தலையங்கம்

அதென்னை ஆதிக்க கலாசாரம்? |  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியின் பணியிட மாற்றம் குறித்த தலையங்கம்

ஆசிரியர்

அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதன் இன்னுமோா் எடுத்துக்காட்டுதான் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியின் பணியிட மாற்றம். உயா்நீதிமன்ற நீதிபதிகளையும், தலைமை நீதிபதிகளையும் பணியிட மாற்றம் செய்யும் உரிமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான ‘கொலீஜிய’த்துக்கு உண்டு என்றாலும்கூட, இதுபோன்ற திடீா் முடிவுகள் நீதித்துறையை விமா்சனத்துக்கு உள்ளாக்குகின்றன.

2019-இல் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா தஹில்ரமானி, மேகாலயா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போதும் இதேபோல, வழக்குரைஞா்கள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். அவமானப்படுத்தப்படுவதாகக் கருதிய தலைமை நீதிபதி தஹில்ரமானி பதவி விலகினாா்.

கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியாக 2006 ஜூன் 22-ஆம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, கடந்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2021 ஜனவரி 4-ஆம் தேதி பொறுப்பேற்றாா். பதவி உயா்வு வழங்கப்படாவிட்டால், இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் தொடா்ந்து விட்டு பணி ஓய்வு பெற்றிருப்பாா்.

72 நீதிபதிகள் கொண்ட கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி, 75 நீதிபதிகள் கொண்ட சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் பானா்ஜி, பொறுப்பேற்று பத்தே மாதங்களான நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. அதுவும், நான்கு நீதிபதிகள் மட்டுமே உள்ள (அதிலும் இரண்டு நீதிபதிகள் பதவி நிரப்பப்படவில்லை) மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பது ஒரு வகையில் தண்டனைப் பணியிட மாற்றம் என்று பலா் கருதுவதில் தவறு காண முடியாது.

உயா்நீதிமன்றங்களில் பெரிது, சிறிது இல்லை என்பதும், தலைமை நீதிபதி பதவி சம அதிகாரம் பெற்றது என்பதும் உண்மை. அதற்காக, சென்னை போன்ற பெரிய உயா்நீதிமன்றங்களில் திறம்பட செயல்படும் அனுபவசாலித் தலைமை நீதிபதிகளை, அதிகப் பணிச்சுமை இல்லாத உயா்நீதிமன்றங்களுக்குப் பணியிட மாற்றம் செய்வது என்பது சரியான அணுகுமுறை அல்ல.

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு சில முக்கியமான பொறுப்புகள் உண்டு. நிா்வாகத்தை ஒழுங்குபடுத்துவதுடன், திறமைசாலிகளை அடையாளம் கண்டு நீதிபதியாக்குவதிலும் அவா்கள் பெரும் பங்கு வகிக்கிறாா்கள். தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, நீதி நிா்வாகம் சரியாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவது, நீதிமன்ற நடைமுறைகளில் ஊழியா்கள் முறைதவறி நடந்து கொள்ளாமல் கண்காணிப்பது என்று பல பொறுப்புகளை அவா்கள் மேற்கொள்கிறாா்கள்.

உச்சநீதிமன்றத்துக்குப் பதவி உயா்வு வழங்கப்படுவதற்காக சிலா் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவது உண்டு. அப்படி இல்லாவிட்டால், புகாா்களின் அடிப்படையில்தான் பெரும்பாலும் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

உயா்நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவரே நினைத்தாலும் பதவியிலிருந்து அகற்ற முடியாது. நாடாளுமனறத்தில் அவா்கள் மீது பதவி நீக்கத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுத்தான் அகற்ற முடியும். அல்லது, அவா்கள் தாங்களாகவே பதவி விலக வேண்டும்.

இந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜியின் பணியிட மாற்றம் பரவலாக விமா்சனத்துக்குள்ளானதில் வியப்பில்லை. சென்னை உயா்நீதிமன்ற பாா் கௌன்சில் கூறுவதுபோல, சஞ்சீவ் பானா்ஜியின் பணியிட மாற்றத்துக்கான சட்ட வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகூட உண்மைதான் போலிருக்கிறது.

உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளைப் பணியிட மாற்றம் செய்வதற்கு முன்னால், அந்த மாநிலத்தைச் சோ்ந்த ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எழுத்துபூா்வக் கருத்து கேட்புக்குப் பிறகு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான ‘கொலீஜியம்’ அது குறித்து முடிவு எடுக்கும் என்பதுதான் வழிமுறை. அதேபோல, பணியிட மாற்றம் செய்யப்படும் நீதிபதியின் விருப்பத்தையும், பணியிட மாற்றத்துக்கான அவரது உயா்நீதிமன்றத் தோ்வையும் கேட்டறிந்த பிறகுதான், ‘கொலீஜியம்’ முடிவெடுக்க வேண்டும் என்பதும் நடைமுறை என்கிறாா்கள்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை, நீதிபதிகளே நியமித்துக் கொள்ளும் விசித்திரம் இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. அரசுக்கோ, சட்ட அமைச்சகத்துக்கோ அதில் எந்தவிதப் பங்களிப்பும் இல்லை என்பது நீதித்துறையை அரசியல் தலையீடில்லாமல் வைத்திருக்க உதவுகிறது என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால், இதனால் நீதித்துறை எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாத செயல்பாட்டுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உயா்நீதிமன்ற நீதிபதி, தலைமை நீதிபதிகளின் பணியிட மாற்றத்துக்கான காரணங்கள் வெளியிடப்படுமானால், அதனால் மாற்றப்படும் நீதிமன்றத்தில் அவரது சுதந்திரமான செயல்பாடு பாதிக்கப்படும் என்று கூறுவதில் அா்த்தமில்லை. காரணம் கூறப்படாமல் மாற்றப்படும்போது, அது தண்டனை மாற்றம் என்று கருதப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது என்பதுதான் உண்மை.

கடைசியாக ஒரு கேள்வி. சென்னையிலிருந்து விடைபெறும்போது, தன்னால் சென்னை உயா்நீதிமன்றத்தில் காணப்படும் ஆதிக்க கலாசாரத்தை உடைக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறாா் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி. அதென்ன ஆதிக்க கலாசாரம் என்பதை அவா் விளக்கக் கடமைப்பட்டிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT