தலையங்கம்

உதாசீனம்தான், வேறென்ன? | கேரளத்தைத் தாக்கிய திடீர் அடைமழை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அண்மையில் கேரளத்தைத் தாக்கிய திடீர் அடைமழை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கேரளம் எதிர்கொண்டிருக்கும் இயற்கைப் பேரழிவை, விதிவிலக்கு என்று கூறுவதைவிட வழக்கமாகிவிட்ட நிகழ்வு என்று கூறுவதுதான் பொருத்தமாக  இருக்கும். இடுக்கி, கோட்டயம் பகுதிகளில் சற்றும் எதிர்பாராமல் பெய்த அடைமழையால் அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் 42 உயிர்கள் பலியாகியிருக்காது. 

அதிதீவிரமான மழை 15-ஆம் தேதி இரவு தொடங்கியது. 16-ஆம் தேதி மதியத்துக்கு மேல்தான் கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது. திடீரென்று அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக முன்கூட்டியே அடைமழை குறித்த விவரம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது வானிலை மையம் தந்த விளக்கம்.

காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் டோப்ளர் ரேடார் திருவனந்தபுரம், கொச்சியில் இருந்தும்கூட பயனில்லாமல் போயிருப்பதை நினைக்கும்போது வானிலை மையத்தை மட்டுமே குற்றஞ்சாட்ட முடியவில்லை. காரணம், அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது உருவாகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. 

2018-இல் கேரளத்தைத் தாக்கிய அடைமழையும் வெள்ளப் பெருக்கும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் பாதித்தது என்றால், இப்போதைய திடீர் மழையால் கேரளத்தின் மத்திய மாவட்டங்களிலுள்ள மலைப் பகுதிகள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. நிலச்சரிவுகளால் வீடுகள் நாசமாகியிருக்கின்றன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிராமங்களும் நகரங்களும் நீரில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. தற்போது மழை அடங்கிவிட்டாலும்கூட இன்னும் சில நாள்களில் மீண்டும் பெய்யக்கூடும் என்கிற அச்சம் தொடர்கிறது. 

அரபிக்கடலில் உருவாகும் புயலும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் ஏற்படும் அடைமழையும் மட்டுமே இதுபோன்ற பேரழிவுகளுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் பெரிய  அளவிலான காடுகள் அழிப்பு மிக முக்கியமான காரணம்.  கடந்த அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, காடுகளை  அழித்துக் குடியிருப்புகள் உருவாகியிருப்பதும், கிராமங்களும் 
நகரங்களும் பெருகியிருப்பதும், குவாரிகளின் செயல்பாடுகளும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பின் விளைவுகளைத்தான் இயற்கைப் பேரழிவுகளாகக் கேரளம் எதிர்கொள்கிறது. 

இப்போது ஏற்பட்டிருக்கும் மழை வெள்ளப் பாதிப்புக்கு முக்கியமான காரணமாக குவாரிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 2013-இல் மாநில சூழலியல் ஆணையம், கூட்டிக்கல் பஞ்சாயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் குவாரிகளை உடனடியாக மூடும்படி அறிக்கை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், சுற்றியுள்ள வாகமண் மலைப்பகுதிகளை சூழலியல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டது. ஆனால் அரசு அதுகுறித்து பாராமுகமாக இருந்ததன் விளைவு, இப்போது கூட்டிக்கல் பஞ்சாயத்து பகுதியில் மிக அதிகமான உயிரிழப்பு மழை வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கிறது. 

தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரழிவு இத்துடன் நின்றுவிடாது. விரைவிலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிறது. ஏற்கெனவே எல்லா அணைகளும் நிரம்பி வழிகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காக வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றன. 

இதற்கு முன்னால் மழை வெள்ளத்தில் கேரளம் மூழ்கியதைத் தொடர்ந்து, கேரளத்தைப்போலவே அடிக்கடி மழைப்பொழிவு ஏற்படும் நெதர்லாந்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உயர் அதிகாரிகளும் பார்வையிடச் சென்றனர். நெதர்லாந்திலிருந்து அவர்கள் கையாளும் பல வழிமுறைகளை நேரில் பார்த்து தெரிந்து அவற்றைக் கேரளத்தில் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடப்போவதாக முதல்வர் அறிவித்தார். நெதர்லாந்தை முன்மாதிரியாக்கி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற அறிவிப்பு வந்தது. வழக்கம்போல மக்கள் வரிப்பணத்தில் முதல்வரும் அதிகாரிகளும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதுதான் மிச்சம்.

12 ஆண்டுகளுக்கு முன்பு தேக்கடியில் படகு விபத்து நடந்தபோது முன்வைத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான அறிவிப்புகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கேரளத்தில் காணப்படுவது போன்ற உதாசீனப்போக்கை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது. சுற்றுச்சூழலுக்காக பினராயி அரசு ஒரு துறையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அதை சுதந்திரமாக செயல்படும் துறையாக மாற்றி அதற்கு  அமைச்சர் நியமிக்கப்படவில்லை. 

இடதுசாரிகள், வலதுசாரிகள், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்பவையெல்லாம் நமது அரசியல்வாதிகளுக்கு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அடையாளங்கள், அவ்வளவே. சுற்றுச்சூழல் குறித்தும், கார்ப்பரேட்டுகள் குறித்தும் அரசியல்வாதிகள் பேசுவதற்கும் ஆட்சியதிகாரத்தில் செயல்படுவதற்கும் தொடர்பு இருக்காது.  

2018 பெருவெள்ளத்தின்போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் பேரிடர்களை எதிர்கொள்ள கேரளம் பாடம் படிக்கவில்லை என்பதைத்தான் இப்போதைய திடீர் மழையும்,  வெள்ளப் பெருக்கும் 42 உயிரிழப்புகளுடன் உலகுக்கு உணர்த்தியிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT