தலையங்கம்

மாற்றம் தெரிகிறது! திமுக ஆட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த தலையங்கம்

17th Sep 2021 05:41 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்திருக்கிறது. தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைக்க அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

நடந்து முடிந்திருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் முந்தைய கூட்டத்தொடர்களில் இருந்து மாறுபடுகிறது. நிதிநிலை அறிக்கை மட்டுமல்லாமல், வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்பட்டு இரு நிதிநிலை அறிக்கைகளின் மீதும் விவாதம் நடைபெற்றது. காகிதம் இல்லா நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது, நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தின் சாதனை நிகழ்வு என்று கூற வேண்டும். 

வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு, அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது சற்று வித்தியாசமான அணுகுமுறை. குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும், வேளாண் சீர்திருத்த சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்பட 30 சட்ட மசோதாக்கள் அறிவிக்கப்பட்டு பேரவையின் ஒப்புதலையும் பெற்றிருக்கின்றன. "நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் சட்ட மசோதா மீண்டும் ஒருமுறை நிறைவேறி இருக்கிறது. இதற்கு உச்சநீதிமன்ற அங்கீகாரம் கிடைப்பதைப் பொறுத்து நடைமுறைக்கு வருவதும் வராததும் அமையும்.

ADVERTISEMENT

பல ஆண்டுகளுக்குப் பிறகு கூச்சல், குழப்பம், அவை புறக்கணிப்பு போன்றவை இல்லாமல் தமிழக சட்டப்பேரவை அமைதியாகவும் முறையாகவும் நடைபெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். பேரவைத் தலைவர் அப்பாவு கூறியிருப்பதுபோல, 32 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் ஜனநாயகம் மீண்டும் மலர்ந்திருக்கிறது என்பது உண்மை. 

1989-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான திமுக அரசு நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது ஏற்பட்ட குழப்பத்தையும், அமளியையும் தொடர்ந்து தமிழக அரசியல் ஜனநாயகப் பாதையில் இருந்து தடம் புரண்டது என்பது உண்மையிலும் உண்மை. அதன் பிறகு கருணாநிதி, ஜெயலலிதா, 

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமைகளில் அமைந்த ஏழு ஆட்சியிலும் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டப்பேரவையில் விவாதங்களை எதிர்கொண்டு செயல்படவில்லை என்கிற கசப்பான உண்மையை இப்போது நடந்து முடிந்திருக்கும் பேரவைக் கூட்டம் உணர்த்துகிறது. 


27 நாள்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனநாயக முறையிலான செயல்பாட்டை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பதிவு செய்தாக வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்தைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், பேரவையின் கண்ணியம் காக்கப்பட்டது என்பதையும் கூட்டத்தொடரில் பார்க்க முடிந்தது. 

இறுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு தனது உரையில் குறிப்பிட்டதுபோல, அவையில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அணுகுமுறை மிக முக்கியமான காரணம். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் வரம்புமீறல்களை முதல்வர்களே ரசித்து அங்கீகரிக்கும் வழக்கத்துக்கு மாறாக, அவையின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டிய முனைப்பு எதிர்க்கட்சியினரையே ஆச்சரியப்படுத்தியது எனலாம். பல சந்தர்ப்பங்களில் முதல்வர் தலையிட்டு அவையில் அமைதி நிலவ வழிகோலியது வித்தியாசமான அணுகுமுறையாக இருந்தது.

அரை நூற்றாண்டு சட்டப்பேரவை அனுபவம் வாய்ந்த துரைமுருகன் அவை முன்னவராக இருப்பதும் மரபுகளும் மாண்புகளும் பேணப்பட்டதற்கு முக்கியமான காரணம். கடந்த 30 ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, எதிர்க்கட்சி வரிசையில் முன்னாள் முதல்வர்கள் இருவர் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு செயல்பட்டதும், ஜனநாயக மீட்புக்கு முக்கியமான காரணம். 

குறை என்று சொல்வதாக இருந்தால், இரண்டு செயல்பாடுகளைக் குறிப்பிடலாம். தேவையில்லாமல் தனது அருமை பெருமைகளை எடுத்தியம்பி அவையின் நேரத்தை உறுப்பினர்கள் வீணாக்க வேண்டாம் என்று ஒருமுறைக்கு இரண்டு முறை முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டும், ஆளுங்கட்சி, கூட்டணி உறுப்பினர்கள் முதல்வரை மட்டுமல்ல, அவரது புதல்வரான சேப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினையும் புகழ்ந்து தள்ளி தங்கள் விசுவாசத்தைப் பறைசாற்றினார்கள். அவை நடவடிக்கைக்கு தொடர்பில்லாதவை பேசப்பட்டால் அதைத் தடுக்கவும், அவர்களை வெளியேற்றவும் அவைத் தலைவருக்கு உரிமையுண்டு. அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்தினால் இதற்கு முற்றுப்புள்ளி விழும்.

முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்தவர்கள் 110-ஆவது விதியின் கீழ் அறிக்கைகள் படித்தபோது கடுமையாக விமர்சித்த திமுக, தனது ஆட்சியில் அதே வழிமுறையைக் கடைப்பிடிக்க முற்பட்டிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அவை நடக்கும்போது மிகப் பெரிய விபத்தோ, பிரச்னையோ, இயற்கைப் பேரிடரோ ஏற்பட்டால் எந்தவித விவாதத்துக்கும் உட்படாத அறிவிப்புகளை முதல்வர்கள் 110-ஆவது விதியின் கீழ் முன்வைப்பது வழக்கம். அவசர காலத்துக்கான அந்த விதியின் கீழ் அறிவிப்புகளைச் செய்வது, ஜனநாயக அணுகுமுறையல்ல. 

மேலே குறிப்பிட்ட இரண்டு விதிவிலக்குகளைத் தவிர்த்தால், நடந்து முடிந்திருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமுறை மாற்றத்தை மட்டுமல்ல, நடைமுறை மாற்றத்துக்கும் வழிகோலியிருக்கிறது. பேரவை மரபுகள் மீட்டெடுக்கப்பட்டு, ஜனநாயக மாண்புகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
 

Tags : தலையங்கம் கி வைத்தியநாதன் Editorial K Vaidiyanathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT