தலையங்கம்

வீழ்ச்சியில் விவசாயி | வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகள் குறித்த தலையங்கம்

18th Sep 2021 07:21 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

தலைநகர் தில்லியின் சிங்கூர் எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகள் பெருநிலச்சுவான்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒன்றிரண்டு ஏக்கரோ அதற்கும் குறைவாகவோ பாரம்பரியமாக தங்களுக்குக் கிடைத்த நிலத்தில் பயிரிட்டு வாழ்க்கை நடத்தும் கோடிக்கணக்கான விவசாயிகளை அதே கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது. 

இந்திய விவசாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவது குறித்து அதிகாரபூர்வமாக ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய புள்ளிவிவர நிறுவனம் (நேஷனல் ஸ்டேட்டிஸ்டிக்கல் ஆர்கனைசேஷன்) அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 2019-இல் நடத்தப்பட்ட அந்தப் புள்ளிவிவர ஆய்வு இந்தியாவிலுள்ள கிராமப்புற குடும்பங்களின் வசமுள்ள விளைநிலங்கள் குறித்தும், வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்கள் குறித்தும் விரிவான கணக்கெடுப்பு நடத்தியது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அந்த அறிக்கை, இந்திய விவசாயம் பிரகாசமாக இருப்பது போன்ற தோற்றத்தை 
ஏற்படுத்துகிறது. 

அந்தப் புள்ளிவிவர அறிக்கையின்படி, 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையிலான ஐந்து ஆண்டுகளில் குடும்பங்களின் வேளாண் வருவாய் 57% அதிகரித்திருக்கிறது. கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.3%. வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்களின் கடன், அதே காலகட்டத்தில் 51.9% லிருந்து 50.2% என்கிற அளவில் குறைந்திருக்கிறது. இதெல்லாம் மாயத்தோற்றம் என்பதை அந்த அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால் தெரிந்துகொள்ள முடியும். கிராமப்புற விலைவாசி உயர்வை கழித்துப் பார்த்தால், அந்த காலகட்டத்தில் உண்மையான வருவாய் அதிகரிப்பு 16.5% தான் என்றும், கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் வெறும் 2.5% மட்டுமே என்றும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

ஐந்து ஆண்டுகளில் வருவாய்க்கான வழிமுறைகள் மாறியிருக்கின்றன. சிறு விவசாயிகளைப் பொறுத்தவரை அவர்களே வேளாண் பணிகளில் ஈடுபடுவதால் அதையும் வருவாயாகக் கணக்கிட வேண்டும். 2012-13-இல் சுயப்பணிகளின் கூலி, வருமானத்தில் 32% ஆக இருந்தது. அதுவே 2018-19-இல் 40% ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது அவர்கள் அதிகமான உழைப்பைச் செலுத்தி தங்களது வருவாயை அதிகரித்துக்கொள்ள முற்பட்டிருக்கிறார்கள்.
பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் பெற்ற வருவாய் 48% ஆக இருந்தது, இப்போது அது 38% ஆக குறைந்திருக்கிறது. அதாவது விளைச்சலால் அவர்கள் அதிக லாபம் ஈட்டவில்லை என்று தெரிகிறது.  2012-13-இல் கால்நடை வளர்ப்பு மூலமான வருவாய் 12% அளவில் இருந்தது. அது இப்போது 16% ஆக அதிகரித்திருக்கிறது. தங்களது அன்றாட வாழ்க்கைக்கும் செலவுக்கும் கால்நடைப் பராமரிப்பைச் சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்துக்குத் தொடர்பில்லாத தொழில்களின் மூலமோ செயல்பாடுகள் மூலமோ முன்பு கிடைத்து வந்த 8% வருவாய்  இப்போது 6% ஆக குறைந்திருக்கிறது. அதாவது, வேளாண் பயிரிடலின் மூலமான விவசாயிகளின் வருவாய் 8.9% குறைந்திருக்கிறது. 

ADVERTISEMENT

விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும்போதெல்லாம், ஏனைய பிரிவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுவது வழக்கம். விவசாயக் கடன் தள்ளுபடியால் பெருவிவசாயிகள் நியாயமற்ற வகையில் பயனடைகிறார்கள் என்றாலும், லட்சக்கணக்கான சிறு விவசாயிகள் அதன்மூலம் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கடன்பட்டிருக்கும் விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாகத் தெரிந்தாலும் விவசாயக் கடனின் சராசரி அளவு 57% அதிகரித்திருக்கிறது. 
கால் நூற்றாண்டுக்கு முன்னால் உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது, உலக வர்த்தக நிறுவன வேளாண் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டது. அப்போது விவசாயிகளுக்கு அது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி எதிர்பார்க்காத அளவு அதிகரித்து, இந்திய விவசாயத்தின் முகமே மாறப்போகிறது என்றும் கூறப்பட்டது. சாதாரண விவசாயிகளின் வேளாண் வருவாய் அதிகரித்து, அவர்களது வாழ்க்கைத் தரம் உயர் மத்திய தர வகுப்பினரின் அளவுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் உயரும் என்று சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்த நிபுணர்கள் கட்டியம் கூறினர். 
உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தம் கையொப்பமாகி 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தேசிய புள்ளி விவர நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கை வெளிப்படுத்துவதெல்லாம் விவசாயிகளின் உறுதியற்ற எதிர்காலத்தையும், வேளாண்மையின் நம்பகமற்ற வளர்ச்சியையும்தான். சராசரி இந்திய விவசாயி, கூலித் தொழிலாளியைவிட மோசமான நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது அந்த அறிக்கை. 

இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் நிலத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சராசரி கிராமப்புற விவசாயி பயிரிடுவதன் மூலம் அடையும் தினசரி சராசரி வருவாய் ரூ.27 மட்டுமே. கால்நடைகள் வளர்ப்பதன் மூலம் கிடைக்கும் அளவிலான வருவாயைக்கூட சிறு விவசாயியால் பயிர் செய்வதன் மூலம் ஈட்ட முடியவில்லை. 

பயிரிடுவதைவிட நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்குச் செல்வது மேல் என்று சிறு விவசாயிகள் கருதி விவசாயத்தைக் கைவிடுவதும், வேளாண்மை செய்ய கூலியாள்கள் கிடைக்காததால் நடுத்தர விவசாயிகள் விளைநிலங்களைத் தரிசாகப் போடுவதும் அதிகரித்து வருகின்றன. இதன் பின்னணியில், நகர்ப்புறத்தில் கூலி வேலை செய்ய, குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்களை உருவாக்கும்  சதித்திட்டம் இருக்குமோ என்கிற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT