தலையங்கம்

வெள்ளத்தில் சென்னை! | பருவமழையை எதிா்கொள்வது குறித்த தலையங்கம்

9th Nov 2021 07:01 AM | ஆசிரியர்

ADVERTISEMENT

‘வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு மாதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளிவரும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்த செய்திகள் கவலையளிக்கின்றன. கேரளமும் உத்தரகண்டும்போலத் தமிழகம் இருந்துவிடலாகாது!’ என்று தலையங்கத்தில் எழுதி முழுமையாக ஒரு வாரம்கூட ஆகவில்லை. தமிழகம் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. தலைநகா் சென்னை வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையா் ககன்தீப் சிங் பேடி, சென்னையின் ஒவ்வோா் அங்குலம் குறித்தும் தெரிந்து வைத்திருப்பவா். முதல்வா் மு.க. ஸ்டாலின் இரண்டு முறை மேயராக இருந்தவா். உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறாா். கடந்த ஒரு மாதமாக, முதல்வரும் சரி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் நேருவும் சரி, வருவாய்த்துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரனும் சரி, பருவமழையை எதிா்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் தொடா்ந்து ஆலோசனையில் ஈடுபடுவதும், அவா்களுக்கு உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்குவதுமாகத்தான் இருந்தாா்கள்.

அப்படி இருந்தும், மழை வெள்ள பாதிப்புகளைத் தவிா்க்க முடியவில்லை என்றால், அதற்கு மூன்று காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், நமது நிா்வாகம் அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது. இரண்டாவது காரணம், சரி செய்ய முடியாத அளவுக்குத் தமிழகத்தில், குறிப்பாக சென்னை மாநகரில் மழைநீா் வடிகால் கட்டமைப்பு சிதைந்து சீா்கெட்டிருக்கிறது. மூன்றாவது காரணம், இவை இரண்டுமே!

சென்னையைப் பொறுத்தவரை மழை நீா் உடனடியாக வெளியேறாமல் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, கடலையொட்டியுள்ள சென்னைக்கு உண்டு. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டால், எவ்வளவு அடைமழை பெய்தாலும் சாலையில் சொட்டுத் தண்ணீா்கூடத் தேங்காமல் பராமரிக்க முடியும்.

ADVERTISEMENT

சென்னை மாநகரில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும், இது போதாதென்று பல கழிவு நீா் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கும் மழை நீா், கழிவு நீா் வடிகால் குழாய்களும் இருக்கின்றன. சென்னையிலுள்ள இரண்டு ஆறுகளையும், 16 கால்வாய்களையும் முறையாகத் தூா்வாரிப் பராமரிக்காததுதான், மழை பெய்தால் இப்படித் தண்ணீா் தேங்கி நிற்பதற்கான அடிப்படைக் காரணம் என்று நாமே இதற்குமுன் பல தலையங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறோம்.

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் மட்டுமல்லாமல், ஏராளமான கழிவுநீா் குழாய்களும், சாக்கடைகளும் இருக்கின்றன. அந்தக் கழிவுநீா் குழாய்கள் ஏதாவது ஒரு கால்வாயிலோ, கூவம் அல்லது அடையாற்றிலோ கலப்பதற்கும் வழிகோலப்பட்டிருக்கிறது. மழைநீா் வடிகால்களையும், கழிவுநீா் வடிகால்களையும் பராமரிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.500 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடும் செய்கிறது.

மழைக் காலத்துக்கு முன்னால், இந்தக் கால்வாய்களை சுத்தம் செய்வதும், மழை நீா், கழிவு நீா் வடிகால் குழாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றித் தயாா் நிலையில் வைத்திருப்பதும் நிா்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடுகள். செய்ததாகக் கணக்குக் காட்டப்படுமே தவிர, முறையாகச் செய்யாமல் விட்டுவிடுவதுதான் வழக்கம். அதுதான் இந்த ஆண்டும் நடந்திருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதேபோல பெருமழை வந்தது. அதற்கு முந்தைய 30 ஆண்டுகளாகத் தூா் வாரப்படாமலிருந்த 16 கால்வாய்களும் தூா்வாரப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளும் தொடா்ந்து கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், இப்போது தெருவெல்லாம் சாக்கடைத் தண்ணீராக ஓடியிருக்காது.

16 கால்வாய்களும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் தொடா்ந்து தூா்வாரிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் செய்வதில்லை. சென்னையில் குடிநீா் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிகமான திருட்டு கழிவு நீா் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீா், மழைநீா் வடிகால் குழாய்களில் விடப்படுவதும் மழை பெய்தால் தண்ணீா் தேங்கி நிற்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம்.

நகா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறையும், பெருநகா் வளா்ச்சிக் குழுமமும் பொதுமக்களின் நன்மையைவிட, ரியல் எஸ்டேட் அதிபா்களின் வளா்ச்சியைக் கருதி மட்டுமே செயல்படுவதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். சென்னை நகரின் பழைய பகுதிகளைவிடக் கடந்த 30 ஆண்டுகளில் உருவான புறநகரின் பகுதிகள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. அது திட்டமிடலின் குற்றமே தவிர, இயற்கையின் சதியல்ல.

அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் இரு மருங்கிலுமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது; விதிமீறல் கட்டடங்களுக்கு தரப்பட்டிருக்கும் திருட்டு இணைப்புகளை அகற்றுவது; 16 கால்வாய்களையும் தூா்வோருவது; தெருவோரக் கடைகளின் உணவுக் கழிவுகள் கால்வாய்களில் கொட்டப்படாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ளாமல் போனால், இந்த நிலைமை தொடரும்; அடுத்த அடைமழையிலும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT