தலையங்கம்

நடைமுறைக்கு ஒவ்வாது! | வேலையின்மை குறித்த தலையங்கம்

9th Mar 2021 01:04 AM | ஆசிரியர்

ADVERTISEMENT


ஆறுதலான சில புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கின்றன. பொது முடக்கத்திற்கு முந்தைய நிலைமைக்கு வேலையின்மை விகிதம் வந்திருக்கிறது என்று இந்தியப் பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும்கூட, வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்திருக்கிறதா என்றால் இல்லை. அதற்குப் பல காரணங்களை மையம் முன்வைக்கிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு விகிதம் 2019 - 20-இல் 39.4% -ஆக இருந்தது, கடந்த மாதம் 37.7%-ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், வேலையின்மை விகிதம் பிப்ரவரி 2020-இல் இருந்த 7.8%-லிருந்து, இப்போது 6.9%-ஆகக் குறைந்து நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. 

வேலைவாய்ப்புத் தேடி வெளிமாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் பொது முடக்கத்தின் காரணமாக சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சில மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மையை அதிகரித்திருக்கிறது என்றால், சில மாநிலங்களில் வேலை செய்ய தொழிலாளர்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. 

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பிற மாநிலங்களிலுள்ள தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் சென்ற பலர் அங்கேயே தங்கிவிட்டனர். அதன் விளைவாக, தொழில்வளம் உள்ள மாநிலங்கள் தங்களது முழுமையான உற்பத்தித் திறனை எட்ட முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் ஹரியாணா மாநிலம் கொண்டுவந்திருக்கும் உள்ளூர்வாசிகள் வேலைவாய்ப்பு சட்டத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதால் அதை எதிர்கொள்ளவும், தங்களது மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும் இதுபோன்ற சட்டங்கள் தேவை என்கிற ஹரியாணா அரசின் வாதம் அரசியல் சாசன உணர்வுக்கு எதிரானது என்பதால் அது விவாதப் பொருளாகியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், "உள்ளூர்வாசிகள் வேலைவாய்ப்பு மசோதா 2020' ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஹரியாணாவிலுள்ள எல்லா நிறுவனங்களும், ரூ.50,000-க்கும் குறைவான மாத ஊதியம் வழங்கும் வேலைகளில் 75% ஹரியாணா மாநிலத்தில் பிறந்தவர்களுக்கோ அல்லது குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அந்த மாநிலத்தில் வாழ்பவர்களுக்கோ ஒதுக்க வேண்டும். 

திறன்சார்ந்த தேர்ச்சி பெற்ற உள்ளூர் தொழிலாளர்கள் இந்த மசோதாவால் வேலைவாய்ப்பு பெறுவதால் அது நேரிடையாகவும் மறைமுகமாகவும் தனியார் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என்பது ஹரியாணா அரசின் வாதம். இதன் மூலம் வேலையில்லாத மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதும் அரசின் நோக்கம். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹரியாணா ஆளுங்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் துஷ்யந்த் செvதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி, உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. ஹரியாணா கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவதற்கு அந்தக் கட்சி விதித்த நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. 

கொள்ளை நோய்த்தொற்றின் கடுமை அதிகரித்துக் கொண்டிருந்த கடந்த ஜூலை மாதம், அவசரச் சட்டம் பிறப்பித்த மாநில அரசு இந்த மசோதாவைக் கொண்டுவர முற்பட்டது. ஆனால், ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா அதற்கு அனுமதி வழங்காமல் அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவிட்டார். அக்டோபரில் முடக்கப்பட்ட அந்த அவசரச் சட்டம், ஒருமாதம் கழித்து சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டும் விட்டது. 

உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை என்பது இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வாழவும், செல்லவும், வேலை பார்க்கவும் அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது. யார் வேண்டுமானாலும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை பார்ப்பதற்கு மட்டுமல்ல, வியாபாரமோ, தொழிலோ நடத்துவதற்குகான உரிமையையும் அரசியல் சாசனம் வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஹரியாணா அரசின் இந்தச் சட்டம் நீதிமன்ற அங்கீகாரம் பெற வாய்ப்பில்லை. 

ஹரியாணா அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தில் அரசியல்  சாசன முரண் குறித்த கேள்விகளுக்கு மாநில அரசிடம் தகுந்த பதில் இல்லை. இதேபோன்றதொரு சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை இயற்றியபோது, உயர்நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை ஹரியாணா அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

தென்னிந்திய மாநிலங்களிலும், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் திறன்சாரா தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. இந்த மாநிலங்களைச் சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்களுக்கான வேலைவாய்ப்பு ஹரியாணா, பிகார் போன்ற மாநிலங்களில் இருக்கிறது. 

ஹரியாணாவைப் பொருத்தவரை, முதலீட்டுக்குக் குறைவில்லை. மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளும், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனங்களும் அதிகமாகவே இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர்.

உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியிலும், தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் விதத்தில் கல்வித் துறை மேம்பாட்டிலும் கவனம் செலுத்தாமல், "இட ஒதுக்கீடு' அரசியலில் ஈடுபடும் பிற்போக்குத்தனத்துக்கு ஹரியாணா பலியாகக் கூடாது. ஹரியாணா மட்டுமல்ல, இந்தியாவின் ஏனைய மாநிலங்களும்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT