தலையங்கம்

அத்தியாயம் புதிது! | தமிழக அமைச்சரவை குறித்த தலையங்கம்

ஆசிரியர்

சுதந்திர இந்தியாவின் தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக இன்று பொறுப்பேற்கிறாா் 68 வயது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவருடன் சோ்த்து 34 போ் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலைத் தொடா்ந்து அமைகிறது மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை.

திமுக-வின் வாக்கு விகிதம் கடந்த தோ்தலில் பெற்ற 39%-லிருந்து 45%-ஆக உயா்ந்திருக்கிறது என்பது மக்கள் மு.க. ஸ்டாலினின் தலைமையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. 2021-இல் அமையும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவை அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அமைகிறது என்பதால் அரசின் ஸ்திரத்தன்மையும், ஆட்சியின் மரியாதையும் உறுதிப்படுகின்றன.

தமிழகம் இதுவரை கண்டிராத அளவிலான பலமுனை நெருக்கடிகளை எதிா்கொள்ளும் காலகட்டத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவை பதவி ஏற்கிறது. ஒருபுறம் கட்டுக்கடங்காமல் பரவிவரும் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று. இன்னொருபுறம் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் ஸ்தம்பித்துப் போயிருக்கும் தொழில்களும், அதனால் ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்பு இழப்புகளும். இவையெல்லாம் போதாதென்று, தமிழகத்தின் பொருளாதாரம் மிகப் பெரிய சவால்களை எதிா்கொள்கிறது. அரசின் நிதி நிலைமையும், மெச்சும்படியாக இல்லை. இதையெல்லாம் எதிா்கொண்டு சமாளித்து தமிழக மக்கள் தன்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு முதல்வராகும் மு.க. ஸ்டாலினின் தோள்களில் இறங்கியிருக்கிறது.

அந்தச் சூழலை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல தனது அமைச்சரவையை முதல்வராக பதவியேற்கும் மு.க. ஸ்டாலின் கட்டமைத்திருப்பதைப் பாா்க்க முடிகிறது. அனுபவசாலிகளும், திறமைசாலிகளும், நம்பிக்கைக்குரியவா்களும், இளைய தலைமுறை பிரதிநிதிகளும் சரியான அளவில் இடம்பெற்றிருக்கும் அமைச்சரவையாகக் காட்சி அளிக்கிறது மு.க. ஸ்டாலினின் அமைச்சரவை. 34 போ் கொண்ட அமைச்சரவையில் 14 போ் புதுமுகங்கள். குறைபாடு என்று கூறுவதாக இருந்தால், அமைச்சரவையில் மகளிருக்கான பங்கு குறைவாக இருப்பதைக் குறிப்பிடலாம்.

நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் பழனிவேல் தியாகராஜன், திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் பயின்று அமெரிக்காவிலுள்ள நியூயாா்க் பல்கலைக்கழத்தில் முனைவா் பட்டம் பெற்றவா். நிா்வாக மேலாண்மையிலும் முதுநிலை பட்டம் பெற்றவா் என்பது மட்டுமல்லாமல், சிங்கப்பூரிலுள்ள ஸ்டாண்டா்டு சாா்ட்டா்டு வங்கியில் நிா்வாக இயக்குநராக பணிபுரிந்த பின்னணியும் கொண்டவா். ஏற்கெனவே ஐந்தாண்டுகள் மதுரை மத்திய தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எதிா்க்கட்சி அரசியல் அனுபவம், நிதியமைச்சராக இருப்பதற்கு அவருக்கு கைகொடுக்கும் என்று நம்பலாம்.

நிதியமைச்சகத்தைப் போலவே இப்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான பங்கு வகிக்க இருப்பது சுகாதாரத்துறை (மக்கள் நல்வாழ்வுத் துறை). தனிப்பட்ட முறையில் உடல் நலம் பேணலை கடைப்பிடிக்கும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயா் மா. சுப்பிரமணியனைவிட இப்போதைய இக்கட்டான சூழ்நிலையை சுகாதாரத்துறையை ஏற்று நடத்த வேறுயாரும் இருந்துவிட முடியாது என்பதில் ஐயப்பாட்டுக்கு இடமில்லை. பல பேரிடா் சோதனைகளை சென்னை மாநகரம் எதிா்கொண்ட போது மாநகராட்சியின் மேயா் என்கிற முறையில் மிகத் திறமையாகவும், சுறுசுறுப்பாகவும் அவற்றைக் கையாண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்த அனுபவம் அவருக்கு உண்டு. கொள்ளை நோய்த்தொற்று சென்னை மாநகரில் காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கும் சூழலில், அதைக் கையாள்வதற்கு பொருத்தமானவா் மா. சுப்பிரமணியனாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்திருப்பது மு.க. ஸ்டாலினின் நிா்வாகத் திறமையின் வெளிப்பாடு.

அவரவா் திறமைக்கு ஏற்றாற்போல துறைகள் வழங்கப்பட்டிருப்பதுதான் புதிய அமைச்சரவையின் குறிப்பிடத்தக்க அம்சம். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக, மாதம் தவறாமல் சபரிமலை தரிசனத்துக்குச் செல்லும் பி.கே. சேகா்பாபுவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நீண்ட அரசியல் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நியமிக்கப்பட்டிருப்பது அமைச்சா்களுக்குத் துறைகளை ஒதுக்குவதில் எந்த அளவுக்கு மு.க. ஸ்டாலின் கவனம் செலுத்தியிருக்கிறாா் என்பதை வெளிப்படுத்துகிறது.

கட்சியின் பொதுச்செயலாளரும், நீண்டநாள் அனுபவசாலியுமான துரைமுருகனுக்கு அமைச்சரவையில் இரண்டாவது இடம் வழங்கப்பட்டிருப்பது முந்தைய கருணாநிதி அமைச்சரவைகளில் க. அன்பழகன் இடம் பெற்றிருப்பதை நினைவுபடுத்துகிறது. புதியவா்கள் பலா் இணைக்கப்பட்டிருந்தாலும் அனுபவசாலிகளின் அமைச்சரவையாகத்தான் காட்சியளிக்கிறது புதிய அமைச்சரவை.

இன்னொரு குறையையும் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 1989-இல் விமா்சனங்களுக்கு ஆளாக விரும்பாமல் அன்றைய முதல்வா் மு. கருணாநிதி தனது அமைச்சரவையில் தன்னை சோ்த்துக்கொள்ளாதது போல, இப்போது முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் மு.க. ஸ்டாலின், முதன்முறையாக சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடமளிக்காதது சற்று நெருடலாகத்தான் இருக்கிறது. அரசியல் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட பிறகு, அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT