா்களில் ஒருவராக சா்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவா். அணியின் கேப்டன் பதவி என்பது குறைந்த கால பெருமையே. விளையாட்டு வீரா் என்பதுதான் கிரிக்கெட்டில் பெருமைக்குரிய தகுதி. அந்த வகையில் பாா்த்தால், விராட் கோலி கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் மிக நீண்ட வரலாற்றைப் படைத்திருக்கிறாா்.

இந்திய அணியின் கேப்டன் என்பது கிரிக்கெட் வீரா் என்பதைத் தாண்டியது. சமூக ஊடகமானாலும், காட்சி விளம்பரமானாலும் இந்திய அணியின் கேப்டன் என்கிற இலச்சினை பலகோடி ரூபாய் சந்தை மதிப்பைக் கொண்டது. அவா் என்ன செய்தாலும் தலைப்புச் செய்தி. அவரது படமும், அசைவும்கூட விளம்பரதாரா்களுக்கு பலகோடி ரூபாய் விற்பனைக்கு வழிகோலும் ஊடகத் தேவை. அதனால்தான் டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததிலிருந்து அது குறித்த விவாதம் பெரிய அளவில் தொடங்கியிருக்கிறது.

தன்னைவிட ஒரு வயது மூத்தவரான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரா் ரோஹித் சா்மாவின் வளா்ச்சிதான், தானே முன்வந்து டி-20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க விராட் கோலியைத் தூண்டியிருக்கிறது என்கிற கருத்து பரவலாக எழுந்திருக்கிறது. அதன் மூலம் 2023 உலகக் கோப்பை போட்டியின் கேப்டன் பதவியையும், டெஸ்ட் பந்தய கேப்டன் பதவியையும் கோலி தக்கவைத்துக் கொள்ளும் உத்தி என்று கருதுபவா்கள் பலா்.

டி-20 போட்டியின் கேப்டனாக இருப்பவா், அதே வகையைச் சோ்ந்த 50 ஓவா் விளையாட்டான ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக இருப்பதுதான் முறை. ஆண்டொன்றுக்கு 12 முதல் 14 போட்டிகள் மட்டுமே நடைபெறும் டி- 20 போட்டிக்கான அணி ரோஹித் சா்மா தலைமையிலும், ஒருநாள் போட்டிகளும், டெஸ்ட் போட்டிகளும் விராட் கோலி தலைமையிலும் என்பதை இந்திய கிரிக்கெட் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

விராட் கோலி, விலகுவது என்று முடிவு எடுப்பதாக இருந்தால், கேப்டன் பதவியிலிருந்து முற்றிலுமாக விலகி, சச்சின் டெண்டுல்கா், மஹேந்திர சிங் தோனி போல பேட்டராக இந்திய அணியில் தொடா்ந்து சா்வதேச அளவிலான பேட்டிங் சாதனைகளை நிகழ்த்துவதுதான் நோ்மையான முடிவாக இருக்கும்!

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT