தலையங்கம்

சீனர்களின் தந்திரம்! | பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை குறித்த தலையங்கம்

ஆசிரியர்


பூடானுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பது புதிதல்ல என்றாலும் இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில் சீனாவுடன் பூடான் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது எதிர்பாராதது. 

1959-இல் சீனா திபெத்தை ஆக்கிரமித்தபோது, ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் பூடான் வழியாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர். அப்போது முதல், சீன ஆக்கிரமிப்புக்கு பயந்து இந்தியாவுடன் நெருக்கமான உறவை உறுதிப்படுத்திக்கொண்டது பூடான். ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்க சீனா முன்வந்தபோதுகூட அதை பொருட்படுத்தாத நாடு பூடான். எல்லா நிலையிலும் இந்தியாவின் மிக நெருக்கமான கூட்டாளியாகத் தொடர்ந்து வரும் பூடான், சீனாவுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திடீர் நெருக்கம், நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதை மறைப்பதற்கில்லை. 

மூன்று கட்ட தீர்வின் மூலம் பூடானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்னைக்குத் தீர்வு காண்பது என்கிற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை பூடான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பூடானுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தையை இந்திய - சீன எல்லை பிரச்னை போன்று இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பிரச்னை மேற்கு, வடக்கு, கிழக்கு என்று 3,488 கி.மீ. நீளமுள்ள எல்லைத் தொடர்பானது. பூடான் - சீனா எல்லை அப்படிப்பட்டதல்ல. இவை இரண்டையும் இணைத்துப் பேசுவது அமைச்சக செய்தித் தொடர்பாளரின் புரிதலின்மையல்லாமல் வேறென்ன?

எல்லை பிரச்னை தொடர்பான பூடான் - சீனா பேச்சுவார்த்தை புதிதொன்றும் அல்ல. 1984 முதல் இரண்டு நாடுகளும் எந்தவித முடிவையும் எட்டாமல் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. இப்போது வெளியிடப்பட்டிருக்கும் மூன்று கட்டத் தீர்வும்கூட ஏப்ரல் மாதமே இருதரப்பாலும் விவாதிக்கப்பட்டதாக பூடான் - சீனா கூட்டறிக்கை தெரிவிக்கிறது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தை அகற்றுவதுதான் மூன்று கட்டத் திட்டம் என்று சீன ஊடகங்கள் தெரிவித்தாலும்கூட, பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. சீனாவின்  வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வூ ஜியாங்கோ கூறியிருப்பதுபோல எல்லையை வரையறுப்பதற்கும், இருநாடுகளுக்கும் இடையில் ராஜாங்க உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிகோலக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. 

காணொளி பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து பூடான் வெளியுறவு அமைச்சகம் செய்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறதே தவிர, வேறு விவரம் எதையும் குறிப்பிடவில்லை. இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதும், சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதும் பேச்சுவார்த்தை மூலம் சாத்தியப்பட்டிருப்பதாக பூடான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. 

1984 முதல் இதுவரை 20-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகளை பூடானும் சீனாவும் நடத்தியிருக்கின்றன. டோக்காலாம் சமவெளியில் 2017-இல் நடந்த இந்திய - சீன மோதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முடங்கியது. அதற்கு இந்தியாவின் அழுத்தம்தான் காரணம் என்று சீனா கருதுவதிலும் நியாயம் இருக்கிறது. பூடானுடன் எல்லை பிரச்னையைத் தீர்த்துக்கொள்வது மட்டுமல்ல சீனாவின் நோக்கம். டோக்காலாமைக் கைப்பற்றுவதுதான் அதன் அடிப்படைக் குறிக்கோள். 

இதற்கு முன்னால் நடந்த பேச்சுவார்த்தைகளில் வடக்கேயுள்ள பசங்லுங், ஜகார்லுங் பள்ளத்தாக்குகளும் மேற்கேயுள்ள டோக்காலாமும் முக்கியமாக இடம்பெற்றன. வடக்கேயுள்ள பள்ளத்தாக்குகளின் மீதான தனது உரிமைகோரலை விட்டுக்கொடுத்து டோக்காலாமின் முழுமையான கட்டுப்பாடு தனக்குக்  கிடைக்கும்படியான ஒரு தீர்வை முந்தைய பேச்சுவார்த்தைகளில் சீனா முன்வைத்தது. கடந்த ஆண்டு டக்டெங்கை சீனா திடீரென்று உரிமை கோரியது. அதன்மூலம் பூடானை எப்படியாவது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இழுக்க வேண்டும் என்பதுதான் சீனாவின் நோக்கம்.

பூடானின் டோக்காலாம் சமவெளி என்பது இந்திய - சீன எல்லையை ஒட்டியிருக்கும் முச்சந்தி. 2017 மோதலுக்குப் பிறகு, டோக்காலாம் சமவெளியின் பெரும்பாலான பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் சீனா கொண்டு வந்துவிட்டது. அந்தப் பகுதிகளில் ராணுவக் கட்டமைப்பு வசதிகளையும் அதிகரித்திருக்கிறது. 

இந்தியாவின் ஆட்சேபத்துக்குரிய டோக்காலாம் முச்சந்தியின் பகுதியைத் தவிர பூடானுடனான ஏனைய எல்லைப் பகுதிகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சீனா ஊடுருவியிருக்கிறது. தெற்குப் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் இந்திய ராணுவம் தடுப்பதுபோல,  சீன ராணுவத்தை நேரடியாக எதிர்க்கவோ இந்திய ராணுவத்தின் உதவியுடன் ஊடுருவலைத் தடுக்கவோ பூடான் முயற்சிக்கவில்லை. 

பூடானுடனான எல்லை பிரச்னைக்குத் தீர்வு கண்டு சுமுகமான உறவை உறுதிப்படுத்துவதன் மூலம் டோக்காலாமைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சீனா. அதன் மூலம் இந்தியா தலையிடுவதையும் தடுக்க முடியும். உளவியல் ரீதியாக இந்தியாவை பலவீனப்படுத்த நினைக்கும் சீனாவின் ராஜதந்திர முயற்சியை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வதில்தான் இந்தியாவின் வெற்றி அடங்கியிருக்கிறது. 

இந்திய - பூடான் உறவு தளர்ந்துவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

SCROLL FOR NEXT