தலையங்கம்

தற்சார்பின் அடையாளம்! | ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் என்கிற போர்க்கப்பல் இந்திய கடற்படையில இணைந்திருப்பது குறித்த தலையங்கம்

24th Nov 2021 03:38 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

 ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக்கூடிய ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் என்கிற போர்க்கப்பல் இந்திய கடற்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இணைந்திருக்கிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நமது நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் முதலாவது போர்க்கப்பல் இது. இந்தியக் கடற்படையை வலுவாக்கும் முயற்சியில் இது ஒரு மைல்கல்.
 அட்லாண்டிக் கடலையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் இந்துமாக் கடல், ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகிய நான்கு கண்டங்களுடன் தொடர்புடையது. அதனால் இந்துமாக் கடலின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு இந்துமாக் கடல் மிக முக்கியமானது என்பதால் இந்தியா அதுகுறித்து கவனம் செலுத்தாமல் இருக்க முடியாது.
 ஏடன் வளைகுடா, ஆப்பிரிக்காவையொட்டிய கடல் பகுதி ஆகியவற்றில் 20 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 200 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் மிதந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் போர்க்கப்பல்கள் மட்டுமல்லாமல், கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்வதற்காக ஏனைய பல நாடுகளின் போர்க்கப்பல்களும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு நடத்துகின்றன.
 இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு ஆகியவை மட்டுமல்லாமல் மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளுடனும் இந்தியாவின் கடல் எல்லை பரந்து காணப்படுகிறது. அதனால் கடற்படையை வலிமையாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு உண்டு.
 பாகிஸ்தானும் வங்கதேசமும் சீனாவுடன் கடற்படை தொழில்நுட்பக் கூட்டு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சீனாவும் அந்த நாடுகளில் தனது துறைமுக வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது. ஏற்கெனவே இலங்கையில் அம்பன்தோட்டா துறைமுகமும், பாகிஸ்தானில் கராச்சி துறைமுகமும் சீன கடற்படைக் கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கான தளங்களாகி இருக்கின்றன. அவற்றின் மூலம் இந்துமாக் கடலில் தன்னுடைய வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது சீனா.
 இந்துமாக் கடலில் சீனா முக்கியமான சக்தியோ நேரடித் தொடர்போ கொண்ட நாடு அல்ல. அதனால்தான் ராஜாங்க ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்துமாக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறது.
 ஜனவரி 2020-இல் வடக்கு அரபிக் கடலில், சீனாவும் பாகிஸ்தானும் நடத்திய கூட்டு கடற்படை அணிவகுப்பை இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை என்று கருதலாம். அதேபோல, சீனாவுடனும் ரஷியாவுடனும் கடற்படைப் பயிற்சிகளை ஈரான் மேற்கொள்கிறது. இந்தியக் கடற்படை தன்னை வலிமைப்படுத்திக்கொள்ள எடுக்கும் முயற்சிகளை அந்தப் பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும்.
 இந்த நூற்றாண்டில் மிக முக்கியமான போர்கள் நடந்தால் அவை பெரும்பாலும் கடல் யுத்தங்களாகத்தான் இருக்கக்கூடும். அதனால்தான், உலகின் மிகப் பெரிய கடற்படையாகத் தன்னை சீன ராணுவம் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
 இந்திய ராணுவம் அடிப்படையில் தரைப்படை ராணுவமாகத்தான் இருந்து வருகிறது. இந்தியாவில் கடற்படையும் விமானப்படையும் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் கூடுதல் கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. விமானப்படைக்கு வாங்கப்படும் ரஃபேல் போர் விமானங்களும், கடற்படையில் இணைக்கப்படும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களும் ஓரளவுக்கு நமது பலவீனத்தை ஈடுகட்டுவதாக அமையும்.
 இந்தியாவிடம் இப்போதிருக்கும் 130 போர்க்கப்பல்களை அடுத்த 10 ஆண்டுகளில் 170 போர்க்கப்பல்கள் உள்ள கடற்படையாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன்மூலம், இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சீனாவின் ஆக்கிரமிப்பு முன்னெடுப்புகளை எதிர்கொள்ளவும் இந்திய கடற்படை தயாராகி வருகிறது.
 இருநூற்றுக்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் அடங்கிய கடற்படையை உருவாக்குவது என்பதுதான் முதலில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு. பிறகு என்ன காரணத்தாலோ அதை 2027-க்குள் 170 போர்க்கப்பல்கள் என்று கடற்படை மாற்றி அமைத்தது. இப்போது அந்த இலக்கு 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, 2032-க்குள் 170 போர்க்கப்பல்கள் கொண்ட படையாக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
 சீனாவை எடுத்துக்கொண்டால் 50 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களும், 10 அணுசக்தியில் இயங்கும் கப்பல்களும் அடங்கிய 350 போர்க்கப்பல்களைக் கொண்ட கடற்படையாகத் திகழ்கிறது. அதனுடன் ஒப்பிடும்போது, நம்மிடம் ஏவுகணைகள் இணைக்கப்பட்ட அணுசக்தியில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மட்டுமே இருக்கிறது. அதனால் கடற்படை நவீனமயமாக்கல் என்பது அவசரமும் அவசியமும் ஆகிறது. இந்தியாவிலேயே போர்க்கப்பல்களைத் தயாரிக்கும் தொழில்நுட்ப வல்லமை பெற்றிருக்கும் நிலையில் இனியும் நாம் தாமதிப்பது தகாது.
 ரஷியாவில் இந்தியாவுக்கான இரண்டு போர்க்கப்பல்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு கப்பல் கட்டுமானத் தளங்களில் 39 போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் தயாரிப்பில் இருக்கும் நிலையில், 170 போர்க்கப்பல்கள் என்கிற இலக்கை எட்டுவது இயலாததல்ல. 2030-க்குள் 460 போர்க்கப்பல்கள் என்று சீனா திட்டமிட்டிருக்கும் நிலையில், நாம் இனியும் கால விரயம் செய்யலாகாது. ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் தொடக்கமாக இருக்கட்டும்!
 

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT