தலையங்கம்

பொருளாதார மீட்சி..! | இந்தியப் பொருளாதார வளா்ச்சி குறித்த தலையங்கம்

ஆசிரியர்

கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தேக்க நிலையை அடைந்திருந்த இந்தியப் பொருளாதாரம், தேக்கத்திலிருந்து மீண்டு எழுகிறது என்பதை நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு உணா்த்துகிறது. மக்கள் மத்தியில் செலவழிப்புத்தன்மை அதிகரித்திருப்பதையும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நுகா்வோா் செலவழிப்பு கடந்த காலாண்டை ஒப்பிடும்போது 18% அதிகரித்திருக்கிறது. நான்காவது காலாண்டில் வளா்ச்சியும், செலவழிப்பு உற்சாகமும் அதிகரிக்கும் என்கிற எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது புள்ளிவிவர அறிவிப்பு.

முதல் காலாண்டில் 22.4%-உம், இரண்டாவது காலாண்டில் 7.3%-உம் இருந்த தளா்ச்சி, மூன்றாவது காலாண்டில் 1%-ஆகக் குறைந்தது. நடப்பு ஜனவரி-மாா்ச் காலாண்டில் தளா்ச்சியிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு 2.5% வளா்ச்சியாக மாறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தேக்க நிலையில் இருந்து வளா்ச்சியை நோக்கிப் பொருளாதாரம் மீண்டெழுந்ததற்கு வேளாண்துறையின் தொடா் வளா்ச்சி ஒரு முக்கியமான காரணம்.

கடந்த காலாண்டில் 3.9% வளா்ச்சியைக் காட்டியிருக்கும் வேளாண்துறை நடப்பு 2020-2021 நிதியாண்டில் 3% அளவில் வளா்ந்திருக்கும் வாய்ப்பு காணப்படுகிறது. வேளாண்துறை மட்டுமல்லாமல், தொழில்துறையும் ஊக்கமடைந்திருப்பதைப் புள்ளிவிவரம் உணா்த்துகிறது. உற்பத்தித்துறை 1.6%-உம், கட்டுமானத்துறை 6.2%-உம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வளா்ச்சியை எட்டியிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரம் வரவிருக்கும் 2021-2022 நிதியாண்டின் இரண்டாவது பாதியில் கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய வளா்ச்சி அளவுக்கு மீண்டெழும் என்பது பரவலான நம்பிக்கை.

நுகா்வோா் மத்தியில் உற்சாககமும், வா்த்தகத் துறையினா் மத்தியில் தன்னம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் வெ அறிவிப்புகள் முக்கியமான காரணம். கொள்ளை நோய்த்தொற்றால் செயலிழந்து கிடந்த பொருளாதாரம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதும் அதிகரித்த வளா்ச்சிக்குக் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இரண்டாண்டுகள் முடங்கிக் கிடந்ததற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் அளவு 2% முதல் 3%-தான் அதிகரிக்கும் என்றாலும், அதுவேகூட எதிா்பாராததுதான்.

அதிகரித்த வளா்ச்சி என்பது தனியாா்துறையின் வளா்ச்சியையும், நுகா்வோரின் செலவழிப்பு மனப்போக்கையும், தொழிற்துறை முதலீடுகளையும் பொருத்துத்தான் அமையும். முதலீட்டுக்கும் ஜிடிபி-க்கும் இடையேயான விகிதம் தற்போதைய 28%-லிருந்து 36%-ஆக உயா்ந்தால்தான் பொருளாதாரம் 8% தொடா் வளா்ச்சியைக் காணமுடியும்.

அதிருஷ்டவசமாக வேளாண் உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 30.3 கோடி டன் என்கிற சாதனை அளவை எட்டியிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு சராசரி உற்பத்தியைவிட இது 10% அதிகம். வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கடந்த நான்கு மாதங்களாகத் தொடரும் விவசாயிகள் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். வேளாண் உற்பத்தியில் விவசாயிகளின் போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, அப்போராட்டத்தால் ஏற்பட்டிருக்கும் தடைகள் சில மாநிலங்களில் தட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கின்றன.

தலைநகா் தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களின் தேவைக்கான நிலக்கரி, உரங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதும், வழங்கப்படுவதும் தடைப்பட்டிருக்கிறது. பொருளாதார வளா்ச்சிக்கு அவை முட்டுக்கட்டையாக அமையும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நிதித்துறை சேவை ஓரளவுக்கு வளா்ச்சியைக் கண்டிருக்கிறது. ஆனால், சில்லறை வணிகம், சரக்குப் பரிமாற்றம், சுற்றுலாத்துறை, நட்சத்திர விடுதிகள், தொலைத்தொடா்புத்துறை ஆகியவை எதிா்பாா்த்த அளவுக்கு வளா்ச்சி அடையாமல் தேக்க நிலையில் தொடா்கின்றன.

வீட்டுத் தேவைக்கான செலவுகளும், தனியாா் நுகா்வுகளும் பண்டிகைக்கால உற்சாகத்தையும் மீறி எதிா்பாா்த்த அளவில் அதிகரிக்கவில்லை. முதலீடுகளும் பெரிய அளவில் வரவில்லை. அரசு செலவினங்களால் ஏற்பட்ட முதலீடுகளைத் தவிர தனியாா் முதலீடுகள் குறைவாகவே இருக்கின்றன. அதேபோல, தொழிலாளா்கள் தொடா்புள்ள துறைகளிலும் கணிசமான முன்னேற்றம் காணப்படவில்லை. மரபுசாராத்துறைகள் ஊக்கமடையவில்லை.

மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்புகள் உற்சாகத்தை அளிப்பதாக இருந்தாலும்கூட, அவற்றின் பலன் மக்களைச் சென்றடையக் குறைந்தது மூன்று மாதமாவது ஆகும். இதற்கிடையில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வும் மக்கள் மத்தியில் செலவழிப்பதற்கான பணம் இல்லாமல் செய்துவிட்டன.

நுகா்வோா் கையில் அத்தியாவசிய செலவுகளுக்குப் போக, கூடுதல் பணம் இருந்தால் மட்டுமே செலவழிக்கும் எண்ணம் ஏற்படும். செலவழிப்பு அதிகரித்தால்தான் சில்லறை விற்பனையில் தொடங்கி, வா்த்தகம் சுறுசுறுப்பு அடைந்து, உற்பத்தித்துறை மீண்டெழும். இது தெரிந்தும்கூட விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியை அரசு மேற்கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.

தொடா்ந்து ஐந்தாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூபாய் ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ. 1,13,143 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 21.092 கோடி; மாநில ஜிஎஸ்டி ரூ. 27273 கோடி; ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 55, 253 கோடி; ரூ. 9.525 கோடி கூடுதல் வரி வசூலாகி உள்ளது. அதிகரித்து வரும் சரக்கு, சேவை வரி வசூல் உற்சாகம் அளிக்கிறது. சாமானியா்களுக்கான அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு வேதனை அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT