தலையங்கம்

அவசர அவசிய‌ம்! | இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த தலையங்கம்

27th Nov 2021 07:31 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய கொவைட் கால இந்தியாவின் நிலை குறித்த ஆய்வின்படி, 23 கோடி இந்தியர்கள் அந்த காலகட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். அக்டோபர் 2021 நிலவரப்படி, வேலைவாய்ப்பின்மை 7.7% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தானியங்கி இயந்திரங்களின் உதவியுடன் நிறுவப்படும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பதற்கான இன்னொரு காரணம். 

இந்திய தொழில்துறையினரின் கூட்டமைப்பு (சிஐஐ) வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, இந்தியாவில் 6.34 கோடி குறு, சிறு நடுத்தர தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஏறத்தாழ 12 கோடி தொழிலாளர்கள் அவற்றில் பணியாற்றுகிறார்கள். மொத்த உற்பத்திப் பொருள்களில் 33.4% அங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆய்வின்படி, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைகளும், சுயதொழில் செய்பவர்களும் பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு தொழில் இழந்திருக்கிறார்கள். அரசின் பல்வேறு திட்டங்களாலும், நிதியுதவிகளாலும்கூட அவர்களால் மீண்டெழ முடியவில்லை. 

உற்பத்தித் துறைக்கு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தும்கூட கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 17% என்பதைத் தாண்டி உயரவில்லை. அதுமட்டுமல்லாமல், 2016-17- இல் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருந்தோரின் எண்ணிக்கை 5.1 கோடி என்றால், 2020-21-இல் அது 2.73 கோடியாகக் குறைந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது நமது பொருளாதார அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியம் தெரிகிறது. 

அதிநவீன தொழிற்சாலைகளையும், மிகப்பெரிய இயந்திரமய அமைப்புகளையும் ஊக்குவிப்பதற்குப் பதிலாக, நம்முடைய கவனம் குறு, சிறு நடுத்தரத் தொழிற்சாலைகளையும், சுய தொழில்களையும் ஊக்குவிப்பதில்தான் இருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவி, போதுமான முதலீடு ஆகியவற்றை வழங்கி வேலையில்லா பொறியியல் பட்டதாரிகள் சுய தொழில் செய்வதற்கும், பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும் வழிவகை செய்வது இப்போதைய அவசியத் தேவை.

ADVERTISEMENT

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மைக்கு தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக இருக்கும் என்பதை வரலாறு பலமுறை உணர்த்தியிருக்கிறது. மோட்டார் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குதிரை வண்டி, மாட்டு வண்டி ஓட்டியவர்கள் வேலைவாய்ப்பிழந்தார்கள். மோட்டார் வாகனங்கள் ஓடுவதற்காக சாலைகள் போடப்பட்டபோது அதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாயின. மோட்டார் வாகன பழுது பார்த்தல் தொழில் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது. அவை அதிகரித்த வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்கியதுபோல, எல்லா தொழில்நுட்ப அறிமுகமும் முதலில் வேலைவாய்ப்பிழப்பையும், பிறகு புதிய வகையிலான அதிகரித்த வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை நாம் பார்க்கிறோம்.

அதிகரித்த வளர்ச்சி விகிதம், குறைந்த அளவு வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு வழிகோலுகிறது என்கிற கருத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த இருபது ஆண்டுகளில் கைப்பேசி பழுதுபார்த்தல், வாடகை கார் ஓட்டுதல், ஹோட்டல் தொழில், சுற்றுலா தொழில், சுய தொழில்கள் உள்ளிட்டவை பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கின்றன. வேலைவாய்ப்பு இழத்தலைவிட அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஏற்படுமேயானால் அது வளர்ச்சியின் அடையாளம்.

மத்திய அரசின் ஆய்வறிக்கை ஒன்றின்படி, 2012-2018-க்கு இடையே நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. 2018-இல் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடையேயானவர்களில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 28.5%. அதே காலகட்டத்தில் 'ஊதிய விகிதம்' குறைந்திருக்கிறது. 
அதிகரித்த ஊதியத்தைவிட விலைவாசி கூடுதலாக அதிகரிக்கும்போது அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்களே தவிர பயனடைவதில்லை. 

இப்போதைய நிலையில், ஆண்டுதோறும் 1.2 கோடி பேர் வேலைவாய்ப்பு தேடுபவர்கள் பட்டியலில் இணைகிறார்கள். அவர்களில் சுமார் 70 லட்சம் பேருக்குத்தான் வேலைவாய்ப்பு உருவாகிறது. இது ஆபத்தான போக்கு. உடனடியாக நாம் வேலைவாய்ப்பு குறித்து சிந்தித்தாக வேண்டும். 

அதற்கு நமது கல்வி முறையில் சீர்திருத்தம் அவசியத் தேவை. இப்போது பெரும்பாலான இளைஞர்களும் அரசுப் பணி கிடைப்பதற்காக படிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசுப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், தனியார் துறையில் திறன் சார்ந்த செவிலியர்களுக்கோ கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கோ தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கோ கிடைப்பதில்லை. நமது கல்வி முறை அரசுப் பணியை ஊக்குவிப்பதாக இருக்கும் நிலை மாற வேண்டும்.

அடுத்ததாக, தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் அவசியம். தொழிலாளர் நலச் சட்டங்கள் கடுமையாக இருப்பதால், ஒருவர் திறன் குறைந்தவராக இருந்தாலும், முறையாகச் செயல்படாமல் இருந்தாலும் அவரை எளிதில் பணி நீக்கம் செய்ய முடிவதில்லை. அதனால் எல்லா நிறுவனங்களும் மனித சக்தியைக் குறைத்து தானியங்கி இயந்திரங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. கூடுதல் மக்கள்தொகையுள்ள இந்தியா போன்ற நாடுகளில், வேலைவாய்ப்பை அதிகரித்தாக வேண்டும். அதேநேரத்தில், உற்பத்தித் துறையும் பலவீனப்பட்டுவிடக் கூடாது. 

ஆண்டொன்றுக்கு 12 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதுதான் மத்திய - மாநில அரசுகளின் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு நமது கல்வி முறையிலும், தொழிலாளர் நலச் சட்டங்களிலும் மாற்றம் அவசியம்!

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT