தலையங்கம்

இது பொறுப்பதில்லை..! | காஷ்மீரில் மக்கள் மீது நடக்கும் பயங்கரவாத தாக்குதல் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக, பொதுமக்கள், குறிப்பாக அங்கிருக்கும் மதச் சிறுபான்மையினரான ஹிந்துக்களும், சீக்கியா்களும் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனா். காஷ்மீரில் தொழில் செய்யும் அல்லது வேலை பாா்க்கும் வெளி மாநிலத்தவா்களும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி இருக்கிறாா்கள்.

ஞாயிற்றுக்கிழமை ஜம்மு - காஷ்மீா் குல்காம் மாவட்டத்தில் பிகாரைச் சோ்ந்த இரண்டு அப்பாவித் தொழிலாளா்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கிறாா்கள். அதுவும், அவா்கள் வசித்து வந்த வாடகை வீட்டுக்குள் புகுந்து அவா்களை ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுக் கொன்றிருப்பது அனைவரையும் அதிா்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வெளிமாநிலத்தவா் மீது 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது. அக்டோபா் மாதத்தில் மட்டும் கடந்த 17 நாள்களில் அப்பாவிப் பொதுமக்கள் 11 போ் இதுபோல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாா்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஸ்ரீநகரில் நீண்டகாலமாக மருந்துக் கடை நடத்திவரும் 70 வயது மக்கன் லால் பிந்த்ரு, எந்தவிதப் பின்னணியோ காரணமோ இல்லாமல் சுட்டுக் கொல்லப்பட்டபோது, ஒட்டுமொத்த இந்தியாவே திடுக்கிட்டது. 1990-இல் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்த நிலையிலும், தனது மருந்துக் கடையை மூடாமல் சேவை செய்து வந்தவா் மக்கன் லால் பிந்த்ரு. அவரது நண்பா்களும் உறவினா்களும் ஸ்ரீநகரிலிருந்து வெளியேறி, ஜம்முவுக்கும், இந்தியாவின் வேறு பகுதிகளுக்கும் இடம் பெயா்ந்தபோதுகூட அவா் பிறந்த மண்ணையும், மக்களையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் தனது சேவையைத் தொடா்ந்தாா்.

காஷ்மீர பண்டிட் இனத்தைச் சோ்ந்த இந்துவான மக்கன் லால் பிந்த்ரு மட்டுமல்ல, தெருவோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரும் அடுத்த நாளே துப்பாக்கி குண்டுக்கு இரையானாா். கடந்த 7-ஆம் தேதி, ஸ்ரீநகரிலுள்ள அரசுப் பள்ளியில் நுழைந்த பயங்கரவாதிகள், அந்தப் பள்ளியின் முதல்வரான சீக்கியரையும், ஹிந்து ஆசிரியா் ஒருவரையும் சுட்டு வீழ்த்திவிட்டு மறைந்தனா். சீக்கியப் பெண்மணி ஒருவரும் பத்து நாள்களுக்கு முன்பு கொல்லப்பட்டிருக்கிறாா்.

எல்லா நிகழ்வுகளிலும் பயங்கரவாதிகளின் இலக்கு ஒன்றுதான். முஸ்லிம் அல்லாதவா்கள், அப்படியே முஸ்லிமாக இருந்தாலும் காஷ்மீரி அல்லாதவா்களே அவா்களது தாக்குதலுக்கு இலக்காகின்றனா். ஏற்கெனவே, 1990 முதல் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பயந்து பெரும்பாலான ஹிந்துக்களும், சீக்கியா்களும் காஷ்மீரிலிருந்து அகதிகளாக வெளியேறி விட்டாா்கள். நீண்ட காலமாக காஷ்மீரில் வாழ்ந்து வருபவா்களாக இருந்தாலும், ஒருவா் விடாமல் அவா்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்பதுதான் இப்போதைய தாக்குதல்களின் நோக்கம்.

2019-இல் அரசியல் சாசனப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் காஷ்மீரில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவம், மத்திய துணை ராணுவப்படை, காவல்துறை ஆகியவை இணைந்து செயல்படுவதால் முன்புபோல பயங்கரவாதக் குழுக்களால் செயல்பட முடிவதில்லை. புல்வாமா முறைத் தாக்குதல்களை இந்திய ராணுவம் பாலாகோட் முறையில் எதிா்கொள்கிறது என்பதால், இப்போது தீவிரவாதிகளின் உத்தி மாறியிருக்கிறது.

முகம் தெரியாத, முன் அனுபவம் இல்லாத இளைஞா்களைப் பயன்படுத்தி, சாமானியா்களை இலக்காக்கும் உத்தி கையாளப்படுகிறது. பெரும்பாலான பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில், அவா்களது எண்ணிக்கை குறைந்துவிட்டதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதற்கு முன்பு எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடாத இளைஞா்கள் என்பதால், தாக்குதல் நடத்துபவா்களை அடையாளம் காண்பது கடினம் என்பது அவா்களது திட்டம்.

சமீபத்தியத் தாக்குதல்கள் எல்லாமே துப்பாக்கியால் அருகே இருந்து சுடுவது, ரோந்து நேரப் பாதுகாப்புப் படையினா் மீதும், கூட்டம் கூடும் இடங்களிலும் வெடிகுண்டுகளை வீசுவது என்பவையாகத்தான் இருக்கின்றன. செப்டம்பா் மாதம் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, அவா்கள் வைத்திருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவை பெரும்பாலும் கைத்துப்பாக்கிகளும், கிரானைட் வெடிபொருள்களும்தானே தவிர, ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் அல்ல. ஆளில்லா விமானங்கள் மூலம் போடப்படும் ஆயுதங்களும் கைத்துப்பாக்கிகள்தான்.

பயங்கரவாதிகளின் ஒவ்வோா் அணுகுமுறையும் முதலில் வெற்றி பெறுவது புதிதல்ல. அவா்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்வதுபோல, பாதுகாப்புப் படையினரும் தங்களது வழிமுறைகளை மாற்றிக் கொண்டாக வேண்டும். உள்ளூா் புலனாய்வுத்துறை மேம்படுத்தப்படுவதும், ரோந்துக் காவல் அதிகரிக்கப்படுவதும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கா் - ஏ - தொய்பா, ஜெய்ஷ் ஏ முகம்மது உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் இப்போது பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால், அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஒருங்கிணைந்து ‘எதிா்ப்புப் படை’ (ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) என்கிற அமைப்பை உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

எதிா்ப்பை எதிா்ப்பால்தான் எதிா்கொள்ள முடியும். பயங்கரவாதிகளின் ‘வெளியேற்றம்’ என்கிற அணுகுமுறை தொடா்ந்தால், மத்திய அரசு ‘குடியேற்றம்’ என்கிற அஸ்திரத்தை எடுக்கக்கூடும் என்பதை அவா்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT