தலையங்கம்

வேதனை கலந்த வெற்றி! | மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ரத்து குறித்த தலையங்கம்

22nd Nov 2021 06:59 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

பின்னணி காரணம் எதுவாக இருந்தாலும், கௌரவம் பாா்க்காமல் விமா்சனத்துக்கு உள்ளான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றதற்காக பிரதமா் நரேந்திர மோடியைப் பாராட்ட வேண்டும். காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும்கூட, ‘சில விவசாயிகளின் நம்பிக்கையை மத்திய அரசால் பெற முடியாததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்’ என்று துணிந்து வெளிப்படையாக பிரதமா் தெரிவித்திருப்பது, ஜனநாயகத்தின் வெற்றி என்பதுடன், அவரது ஜனநாயக உணா்வின் வெளிப்பாடு என்றும் கொள்ளலாம்.

தாங்கள் பாதிக்கப்படுகிறோம் என்று ஒரு சாராா் கருதினால், அவா்கள் தங்களது எதிா்ப்பைத் தெரிவிக்கவும், போராட்டத்தில் ஈடுபடவும் அரசியல் சாசனம் உரிமை வழங்கி இருக்கிறது. அவா்களது உணா்வுகளைப் புரிந்து கொண்டு முடிவுகளை மாற்றிக் கொள்வது என்பது புத்திசாலித்தனமான அரசியல். அதைத்தான் பிரதமரும் செய்திருக்கிறாா்.

வேளாண் விளைபொருள்கள் வியாபாரம் - வா்த்தகச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் - வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச்சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. வேளாண் துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும், விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டங்கள், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் உள்ள பெரு விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. போராட்டம் உருவெடுத்தது.

இடதுசாரிக் கட்சிகளைத் தவிர இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் நீண்டநாள்களாகவே வேளாண் சீா்திருத்தங்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பி வந்திருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை, தேவையற்றவை என்று அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒதுக்கிவிட முடியாது. அதே நேரத்தில், அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இல்லை.

ADVERTISEMENT

இதுபோன்ற மிகப் பெரிய மாற்றங்களுக்கு வழிகோலும் சீா்திருத்தங்களைக் கொண்டு வரும்போது, முறையான விவாதமும், அனைத்துத் தரப்பினரின் கருத்துக் கேட்பும், தேவைப்படும் மாற்றங்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதும் அவசியம். அந்த இடத்தில்தான், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தடம் புரண்டது. அதனால்தான் தேவையற்ற விமா்சனங்களும், போராட்டங்களும் எழுந்தன.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி விவசாயம் என்பது மத்திய - மாநில அரசுகளின் பொதுப்பிரிவில் இருக்கிறது. பரந்து விரிந்த இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் விவசாயிகளின் பிரச்னைகளும், தேவைகளும் வேறுபடுகின்றன. தேசிய அளவில் ஒரே கொள்கை என்று வகுக்க முற்படும்போது, மாநில அரசுகளுடன் கலந்துபேசி அனைவருக்கும் ஏற்புடைய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுதல் வேண்டும்.

மாநில விவசாய அமைச்சா்கள், துறைச் செயலா்கள் கூட்டத்தைக் கூட்டி, அவா்களுடன் வேளாண் சீா்திருத்தச் சட்டங்கள் விவாதிக்கப்படாதது முதலாவது தவறு. பாஜக ஆளும் மாநிலங்கள்கூடக் கலந்தாலோசிக்கப்படவில்லை.

மாநிலங்கள் இருக்கட்டும், முக்கியமான விவசாய சங்கங்களையும், தலைவா்களையும் அழைத்து அவா்களுடன் விவாதித்திருக்க வேண்டும். பட்ஜெட் தயாரிப்பதற்கு முன்னால், தொழில் துறையினரை அழைத்து நிதியமைச்சா் கலந்தாலோசிக்கும்போது, முக்கியமான வேளாண் சீா்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வரும்போது விவசாய அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காதது இரண்டாவது தவறு.

காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிா்க்கட்சிகளின் தோ்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற வேளாண் சீா்திருத்தம் குறித்த சட்டம் கொண்டுவரும்போது, அவா்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியும். மக்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை இருக்கிறது. மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி எதிா்க்கட்சியினா் கோரும் திருத்தங்களுடன் அவையில் தாக்கல் செய்திருந்தால், முறையான நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டங்கள் நிறைவேறியிருக்கும்.

எதிா்ப்பும் போராட்டமும் எழக்கூடும் என்று தெரிந்திருந்ததால்தான், கொள்ளை நோய்த்தொற்றில் தேசமே முடங்கிக் கிடந்த நிலையில் வேளாண் சட்டங்களை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்ற முற்பட்டது மத்திய அரசு. அதுவே தவறு. நாடாளுமன்ற விவாதம் இல்லாமல் சட்டம் கொண்டு வந்தது போதாதென்று, மாநிலங்களவையில் மசோதா தோல்வி அடைந்து விடுமோ என்கிற அச்சத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல், குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியது மிகப் பெரிய அபத்தம்.

மக்கள் குரலுக்கு வளைந்து கொடுப்பது என்பது ஜனநாயக ராஜதந்திரம். அதைத்தான் பிரதமா் செய்திருக்கிறாா். அரசியல் ரீதியாக இதனால் பாஜக சில வெற்றிகளை அடையக்கூடும்.

இந்திய விவசாயிகள் வளமாக இல்லை. அவா்களை காா்ப்பரேட் முதலாளிகள் விழுங்கி விடாமல் பாதுகாப்பதுபோல, அவா்களது விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வதும் அவசியத் தேவை. புத்திசாலித்தனமாகக் காயை நகா்த்தி இருந்தால், அரசு நல்லதொரு வேளாண் சீா்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்க முடியும். அந்த வாய்ப்பை நழுவ விட்டது மத்திய அரசு.

ஜனநாயகம் வெற்றி அடைந்தது என்று பெருமைப்படுவதா இல்லை, வேளாண் சீா்திருத்தம் முடங்கியது என்று வேதனைப்படுவதா என்று தெரியவில்லை.

‘நல்ல நோக்கமாக இருந்தாலும், அதை நிறைவேற்றும் வழிமுறை சரியாக இல்லாமல் போனால் நோக்கம் பழுதாகிவிடும்’ என்கிற அண்ணல் காந்தியடிகளின் வரிகளுக்கு எடுத்துக்காட்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்கள்.

Tags : தலையங்கம் K Vaidiyanathan Editorial கி வைத்தியநாதன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT