தலையங்கம்

இது நோய்த்தொற்றுக் காலம்! | வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

 வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, நிர்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பருவமழைக்காலம் என்பது தொற்றுக்காலமும்கூட என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழையைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவி வருவது கவலையளிக்கிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், ஹரியாணாவில் குருகிராமிலும், உத்தர பிரதேசத்தில் ஆக்ராவிலும், மகாராஷ்டிரத்தில் புணேயிலும் பெருமளவு பாதிப்பை எற்படுத்திக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சல், அங்கெல்லாம் சுகாதாரக் கட்டமைப்புக்கு மிகப் பெரிய சவாலாக மாறியிருக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தில் காணப்படும் நிபா விஷக்காய்ச்சலையும் கருத்தில்கொள்ளும்போது, நாம் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணரலாம்.
 மருத்துவத் துறையினரும், சுகாதாரத் துறையினரும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் மூன்றாவது அலையைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் முனைப்பில் இருக்கும் வேளையில், டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியிருக்கிறது. கடுமையான ஃபுளூ காய்ச்சல் போன்று காணப்படும் டெங்கு காய்ச்சல், உயிரிழப்புக்குக் காரணமாகக் கூடும் என்பதால் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் டெங்கு காய்ச்சல், இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா, பசிபிக் கடல் நாடுகள் என்று பரவலாகவே காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை காரணமாக ஆங்காங்கே ஏரிகளும், குட்டைகளும் நிறைந்திருப்பதால் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்திருப்பதில் வியப்பில்லை. குறிப்பாக, தேங்கி நிற்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஏடிஎஸ் எஜிப்டை கொசுக்களால் பரவுகிறது டெங்கு காய்ச்சல். இதற்கு முன்னால் தமிழகத்தை பலமுறை தாக்கியிருக்கிறது என்பதால் இதுகுறித்த விவரங்கள் சுகாதாரத் துறையினருக்கு புதிதல்ல. அதேநேரத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி டெங்கு பரவாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது முன்பைவிட அதிகமாகவே இருக்கிறது.
 கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான அளவில் தில்லியை அடுத்த ஹரியாணா மாநிலம் குருகிராமும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலம் மொஹாலி டெங்குவின் மையமாக மாறியிருக்கிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 100-க்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
 செப்டம்பர் மாதம் ஆங்காங்கே டெங்கு பாதிப்புகள் காணப்பட்டன என்றாலும், அக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாள்களிலேயே சுமார் 300-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டபோது மத்திய சுகாதார அமைச்சகம் விழித்துக்கொண்டது. கொவைட் 19-ஆல் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலம், செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 8,000 டெங்கு பாதிப்புகளும், 1,700 சிக்குன்குனியா பாதிப்புகளும் தெரியவந்தன. இந்த மாதத்தில் மட்டும் புணேயில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது.
 கேரளத்தில் கடந்த மாதம் முதல் நிபா தீநுண்மி கோழிக்கோட்டில் பரவத் தொடங்கியிருக்கிறது. 2001-இல் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிபா தீநுண்மி, கடந்த ஆண்டு கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில் மட்டும் 17 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது. இப்போது கேரளத்தில் பரவத்தொடங்கியிருக்கும் நிபா, 2018 போல கடுமையாக இருக்கப் போகிறதா அல்லது 2019 போல வந்த சுவடு தெரியாமல் விரைவிலேயே வீரியம் இழக்கப் போகிறதா என்று கணிக்க முடியவில்லை.
 1998 செப்டம்பர் மாதம் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கிய நிபா, 2001 முதல் இந்தியாவில் தொடர்ந்து அவ்வப்போது தலைதூக்கி வருகிறது. பழங்களை உண்டு வாழும் வெளவால்களிலிருந்து உருவாகும் நிபா தீநுண்மி, பன்றிகள் மூலமாகப் பரவுகிறது என்று சொல்லப்பட்டாலும் தெளிவான ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை.
 கேரளத்தில் பலா உள்ளிட்ட பழத்தோட்டங்கள் அதிகம் காணப்படுவதால் நிபா தீநுண்மி அங்கு பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே காரணம் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் இருப்பதால் சிறிய கவனக்குறைவும் பருவமழைக் காலத்தில் நிபா பரவலுக்குக் காரணமாகிவிடக்கூடும்.
 காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம், இருமல், வாந்தி, தசை வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எந்தவொரு சிறிய பாதிப்பாக இருந்தாலும்கூட உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெற வேண்டும் என்கிற விழிப்புணர்வை அரசும், ஊடகங்களும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அதேபோல, உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகள் எந்தவொரு இடத்திலும் குப்பை சேராமலும், தண்ணீர் தேங்கி நிற்காமலும் இருப்பதை உறுதிப்படுத்துவதும் அவசியம்.
 டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா என்று ஒன்றன் பின் ஒன்றாக கொசுவாலும், தேங்கி நிற்கும் தண்ணீர் மூலமும் உருவாகும் நோய்த்தொற்றுகள் பரவுவதற்கு வரிசை கட்டிக் காத்திருக்கின்றன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருகிறதோ இல்லையோ, நிபா, டெங்கு பாதிப்புகள் வரக் காத்திருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT