தலையங்கம்

மதுரையும் மகாத்மாவும்! | மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த தலையங்கம்

22nd Sep 2021 03:50 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 சரியாக இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதே செப்டம்பர் 22-ஆம் நாள். நமது தமிழகத்தின் மதுரை மாநகரில் அன்று நடந்த சம்பவம் ஒன்று, கடந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளில் ஒன்றாக உலகத்தவரால் கொண்டாடப்படுகிறது. அதுவரை அஹிம்சையையும், அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலையையும் மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த காந்தியடிகளை, அடித்தட்டு சாமானியர் குறித்தும் சிந்திக்க வைத்த சரித்திரத் திருப்பம் அந்த நாளில் மாநகர் மதுரையில் அரங்கேறியது.
 ஐந்து தடவை மதுரை மாநகருக்கு விஜயம் செய்திருக்கிறார் அண்ணல் காந்தியடிகள். அவரது ஒவ்வொரு மதுரை விஜயமும் ஒவ்வொரு விதத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்பதுதான் ஆச்சரியம். அண்ணல் காந்தியடிகளுக்கு மட்டுமல்ல, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், அரவிந்த கோஷ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று ஏனைய பல தன்னிகரற்ற தலைமைப் பண்பாளர்களின் வாழ்க்கையிலும் தமிழகம் திருப்புமுனைத் திருத்தலமாக இருந்திருக்கிறது என்பதைத் தற்செயல் நிகழ்வாக ஒதுக்கிவிட முடியவில்லை. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகம் காந்தியடிகளிடம் ஏற்படுத்திய தலைகீழ் மாற்றத்தை நாம் பெருமிதத்துடன் கொண்டாடக் கடமைப் பட்டிருக்கிறோம்.
 மகாத்மா காந்தியின் இரண்டாவது மதுரை விஜயம்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயமாக அமைந்தது. 1921 செப்டம்பர் 21, 22 தேதிகளில் மதுரையில் தங்கியிருந்தார் அண்ணல். மதுரைக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கும்போதுதான் அண்ணலுக்கு அந்த மனமாற்றம் ஏற்பட்டது. அவரது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் சாமானியன் முன்னிலை பெற்றது அந்தப் பயணத்தின்போதுதான்.
 மதுரையை நோக்கி விரைந்து கொண்டிருந்த அந்த ரயில், திண்டுக்கல்லைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருந்தது. ரயில் பெட்டியில் அமர்ந்திருந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தியினருக்கே உரித்தான பாணியில் உடையணிந்து, தலையில் பெரிய தலைப்பாகையுடன் சக பயணிகளுடன் உரையாடிக் கொண்டும், ரயில் பெட்டிக்கு வெளியே எழில் கொஞ்சும் தமிழகத்தின் வயல்வெளிகளைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டும் பயணித்துக் கொண்டிருந்தார்.
 வெறும் கோவணத்துணியுடன் வயலில் உழவர்கள் உழுது கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்த வண்ணம் பயணித்துக் கொண்டிருந்த மோகன்தாஸின் மனதில் புயலடிக்கிறது. அங்கே பலர் கோவணத்துணியுடன் உழுது கொண்டிருக்க, இங்கே தான் பல முழம் துணிகளால் போர்த்தப்பட்ட உடையணிந்து கொண்டிருப்பதை நினைத்துத் துணுக்குறுகிறது அந்த மாமனிதரின் மனம். தனக்கும் சாமானிய இந்தியனுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை அவர் புரிந்து கொள்கிறார்.
 அடுத்த நிமிடமே, தனது உதவியாளரை அழைத்து நீண்டதொரு அறிக்கையை அந்த ரயில் பெட்டியில் அமர்ந்தபடியே எழுதுகிறார். இடி முழக்கத்துக்கு முன்னால் வரும் மின்னல் வெட்டுப்போல, அவரது ஆடை மாற்றத்துக்கு முன்னால், அந்த ரயில் பெட்டியில் மனமாற்றம் ஏற்பட்டு விடுகிறது.
 மதுரைக்கு வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மேலமாசி வீதி 251 ஏ - இலக்க வீட்டில் தங்குகிறார். செப்டம்பர் 21-ஆம் தேதி இரவு தூங்கப் போவதற்கு முன்னால், அடுத்த நாள் அதிகாலையில் தான் மேற்கொள்ள இருக்கும் மாற்றத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார். செப்டம்பர் 22 அதிகாலையில் முழுக்க மழித்தத் தலையுடனும், நான்கு முழ வேட்டியுடன் மேலே ஒரு துணியை மட்டும் போர்த்திக் கொண்டு காட்சியளித்த அந்தக் கணமே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காற்றுடன் கரைந்து, அங்கே மகாத்மா காந்தி உருவெடுத்து விட்டார்.
 "கடையனுக்கும் கடைத்தேற்றம்' இல்லாமல் அஹிம்சையும், சுதந்திரமும் அர்த்தமற்றவை என்பதை அவர் தனது செயலால் உணர்த்த முற்பட்டார். பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எளிமையின் அடையாளமாக இருந்தாக வேண்டும் என்று தீர்மானித்தார்.
 "எனது வாழ்க்கையில் நீண்ட சிந்தனைக்குப் பிறகு நான் எடுத்த எந்தவொரு முடிவு குறித்தும் நான் வருத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படவே இல்லை'' என்பார் மகாத்மா காந்தி. அப்படி எடுத்த முடிவுகளில் முக்கியமான முடிவுதான் செப்டம்பர் 22, 1921-இல் மதுரையில் அவர் மேற்கொண்ட ஆடை மாற்றம்.
 ""பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் மற்றவர்களுக்கு வழிகாட்ட முற்படுபவர்கள், தாங்களே முன்மாதிரியாக இருக்க வேண்டும். அடித்தட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போலவே அவர்களைப் போல வாழ்வதும் அவசியம். ஆடம்பரமும் படாடோபமும் அவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடும்'' - இதுவும் அண்ணல் காந்தியடிகள் செயல்படுத்திக் காட்டிய அவரது சொற்கள்.
 அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றங்களின் அடிப்படையில்தான் அகில இந்திய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டன. எளிமை, நேர்மை, தியாகம், சமத்துவம் உள்ளிட்ட காந்தியத்தின் அடையாளம்தான் காந்தியார் அணிந்த ஆடை. இடுப்பை மறைக்க நான்கு முழம் வேட்டியும், மார்பை மறைக்க மேல் துண்டும் என்பது அவரது அரசியல் வாழ்க்கையின் அடையாளம்.
 டால்ஸ்டாய், பெர்ட்ரண்ட் ரஸல், பெர்னார்டு ஷா, மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா என்று உலக ஆளுமைகள் அனைவரும் பேராளுமையாக ஏற்றுக்கொண்ட ஒரே இந்தியத் தலைவர் அண்ணல் காந்தியடிகள் மட்டும்தான். அரை நிர்வாண தரித்திர நாராயணர்கள் குறித்து அந்த மகாத்மாவை சிந்திக்க வைத்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. அதனால், காந்தியார் காட்டிய வழியை அரசியலிலும் வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உண்டு!

Tags : மகாத்மா காந்தி தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT