தலையங்கம்

வழிகாட்டும் தமிழகம் ! | சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த தலையங்கம்

18th Oct 2021 09:21 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

ஒரு காலத்தில் "வங்காளம் இன்று செய்வதை இந்தியா நாளை பின்பற்றும்' என்று கூறுவார்கள். இன்றைய நிலையில் இந்தியாவின் முன்னுதாரணமாகவும் முன்னோடி மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது என்பதில் நாம் எல்லோரும் பெருமிதம் அடையலாம். அந்தப் பட்டியலில் சமீபத்தில் இடம் பெற்றிருப்பது "மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி' என்கிற இலக்கு.
 தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பலரும் தங்கள் ஆட்சிக்காலத்தில் பல முன்னோடித் திட்டங்களை நிறைவேற்ற முற்பட்டனர். ராஜாஜியின் புதிய கல்வித் திட்டத்தின் மறு வடிவம்தான் உலகம் முழுவதும் இப்போது பின்பற்றப்படும் "ஷிஃப்ட்' கல்வி முறை; காமராஜர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்வித் திட்டம்தான் இன்றைய "அனைவருக்கும் கல்வி' திட்டம். அதேபோல, "மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி' என்பது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தொடங்கப்பட்ட முனைப்பு.
 இப்போது அதுவே அகில இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாக மாறியிருப்பது நமக்குப் பெருமை.
 கடந்த வாரம் ராஜஸ்தானில் நான்கு மருத்துவக் கல்லூரிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவைக் காணொளி முறையில் பிரதமர் நிகழ்த்தினார். அப்போது இந்தியா முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியோ முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மருத்துவ நிறுவனமோ அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
 கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 170-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டிருக்கின்றன என்றும், நூற்றுக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 "எய்ம்ஸ்' உள்ளிட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு முனைப்புக் காட்டுவது வரவேற்புக்குரியது. "எய்ம்ஸ்' மருத்துவமனைகளின் எண்ணிக்கை 6-லிருந்து 22-ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அதேபோல நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது இளநிலை, முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு சுமார் 82,000 இடங்கள்தான் இருந்தன. இப்போது அதுவே 1.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
 பிரதமர் கூறியிருப்பதுபோல, மருத்துவக் கல்வி பெறுவோருக்கும், சுகாதார சேவைகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் அந்த இடைவெளி குறைந்து வருகிறது என்கிற பிரதமரின் கருத்தை மறுக்க இயலாது என்றாலும், கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலின்போது இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனம் பளிச்சிட்டதையும் மறுத்துவிட முடியாது.
 போதிய அனுபவமிக்க மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால், கொவைட் 19 நோய்த்தொற்று காலத்தில் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு தீநுண்மியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியதைப் பார்க்க முடிந்தது. செவிலியர்களுக்கும், மருத்துவர்களுக்குமான இடைவெளியும், மருத்துவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இடையேயான இடைவெளியும் நன்றாகவே தெரிந்தது.
 ஒரு மருத்துவருக்கு மூன்று செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில் சரிபாதி அளவில்தான் காணப்படுகிறார்கள். இந்த விகிதம், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதுடன் ஊரகப்புறங்களில் இன்னும் குறைவு. பிரதமர் கூறியிருப்பதுபோல கிராமத்திலிருந்து மாநகரங்கள் வரை எல்லா அளவிலும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாக வேண்டிய அவசியம் காணப்படுகிறது.
 மருத்துவர்கள் - செவிலியர்கள் விகிதத்தைப்போலவே, செவிலியர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையிலான விகிதமும் உலக சுகாதார நிறுவனத்தின் குறைந்தபட்ச அளவைக்கூட எட்டாத நிலை காணப்படுகிறது. 300 பேருக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டிய இடத்தில் 670 பேருக்கு ஒருவரும், 1,000 பேருக்கு ஒரு மருத்துவருக்குப் பதிலாக 1,500 பேருக்கு ஒரு மருத்துவர் என்றும் காணப்படுவது சுகாதாரக் கட்டமைப்பின் ஆரோக்கியமின்மையின் அடையாளம்.
 மத்திய அரசு 157 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், 50 செவிலியர் கல்லூரிகளையும் விரைவிலேயே கொண்டு வர இருக்கிறது. அதன் மூலம் ஆண்டுதோறும் 22,500 மருத்துவர்களும், 2,000 செவிலியர்களும் பயிற்சிபெற்று வெளிவர இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் இணைந்தாலும்கூட, பத்தாண்டுகளில் 2,50,000 பேர்தான் அதிகரிப்பார்கள். அவர்கள் அதிகரிப்பதுபோலவே நாட்டின் மக்கள்தொகையும் அதிகரிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
 அடிப்படை சுகாதார நிலையங்களையும், தாலுகா மருத்துவமனைகளையும் மேம்படுத்தி முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு, உயர் மருத்துவச் சிகிச்சை குறித்த கவனம் அதிகரித்திருப்பது தவறான போக்கு. மருத்துவப்படிப்பில் சேரும் மாணவர்களும் அடிப்படை மருத்துவர்களாகப் பணியாற்றுவதை விரும்பாமலும், கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பணியாற்றுவதை தவிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதன் விளைவாக கிராமப்புற மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் முறையான மருத்துவச் சேவை சென்றடைவதில்லை.
 மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே, மருத்துவக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகளுக்குத் தீர்வாகாது. ஆரம்ப சுகாதார நிலையங்களும், தாலுகா, மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்களுடன் தரமாக செயல்படுவதன் மூலம்தான் "அனைவருக்கும் மருத்துவம்' சாத்தியமாகும்.

Tags : தலையங்கம் K Vaidiyanathan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT