தலையங்கம்

அகலவில்லை ஆபத்து! | 100 கோடி தவணை தடுப்பூசி சாதனை குறித்த தலையங்கம்

23rd Oct 2021 07:13 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், குளறுபடிகள் அனைத்தையும் கடந்து கொவைட்-19 நோய்த்தொற்றுக்கான நூறு கோடி தடுப்பூசித் தவணைகளைச் செலுத்தி இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது. 279 நாள்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இச்சாதனை உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. 

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கிய, படிப்படியாக தடுப்பூசி செலுத்தும் திட்டம், தற்போது 18 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது. முதல் பத்து கோடி தடுப்பூசிகள் 85 நாள்களிலும், 20 கோடி தடுப்பூசிகள் 130 நாள்களிலும், 50 கோடி தடுப்பூசிகள் 203 நாள்களிலும், அக்டோபர் 21-ஆம் தேதி 100 கோடி தடுப்பூசி 279-வது நாளிலும்  செலுத்தப்பட்டன. 100 கோடி தடுப்பூசிகளில் முதல் தவணையை 71 கோடி பேரும், இரண்டு தவணைகளையும் 29 கோடி பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். 

இப்போதைய நிலையில், இந்தியாவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 93 கோடி மக்கள்தொகையில் 75% பேர் குறைந்தது ஒரு தவணை தடுப்பூசியும், 31% பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு நிர்ணயித்திருப்பதுபோல, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 31% பேருக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது. தினந்தோறும் 1.2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமாகும். 

இன்னும்கூட 25% க்கும் அதிகமானோர், முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்திக்கொள்ளவில்லை என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். 44% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலர் இரண்டாவது தவணை தடுப்பூசி 
செலுத்திக்கொள்வதை தவிர்த்துவிட்டார்கள் என்பதையும் வேதனையுடன் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 

ADVERTISEMENT

கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவிலிருந்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்பதைப் பெரும்பாலோர் உணர மறுக்கிறார்கள். பொதுமுடக்கத் தளர்வும், பொருளாதார இயக்கமும் கொள்ளை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை மந்தப்படுத்தி இருக்கின்றன. 

அக்டோபர் 21-ஆம் தேதி நிலவரப்படி, இந்திய அளவில் 18,454 புதிய பாதிப்புகளும், தமிழகத்தில் 1,164 பாதிப்புகளும் தெரியவந்திருக்கின்றன. அன்றைய தேதியில் நாடு தழுவிய அளவில் 160 பேரும், தமிழகத்தில் 20 பேரும் உயிரிழந்திருக்கிறார்கள். அதனால், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடிக் கழுவுதல் உள்ளிட்ட 
பாதுகாப்பு நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குறைந்துவிடாமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். 

தடுப்பூசி செலுத்தும் பணி, பல சவால்களையும் தடைகளையும் கடந்து 100 கோடி தவணைகளை எட்டியிருக்கிறது. முதலில் தடுப்பூசி கிடைப்பது பிரச்னையாக இருந்தது. பிறகு அதன் விலை குறித்த சர்ச்சை எழுந்தது. இரண்டு தடுப்பூசிகளுக்குமான இடைவெளி குறித்த விவாதம் தொடங்கியது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் சவால் எழுந்தது. ஒருபுறம் உயிர்களையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம். அதனால் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இத்தனைக்கும் இடையில் இந்தியாவிலேயே தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்து 100 கோடி தவணைகள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியிருப்பதுபோல, இமாலய சாதனைதான். 

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவது கவலையளிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் பத்து நாள்கள் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள் என்றால், அக்டோபர் மாதத்தில் முதல் இருபது நாள்களில் இரண்டு நாள்கள்தான் அந்த எண்ணிக்கையை எட்டியிருக்கிறோம். 

அக்டோபர் 4-ஆம் தேதி, முதல் தவணை 70.1%, இரண்டாவது தவணை தடுப்பூசி 26.3% என காணப்பட்டது. செப்டம்பர் 20-ஆம் தேதியுடனான  64% முதல் தவணை, 21.7% இரண்டாவது தவணையுடன் ஒப்பிடும்போது அவை தலா 6.1%, 4.6% அதிகம். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களில் அக்டோபர் 18-ஆம் தேதி நிலவரப்படி, அதே அளவில் தடுப்பூசிக்கான வரவேற்பு காணப்படவில்லை. 

இப்போது தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசி கையிருப்பு உள்ளது. ஏறத்தாழ 10.78 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தி அனைவருக்கும் செலுத்துவதில் மெத்தனம் காணப்படுகிறது. பண்டிகைக் காலம் தொடங்க இருக்கிறது. அதிகமான சமூக நடவடிக்கைகளும், அரசியல் நடவடிக்கைகளும் மீண்டும் நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலிவிடக்கூடாது.

பிரிட்டனில்  மீண்டும் பரவிவரும் டெல்டா பிளஸ் உருமாற்றத் தீநுண்மியும், தடுப்பூசியால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறைதலும் நமக்குப் பாடமாக இருக்க வேண்டும். இன்னும்கூட 2 முதல் 18 வயது வரையிலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சாதித்திருக்கிறோம், சரி. ஆனால் இன்னும் சாதிக்க வேண்டியது நிறையவே இருக்கிறது, கவனம்!

ADVERTISEMENT
ADVERTISEMENT