தலையங்கம்

அவசியமான 'உத்வேகம்'! | கதி சக்தி திட்டம் குறித்த தலையங்கம்

20th Oct 2021 03:28 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 ஆகஸ்ட் மாத சுதந்திர தின உரையின்போது அறிவித்திருந்த, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான "உத்வேகம்' (கதி சக்தி) திட்டத்தை கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ரூ.100 லட்சம் கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் "உத்வேகம்' திட்டம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான முனைப்பு என்று கூறலாம்.
 ரயில்வே, சாலைப் போக்குவரத்து, துறைமுகங்கள் உள்ளிட்ட 16 மத்திய அமைச்சகங்களை தொழில்நுட்பம், செயற்கைக்கோள் படங்கள், தரவுத் தொகுப்புகள் ஆகியவற்றின் மூலம் இணைத்து, அனைத்து கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்துவதுதான் "உத்வேகம்' திட்டத்தின் நோக்கம். சரக்குப் போக்குவரத்துக்கான செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 13% ஆக இருக்கிறது. அதனால் மற்ற நாடுகளுடன் ஏற்றுமதியில் போட்டியிடும் திறன் குறைகிறது. சரக்குப் போக்குவரத்துக்கான செலவையும் நேரத்தையும் "உத்வேகம்' திட்டத்தின் மூலம் குறைப்பதுதான் இலக்கு.
 அறிவிக்கப்படும் எந்தவொரு திட்டமும் குறித்த நேரத்தில் நிறைவு பெறாமல் இருப்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்னை. அதனால் ஆண்டுதோறும் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகிறது. குறிப்பாக, கட்டமைப்புப் பணிகளின் காலதாமதத்தால் மிகப்பெரிய இழப்பை நாடு எதிர்கொள்கிறது.
 தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணி பல ஆண்டுகளாகியும் முடிவடையாமல் அரைகுறையாக நிற்கிறது. 2018 ஜூன் 3-ஆம் தேதி மும்பையிலுள்ள அந்தேரி மேற்கையும் கிழக்கையும் இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்தது. ரயில்வேக்கும் பெருநகர் மாநகராட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் அது சீரமைக்கப்படாமல் தொடர்கிறது. தில்லி - மீரட் விரைவுப் பாதை, ரயில்வே மேம்பாலத்துக்கான அனுமதி ரயில்வே துறையிடமிருந்து கிடைக்காததால் 13 மாதங்களாக நிறைவடையாமல் இருக்கிறது. இதேபோல, இந்தியாவின் ஊரகப்புறங்களிலும், மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் குறித்த நேரத்தில் நிறைவடையாமலும், அரைகுறையாக விடப்பட்டும் பல கட்டமைப்புப் பணிகள் காணப்படுகின்றன.
 ஜூன் 2021 நிலவரப்படி, அறிவிக்கப்பட்ட 1,779 மெகா திட்டங்களில் 559 திட்டங்கள் காலதாமதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 967 திட்டங்களில் பணி முடிக்க வேண்டிய காலக்கெடு குறித்த எந்தவித விவரமும் இல்லை. இவற்றின் காலதாமதத்தால் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட சுமார் ரூ. 4.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவு கூடியிருக்கிறது.
 குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாததால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை பிரதமரின் "உத்வேகம்' திட்டம் குறித்த அறிக்கை விளக்கமாகவே பதிவு செய்கிறது. உதாரணமாக, மும்பையின் நவசேவா துறைமுகத்தின் நான்காவது முனையம் ரூ.5,000 கோடி செலவில் 2017-இல் நிறைவுற்றது. நான்கு ஆண்டுகள் கழிந்தும் பாதி அளவுகூட நான்காவது முனையம் பயன்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது "உத்வேகம்' திட்ட அறிக்கை. கப்பலில் இருந்து சரக்குகளைக் கையாளும் "கேரேஜ் வே' முழுமையாக நிறுவப்படாததால் ஏற்பட்டிருக்கும் குறைபாடுதான் அதற்கு காரணம். போதிய சாலை, ரயில் தொடர்பு உறுதிப்படாததால் கிருஷ்ணகிரி சிப்காட் தொழிற்பேட்டை 30% அளவில்தான் செயல்படுகிறது.
 பிரதமரின் "உத்வேகம்' திட்டம் இரண்டு தளங்களில் செயல்பட இருக்கிறது. அடிப்படை அளவில் 16 அமைச்சகங்களை ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதன் மூலம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளையும், ஒருங்கிணைப்பின் மூலம் கால விரயம் குறைவதையும் உறுதிப்படுத்துகிறது. அதேபோல, திட்டத்தின் செயல்பாட்டுக்கான அனைத்துத் தரவுகளும் கிடைப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
 பொருளாதாரத் தளத்தில் "உத்வேகம்' திட்டத்தின் முனைப்பு போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துவது. தரமான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லை. அதனால் நெடுஞ்சாலைகள், ரயில், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்புத் திட்டங்களை ஒருங்கிணைப்பதும், விரைவுபடுத்துவதும் "உத்வேகம்' திட்டத்தின் நோக்கம்.
 எந்தவொரு பொருளாதாரத் தேக்கத்துக்கும், பின்னடைவுக்கும் பிறகு செயல்பாடுகளை மீட்டெடுக்க, கட்டமைப்புத் திட்டங்களில் அரசு முதலீடு செய்வது உலகெங்கும் காணப்படும் வழக்கம். கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிப்பதும், அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதும், தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதும் சாத்தியமாகிறது. கட்டமைப்புத் திட்டங்களில் அரசு செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஜிடிபி-யில் ரூ.2.50 முதல் ரூ.3.50 வரையிலான அளவில் பயனளிக்கும்.
 அதிகாரபூர்வ புள்ளிவிவரத்தின்படி, 483 கட்டமைப்புத் திட்டங்களின் காலதாமதத்தால் அதிகரித்திருக்கும் செலவு மட்டுமே ரூ.4.43 லட்சம் கோடி. அதனால் "உத்வேகம்' முயற்சி அவசியமாகிறது. அதே நேரத்தில், பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்த, தடையில்லாத மின்சாரம், தேவையான தண்ணீர் வசதி, சாலைகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்டவையும் உறுதிப்படும்போதுதான் அரசின் நோக்கம் நிறைவேறும்.
 இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமின்மைக்கு, திட்டங்களின் காலதாமதம்தான் மிகப்பெரிய காரணம் என்பதால் "உத்வேகம்' மூலம் அதை எதிர்கொள்ள நரேந்திர மோடி அரசு எடுத்திருப்பது சரியான முனைப்பு. அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT